இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஜெனீவாவில் அரசுக்குத் தொடர் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டுவரும் நிலையில் அரசுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்த இணங்கியமை தமிழ் மக்களுக்குச் செய்த துரோகம் என்று குற்றஞ்சாட்டி உள்ளார் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். யாழ். நகரில் நேற்றுச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ஒவ்வொரு தேர்தலிலும் தமிழரின் சுயநிர்ணய உரிமை மற்றும் தமிழர் தாயகம் என்பவற்றைக் கூறித்தான் கூட்டமைப்பினர் வாக்குகளைப் பெற்றனர். அதன் பின்னர் இப்போது அரசுடன் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண இணங்குவது என்பது துரோகம் என்றார் அவர்.
தமது கட்சியின் அடிப்படையை மீறுவதை தனது கட்சி ஏற்காது என்பதால் 13ஆவது திருத்தத்தை ஏற்க முடியாது என்று கூறிய தலைவர்கள் அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோருடன் சம்பந்தனும் இருந்தார். இன்று அவரே அரசுடன் அது பற்றிப் பேசுகிறார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் எந்த அடிப்படையில் இந்தப் பேச்சு நடத்தப்படுகிறது? மாகாணசபை ஒற்றை ஆட்சியின் கீழ் அடங்கிய விடயம்தான். பொலிஸ் காணி அதிகாரம் இல்லாமல் பேசுவதில் பொருள் இல்லை. மாகாண சபையில் முதலமைச்சருக்கோ உறுப்பினர்களுக்கோ எந்த அதிகாரமும் கிடையாது. அத்தனை அதிகாரங்களும் ஆளுநர் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
நடக்க இருக்கும் மாகாண சபைத் தேர்தலை நாங்கள் நிராகரிப்போம். தேர்தல் மூலம் மக்களின் தனித்துவமும் சுய இறைமையும் இழக்கப்பட்டுவிடும். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மாகாண சபைத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்றார்.



0 Responses to கூட்டமைப்பின் நயவஞ்சக செயலுக்கு கஜேந்திரகுமார் கோபம்