Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கனடாவில் ஒன்ராரியோ மாநிலத்தில் உள்ள மார்க்கம் நகர சபையும், பிக்கரிங் நகர சபையும், தமிழர் திருநாளாம் தைத்திருநாளை தமிழர் மரபுரிமை நாளாக அங்கீகரித்துள்ளதோடு ஜனவரி 13,14,15ம் நாட்களில் தமிழர் மரபினை எடுத்தியம்பும் தமிழர் பண்பாட்டு நிகழ்வுகளை முன்னெடுப்பதையிட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கல்வி, கலாச்சார மற்றும் உடல்நலத்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

காலம் என்பது மாறாத அசைவு வேகத்தைக் கொண்டு அளவிடப்படுவது.நாம் வாழும் பூமியானது தன்னைத் தானே சுற்றி வருகிறது. அது ஒரு முழுச் சுற்றுச் சுற்ற எடுக்கும் காலத்தை ஒரு நாள் என்று அனைத்து மக்களும் எடுத்துக் கொள்கின்றனர். மேல் நாட்டார் நள்ளிரவில் தொடங்கி மறு நள்ளிரவு வரை ஒரு நாள் என்று எடுத்துக் கொள்கிறார்கள்.தமிழரும் இன்னும் பல ஆசிய நாட்டாரும் காலை (6 மணி- சூரிய உதயம்)தொடங்கி மறு காலை வரை ஒரு நாள் என்று எடுத்துக் கொள்கிறார்கள்.

பூமி தன்னைத் தானே சுற்றுவதோடு சூரியனையும் சுற்றி வருகிறது. பூமி சூரியனைச் சுற்றிவர எடுக்கும் காலத்தை அனைத்து மக்களும் ஒரு வருடம் என்று எடுத்துக் கொள்கிறார்கள். சர்வதேச மட்டத்தில் அரசியல் வர்த்தக உறவு ஒருங்கிணைவுக்காக ஆங்கில வருடம் ஜனவரி முதல் நாள் சர்வதேசப் புதுவருடமாகக் கொள்ளப்படுகிறது. ஆனால் வெவ்வேறு நாடுகள், வெவ்வேறு மத, இன மக்கள் தமது மரபுப்படி வெவ்வேறு பருவ காலநேரத்தில் வருடம் தொடங்கி முடிவதாகக் கொள்கிறார்கள். முஸ்லிம் மக்கள் தமது மத அடிப்படையில் தமது ஆண்டுத் தொடக்கத்தை கைக்கொள்கிறார்கள். இந்து மத மக்கள் சித்திரை மாதத்தை தமது முதல் மாதமாகக் கொள்கிறார்கள்.ஆனால் தமிழ் மக்கள் என்று கூறும் போது அவர்கள் பல்வேறு மதத்தைப் பின்பற்றுகிறார்கள். ஆனாலும் அவர்கள் தமக்கென ஒரு பொதுவான கலாச்சார அடிப்படையில் ஒரே தமிழ் மொழியைப் பேசுகின்றவர்களாக வாழ்கிறார்கள்.

இவ்வகையில் தமிழ்மக்களின் புது வருட ஆரம்பம் எது?

இதைப்பற்றி இந்தியாவில் தமிழகத்தில் கூடி ஆராய்ந்த தமிழ் அறிஞர்கள் பண்டிதர்கள் சான்றோர்கள் தமிழரின் புத்தாண்டு தை மாதம் முதல் தேதி தான் என்று 1921 ம் ஆண்டு அறிவித்தார்கள். அதே போல் மறுபடியும் 1937 ம் ஆண்டிலும் கூடி ஆராய்ந்த தமிழ் அறிஞர்கள் அதை உறுதிப் படுத்தினார்கள்.தமிழ் ஈழத்தில் நடைமுறை அரசொன்று இருந்தபோது அதையே அவர்களும் நடைமுறைப் படுத்தினார்கள்.

1971 ல் தமிழக அரசும் அதைச் சட்டமாக்கி நடைமுறைப் படுத்தியது.சர்வ தேசத்தின் பரிணாம வளர்ச்சி மாற்றங்களுக்கேற்ப மதவித்தியாசத்தைப் புறம்தள்ளி ஒரே இனம்,ஒரே தமிழ்க் கலாச்சார இனம், ஒரே மொழி பேசுகின்ற இனம் என்ற வகையில் ஒன்றுபட்டு நிற்கவேண்டிய ஒரு பூகோளதேவை கருதி அனைத்து மத தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தமிழ் வருடப் பிறப்பாக தை மாத முதல் நாளையே கைக்கொள்ள வேண்டுமென்பதே முடிந்த முடிவாகும்.

தனிப்பட்ட மதத்தவர்கள் தத்தம் மத சார்பான வருடத்தையும் கொண்டாடுவதில் தவறில்லை. பூமியின் சமரேகைக்கு வடக்கே 23 1/2 பாகைக்கும் தெற்கே 23 1/2 பாகைக்கும் இடையில் தான் சூரிய அசைவு இருக்கிறது.பூமியில் பெரும்பாலான தரைப்பிரதேசம் வடபகுதியிலேயே இருப்பதால் அங்கு வாழும் மக்கள் சூரியன் வடதிசை நோக்கி அசையத் தொடங்குவதை மகிழ்ச்சியோடு வரவேற்பது இயல்பானதே.அப்படிப் பார்த்தால் தமிழர் தைமாதப் பிறப்பை அதாவது சூரியனின் அசைவு தென் முனையில் இருந்து வட திசை நோக்கி ஆரம்பிக்கும் நாளை வருடப்பிறப்பாகக் கொண்டாடுவது அறிவுபூர்வமானதும் கூட.

புலம்பெயர் தமிழ் மக்கள் தை முதல் நாளையே தமிழ் மரபு வருடப் பிறப்பாகவும் தமிழர் மரபுப் பொங்கல் திருநாளாகவும் தமிழ் மறை தந்த முனிவர் திருவள்ளுவர் பிறந்த நாளாகவும் கடந்த சில வருடங்களாகவே கொண்டாடி வருகிறார்கள்.கனடாவில் ஒன்ராரியோ மாநிலத்தில் உள்ள மார்க்கம் நகர சபையும் பிக்கரிங் நகர சபையும் தமிழ் மரபுப் புதுவருடத்தை அங்கீகரித்து ஜனவரி 13 ,14 ,15 ம் தேதிகளை (ஆங்கிலத் தேதி) தமிழரின் மரபுரிமை நாட்களாகவும் அந்த விழாவைத் தமிழரின் மரபு விழாவாகவும் கொண்டாட ஒப்புதல் அளித்துள்ளன.இந்த அரச ஒப்புதலைப் பெறுவதற்கு முன்னின்று உழைத்த பலரும் பாராட்டப் பட வேண்டியவர்களே. அதில் மார்க்கம் நகர சபை 7 ம் வட்டார உறுப்பினர் லோகன் கணபதியின் பங்கு அளப்பரியது. அவருக்கு நாடு கடந்த தமிழீழ சார்பில் எமது மனமார்ந்த பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும், தை மாத முதல் நாளை தமிழரின் புதுவருடப் பிறப்பாகவும் பொங்கல் திருநாளாகவும் திருவள்ளுவர் பிறந்த நாளாகவும் கோலாகலமாகக் கொண்டாடுமாறும் தமிழ் மரபுக் கலாச்சார வளர்ச்சிக்கான நிகழ்வுகளை நடத்துமாறும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழ் மக்கள் அனைவரையும் வேண்டிநிற்கிறது.

தமிழ் மக்கள் அனைவருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் கொள்வதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to தைத் திருநாளுக்கு கனேடிய நகர சபை அங்கீகாரம்! தமிழீழ அரசாங்கம் வாழ்த்து

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com