Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இமானுவல் அடிகளார் இந்தியாவுக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டது அக்கிரமம் என சீமான் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் துபாயில் இருந்து உரிய பயண ஆவணத்துடன் சென்னைக்கு வந்த உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவல் அடிகளாரை, மத்திய அரசின் குடியேற்றத் துறையினர், விமானத்தில் இருந்து இறங்க விடாமல், அதே விமானத்தில் திருப்பி அனுப்பியதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஈழத் தமிழ் மக்களின் இன்னலைத் துடைக்கவும், உலக நாடுகளிடையே ஈழத் தமிழினத்தின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் சட்டப்பூர்வ அமைப்பான உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவல் அடிகளாரை, விமானத்தில் இருந்து இறங்க அனுமதிக்காத மத்திய அரசின் குடியேற்ற அதிகாரிகள், அப்படியே திருப்பி அனுப்பியுள்ளது மனிதாபிமானமற்ற, சட்டத்திற்குப் புறம்பான அக்கிரமச் செயலாகும்.

77 வயதான மதிப்புமிக்க பெருமகனை திருப்பி அனுப்பியதன் மூலம், உலகத் தமிழினத்தை மீண்டும் ஒரு முறை இந்திய மத்திய அரசு அவமதித்துள்ளது. இச்செயலை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்தியாவிற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து செல்லத்தக்க பயண அனுமதியை (Multiple Entry Visa) இம்மானுவல் அடிகளார் வைத்திருந்தும், அவரிடம் எந்த ஒரு காரணத்தையும் கூறாமல், வந்த விமானத்திலேயே மீண்டும் துபாய்க்கு திருப்பி அனுப்பியுள்ளது இந்தியக் குடியேற்றத் துறை.

எப்படி 80 வயதிற்கு அதிகமான பார்வதி அம்மாள் சிகிச்சைக்காக சென்னைக்கு வந்தபோது, எவ்வித காரணமும் கூறாமல், விமானத்தில் இருந்து இறங்கக் கூட அனுமதிக்காமால், மனிதாபிமானமற்று திருப்பி அனுப்பியதோ, அதேபோல் உரிய பயண ஆவணங்களுடன் வந்திருந்த இம்மானுவல் அடிகளாரையும் திருப்பி அனுப்பியுள்ளது.

தமிழ் மக்களை அவமானப்படுத்த வேண்டும் என்கிற திட்டமிட்ட நோக்குடன் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் இந்தியக் குடியேற்றத் துறை தொடர்ந்து செயல்ப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக நாம் விசாரித்ததில், அவர் முன்பொருமுறை இந்தியா வந்திருந்தபோது, அனுமதிக்கப்பட்ட காலத்திற்கும் அதிகமாக இங்கு தங்கிவிட்டார் என்றும், அதன்படி அவர் இன்னும் 3 ஆண்டுகளுக்கு இந்தியாவிற்கு நுழைய அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.

இன்னும் 3 ஆண்டுகளுக்கு இந்தியாவில் நுழைய அவருக்கு அனுமதி இல்லையென்றால், அவருக்கு லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தியா வந்து செல்லக் கூடிய விசா வழங்கியது ஏன்? எனவே இது மத்திய அரசின் தூண்டுதலால் செய்யப்பட்ட திட்டமிட்ட அவமதிப்பாகும்.

ஈழத் தமிழர்கள் ஒன்றே முக்கால் இலட்சம் பேரை இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சவை உலக நாடுகள் தூற்றுகின்றன.

நமது நாட்டு மீனவர்கள் 540 பேர் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர், இன்றளவும் நடுக்கடலி்ல் வைத்து தாக்கப்படுகின்றனர். ஆனால், இந்திய மத்திய அரசோ, ராஜபக்சவிற்கு அழைப்பு விடுத்து, சிகப்புக் கம்பளம் விரித்து, அரசு விருந்தினராக வைத்துக் கொண்டாடி புளங்காகிதம் அடைகிறது.

அதே நேரத்தில், கடும் துயரத்தில் வாழ்ந்துவரும் ஈழத் தமிழினத்திற்கு பெருமனது கொண்டு தொண்டு செய்துவரும் மதிப்புமிக்கப் பெருமகனார் இம்மானுவல் அடிகளார் போன்றவர்களை அவமதித்து திருப்பி அனுப்பி வைக்கிறது. தன்னை ஜனநாயக நாடு என்று அழைத்துக்கொள்ளும் இந்தியாவிற்கு சற்றும் பொருந்ததாத, நாகரீகமற்ற நடவடிக்கைகளாகும் இது.

ஈழத் தமிழினத்தை அழிக்க ராஜபக்சவுடன் கைகோர்த்துச் செயல்பட்ட மத்திய காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு, தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழர்கள் பாடம் புகட்டிய பிறகும் அது திருந்தவில்லை. தமிழினத்திற்கு எதிரான அதன் போக்கு மாறவில்லை, தமிழினத்தை வஞ்சிக்கும் எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறது என்பதற்கு இந்த நிகழ்வு அத்தாட்சியாகும்.

எனவே காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும், மீண்டும் தமிழர்கள் பாடம் புகட்ட வேண்டும். சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களித்து, அதற்கு மாபெரும் தோல்வியைத் தந்ததுபோல், நடைபெறவுள்ள தமிழக உள்ளாட்சித் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் அனைவருக்கு எதிராகவும் தமிழின மக்கள் வாக்களித்து, அதனை தமிழ்நாட்டிலிருந்து வேரோடும் வேரடி மண்ணோடும் கெல்லி எறிய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது என்றும் அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to இமானுவல் அடிகளாரை திருப்பியனுப்பியது அக்கிரமம்: சீமான்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com