வன்னியில் வாழ்வாதாரங்களை இழந்து இடைத்தங்கல் கொட்டில்களில் அல்லல்படும் எமது மக்களது அவலத்தை எண்ணிப் பார்த்து, அவர்களின் வாழ்வாதரத்தை வழமை நிலைக்கு கொண்டுவர நாம் முன்னிற்க வேண்டும் என கனடியப் படைப்பாளிகள் கழகத்தின் தலைவர் தங்கவேலு நக்கீரன் தெரிவித்துள்ளார்.
சிங்கள அரசு வன்னி மக்களை கை விட்டுவிட்டது. புலம்பெயர் தமிழர்களே இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டுமெனவும் இவ்விழாவை ஆரம்பித்து வைத்துப் பேசிய அவர் கேட்டுக் கொண்டார்.
கனடியப் படைப்பாளிகள் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ்ப் புத்தாண்டு நிகழ்வு மற்றும் தைப்பொங்கல் நிகழ்வில், வன்னி மக்களுக்கு முன்மாதிரியாக மேற்கொள்ளப்பட்ட நிதி சேகரிப்பின் படி சுமார் 1,500 டொலர்கள் அந் நிகழ்விலேயே சேர்க்கப்பட்டு கனடா மறுவாழ்வுக் கழகத்திடம் வழங்கப்பட்டது.
நாங்கள் எங்களது நற்தினங்களை கொண்டாடும் போது அல்லலுறும் எமது மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவி புரிய வேண்டுமென்பதை இனித் தொடர்ச்சியாக கடைப்பிடிக்கும் முன்மாதிரியை தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தொடர்ந்து கடைப்பிடிக்கும் என அதன் தலைவர் திரு. நக்கீரன் தங்கவேலு தெரிவித்தார்.
கனடியத் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் இந்த விழாவை அனைத்துலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தோடு இணைந்து நடத்தியிருந்தது. இந்த நிகழ்வில் கனடாத் தமிழர் இணையம், கனடா மறுவாழ்வு அமைப்பு, தமிழர் தொலைக்காட்சி, நா.க. அரசு, தமிழர் புனர்வாழ்வுக்கழகம் என சகலரும் ஒன்றுபட்டுக் கலந்து சிறப்பித்தனர்.
அண்மையில் மறுவாழ்வு அமைப்பு கிளிநொச்சி மாவட்டக் கமக்காரர்களுக்கு 104 மண்வெட்டிகளை அன்பளிப்புச் செய்தது. ஆனைவிழுந்தான் ஊர் மக்களுக்கு 6 தையல் பொறிகள் அன்பளிப்புச் செய்தது. ஒரு மண்வெட்டி மற்றும் கத்திக்குச் செலவாகும் தொகை 15 டொலர்கள் மட்டுமே. எனவே இந்த உதவியை செய்ய எல்லோரும் முன்வர வேண்டும் என விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கு இணங்க மக்கள் இந்த நிதித் தொகையை வழங்கினர்.
இவ்விழாவிற்கு மார்க்கம் நகர மன்ற உறுப்பினர் லோகன் கணபதியும் அவரது துணைவியார் மருத்துவர் இராஜேஸ்வரி கணபதி அவர்களும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.
லோகன் கணபதி அவர்களது பெரு முயற்சி காரணமாகவே மார்க்கம் நகரமன்றம் தைத் திங்களை மரபுத் திங்களாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து ஏனைய நகர சபைகளும் இந்த அறிவித்தலை விடுத்து வருகின்றன.
சிங்கள அரசு வன்னி மக்களை கைவிட்டு விட்டது! புலம் பெயர் தமிழர்களே உதவ வேண்டும்: கனடியப் படைப்பாளிகள் கழகம்
பதிந்தவர்:
ஈழப்பிரியா
19 January 2012



0 Responses to சிங்கள அரசு வன்னி மக்களை கைவிட்டு விட்டது! புலம் பெயர் தமிழர்களே உதவ வேண்டும்: கனடியப் படைப்பாளிகள் கழகம்