முற்று முழுதாக கட்டுப்பாட்டை இழந்துவிட்ட சிரியாவின் சர்வாதிகாரி பஸார் அல் ஆஸாட்டின் அரசு சிறீலங்கா அரசு பொது மக்கள் வாழிடங்களில் ஷெல் அடித்தது போல மக்கள் வாழிடங்களை நோக்கி ஷெல் வீச்சுக்களை ஆரம்பித்துவிட்டது. கடந்த 11 மாதங்களாக நடைபெறும் உள்நாட்டு போராட்டங்களில் மிக முக்கியமான திருப்பம் இதுவாகும். சிரிய இராணுவம் சுமார் 300 இலக்குகளை குறிவைத்து ராக்கட் தாக்குதல்களை நடாத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல்களில் இதுவரை 79 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிரியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மூடப்படுவதாக அறிவிக்க, பிரிட்டனும் அதே பாதையில் தனது தூதரகத்தை மூடப்போவதாக செய்தி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து கடும் விசனமடைந்த ஆஸாட் குழுவினர் ஷெல் வீச்சுக்களை ஆரம்பித்தார்கள். நேற்று முன்தினம் பொது மக்கள் மீது கிரனைட் தாக்குதல் நடாத்தி 217 பேரை கொன்ற பின்னர் இன்று ராக்கட் தாக்குதலில் குதித்துள்ளார்கள். நாளை சிரிய ஆகாயப்படை தனது நாட்டு மக்களின் வாழிடங்களிலேயே குண்டுகளை வீசலாம் என்று அஞ்சப்படுகிறது.
இது இவ்விதமிருக்க ஈரான் அணு குண்டை உருவாக்கும் போக்கில் கடுகளவும் தாமதம் காட்டாது முன்னேறி வருகிறது. இஸ்ரேலுக்கு இந்த வளர்ச்சி பாரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ஈரானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தடைகள் எதுவுமே ஈரானை கட்டுப்படுத்தவில்லை. ஆகவே ஈரானின் மத்திய வங்கியை கட்டுப்படுத்தும் புதிய தடைகளை அமெரிக்கா அமலுக்குக் கொண்டுவரவுள்ளது. ஆனால் ஈரான் மீது ஒரு தாக்குதலை நடாத்தினால் மற்றைய நாடுகளில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் தாமதமாகிவிடும் என்பதால் விரைவாக பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என்ற கருத்துக்களும் முன் வைக்கப்படுகின்றன.
இது ஒரு புறமிருக்க மேலை நாடுகளின் விளையாட்டு பொருட்கள், உற்பத்திகளை இறக்குமதி செய்வதை ஈரான் வேகமாக நிறுத்தி வருகிறது. பல விளையாட்டுப் பொருட்கள் முற்றாக தடுக்கப்பட்டுவிட்டன. பிள்ளைகளுக்கான தொலைக்காட்சித் தொடர் சிம்சனும் நிறுத்தப்படுகிறது. ஈரானிய போலீசார் பல கடைகளுக்குள் நுழைந்து மேலை நாடுகளின் திரைப்படங்கள் போன்ற பொருட்களை விற்பனை செய்கிறார்களா என்பதை பரிசோதித்துள்ளார்கள். பல கடைகள் தெகிரானில் மூடப்பட்டுள்ளன. ஏட்டிக்கு போட்டியாக காரியங்கள் நடைபெற ஆரம்பித்துவிட்டன.
பிந்திய செய்தி :
சற்று முன்னர் பத்திரிகையாளரிடையே பேசிய ரஸ்ய பாதுகாப்பு அமைச்சர் சேர்ஜி லாரோவ் கூறும்போது சிரிய தலைவர் தமது படைகளின் தாக்குதல்களை நிறுத்த உடன்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்தோடு அடிப்படை சட்டங்களை மாற்றும் சர்வஜன வாக்கெடுப்பிற்கும் அவர் உடன்பட்டுள்ளதாகவும் விரைவில் இது நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்க தூதராலயம் மூடப்பட்டது! ராக்கட் தாக்குதல் 79 பேர் மரணம்!!
பதிந்தவர்:
Anonymous
07 February 2012



0 Responses to அமெரிக்க தூதராலயம் மூடப்பட்டது! ராக்கட் தாக்குதல் 79 பேர் மரணம்!!