சென்னை கலெக்டர் நகர் அருகே உள்ள பாடி புதுநகரைச் சேர்ந்தவர் கந்தன். இவரது மனைவி சந்தியா. இவர்களுக்கு மோனிஷா (6), பவதாரிணி (4) என்ற 2 மகள்கள் உள்ளனர். மோனிஷா 1ம் வகுப்பும், பவதாரிணி யு.கே.ஜி.யும் படித்து வருகிறார்கள்.
கணவன் மனைவி வேலைக்கு செல்லும் போது குழந்தைகளை கிழக்கு முகப்பேர் 4வது பிளாக்கில் உள்ள பாட்டி (கந்தனின் தாயார்) வீட்டில் விட்டுச் செல்வார்கள். அங்கிருந்தபடி 2 குழந்தைகளும் பள்ளிக்கு செல்லும். நேற்று மாலையில் சிறுமிகள் 2 பேரும் பாட்டி வீட்டில் வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டு இருந்தனர். அப்போது பவதாரிணி எழுதுவதற்கு பென்சில் கேட்டாள். கந்தனின் சகோதரி சுமதி ரூ. 10 கொடுத்து அருகில் உள்ள கடையில் பென்சில் வாங்கிக் கொள்ளுமாறு சொன்னார்.
மோனிஷா வீட்டு வாசலில் நின்று கொள்ள பவதாரிணி கடைக்கு பென்சில் வாங்கச் சென்றாள். நீண்ட நேரம் ஆகியும் சிறுமி பவதாரிணி திரும்பி வராததால் உறவினர்கள் பதட்டம் அடைந்தனர். மோனிஷாவிடம் தங்கை எங்கே என்று கேட்டதற்கு ஒரு அங்கிள் வந்து கூட்டிச் சென்றார் என்று கூறினாள்.
இதனால் சிறுமி கடத்தப்பட்டதாக அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே ஜெ.ஜெ.நகர் போலீசில் புகார் செய்தனர். வேலை முடிந்து வீடு திரும்பிய பெற்றோரும், போலீசாரும், அந்தப்பகுதி பொதுமக்களும் சிறுமியை முகப்பேர் ஜெ.ஜெ. நகர் முழுவதும் சல்லடை போட்டு தேடினார்கள். சிறுமி கிடைக்கவில்லை. விடிய விடிய தூங்காமல் இன்று காலை வரை தேடினார்கள்.
அப்போது காலை 6.30 மணி அளவில் கிழக்கு முகப்பேர் ஜெ.ஜெ. நகர் புகழேந்தி சாலையில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதில் இருந்து வாலிபர் ஒருவர் சிறுமி பவதாரிணியை கீழே இறக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்றார்.
இதை அங்கிருந்த டீக்கடைக்காரர் ஒருவரும், பெண்கள் சிலரும் பார்த்தனர். சிறுமி காணாமல் போன விவகாரம் அந்தப்பகுதி முழுவதும் பரவி இருந்ததால் அவர்கள் ஆட்டோவை செல்ல விடாமல் விரட்டிச் சென்றனர். பக்கத்து தெருவில் வைத்து மறித்து நிறுத்தி விசாரித்தனர். உடனே ஆட்டோவுடன் டிரைவர் தப்பி ஓடி விட்டார். ஆட்டோவில் இருந்த வாலிபரை பெண்கள் சரமாரியாக அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் விசாரணை நடத்தியதில் அவன் குழந்தையை கடத்தியவன் என்றும், பெயர் மணிகண்டன் (35) விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவன் என்றும் தெரிய வந்தது. அவனிடம் சிறுமியை கடத்தியது ஏன்? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். அவன் முன்னுக்குப்பின் முரணாக பதில் சொல்லி வருகிறான். கடத்தப்பட்ட சிறுமியின் உடல் முழுவதும் நகக் கீறல் காயங்கள் இருந்தன. உதடும் வீங்கிப்போய் காணப்பட்டது.
தலையில் குட்டியதால் காயங்கள் ஏற்பட்டு இருந்தது. பிடிபட்ட வாலிபர் சிறுமியை இரவு முழுவதும் வீட்டில் அடைத்து சித்ரவதை செய்து இருக்கிறான். சிறுமியால் எதுவும் சொல்லத் தெரியவில்லை. இரவில் சிறுமிக்கு சாப்பாடு கூட கொடுக்காமல் துன்புறுத்தி இருக்கிறான். மணிகண்டன் குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவனா? என்று விசாரணை நடக்கிறது.
குழந்தையை கடத்தியவனை விரட்டி பிடித்த பெண்கள்: சென்னையில் பரபரபப்பு சம்பவம்
பதிந்தவர்:
ஈழப்பிரியா
28 January 2012



0 Responses to குழந்தையை கடத்தியவனை விரட்டி பிடித்த பெண்கள்: சென்னையில் பரபரபப்பு சம்பவம்