Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எங்கள் பெண்ணைத் தொட்டவன் கைகள்..?!

பதிந்தவர்: ஈழப்பிரியா 16 February 2012

இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் நடத்திய ஹோட்​டல் களேபரத்தைக் கண்டு தமிழ் இன உணர்வாளர்கள் நெஞ்சம் கொதித்து நிற்கிறார்கள். தமிழ்நாட்டில் வந்து பெண்ணிடம் கேவலமாக நடந்துக்கிட்ட தொண்டமானைக் கைது செய்து விலங்கு போட்டுக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்'' என்று கொந்தளிக்கின்றனர்.

இலங்கை அரசின் ஊரகத்தொழில் துறை அமைச்சரான ஆறு​முகம் தொண்டமான், இலங்கைத் தமிழர்​களிடையே பெரிதும் அறியப்பட்ட சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரன்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக கண்டி மாவட்டத்தில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட ஆறுமுகம் தொண்டமான், இலங்கை வாழ் இந்தியர்களுக்கான சட்டத்தரணி ஆகவும் செயல்படுகிறார்.

கடந்த 10-ம் தேதி தமிழகத்தின் கோவை சென்ற தொண்டமான், ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தாஜ் குரூப் ஹோட்டலில் தங்கினார்.

இரவு நேரத்தில் ஹோட்டலில் ஒரு பெண்ணிடம் வம்பு செய்தார் என்று தகவல் வெளியே கசியவே, நாம் தமிழர் கட்சியினர் அவருக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய நாம் தமிழர் கட்சியின் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளரான விஜயராகவன்,

''ஹோட்டல் பாருக்குள்ளே தன் சகாக்களோடு போய் ஏகமாய் குடிச்சிருக்கார் தொண்டமான்.

பார் மூடுவதற்கான நேரம் ஆகி விட்டதை, நிர்வாகத்தினர் எடுத்துச் சொன்னதும், 'நான் இந்திய அரசின் கெஸ்ட். எனக்கென்ன டைம் வைக்கிற?’ என்று எகத்தாளமாய் பேசிவிட்டு நள்ளிரவைத் தாண்டியும் குடிச்சிருக்கார்.

அப்புறம் ரிசப்ஷன்ல இருந்த பெண்ணோட கையைப் பிடிச்சு இழுத்துத் தகாத வார்த்தைகளில் பேசி வம்பு பண்ணியிருக்கார்.

ஹோட்டல் நிர்வாகத்தினர் எவ்வளவோ பணிவுடன் சொல்லியும் 'நான் இண்டியன் கவர்மென்ட்டோட கெஸ்ட்’னு சொல்லியே திமிர்த்தனம் காட்டியிருக்கார்.

இவரோட அழிச்சாட்டியம் எல்லை மீறினதும்தான், பொலிஸுக்குப் போன் பண்ணியிருக்காங்க. பொலிஸ் வந்து பேசியும்கூட அவர் மசியலை.

பிறகு வலுக்கட்டாயமா இழுத்துட்டுப் போயிருக்காங்க. தகவல் தெரிந்து, அவரது அறைக்குச் செல்ல முயற்சி செய்தபோது, பொலிஸ் என்னைத் தடுத்துட்டாங்க.

தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசின் அங்கமான தொண்டமான், இங்கே வந்து குடிச்சுக் கூத்தடிக்கிறதைப் பொறுக்க முடியாமத்தான் எங்க கட்சியினர் ஆர்ப்பாட்டத்துல இறங்கினாங்க.

ஆனா நம்ம பொலிஸ் எங்களைக் கைது பண்ணிட்டு, அவரைப் பாதுகாப்பாக வேறு ஸ்டார் ஹோட்டல்ல கொண்டுபோய் தங்கவெச்சுட்டாங்க.

தமிழ்நாட்டில் வந்து பெண்ணிடம் கேவலமாக நடந்துக்கிட்ட தொண்டமானைக் கைது செய்து விலங்கு போட்டுக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்'' என்று கொந்தளித்தார் விஜயராகவன்.

ஹோட்டல் தரப்பில் பேசிய​போது, ''அந்த விஷயம் சம்பந்த​மாகப் பேச எதுவும் இல்லை'' என்று முடித்துக்​​​கொண்​டார்கள்.

கோவை மாநகர பொலிஸோ, ''ஹோட்டல் தரப்பில் இருந்து எழுத்துப்பூர்​வமாக புகார் வரவில்லை. வந்தால், நிச்சயம் விசாரிப்போம்'' என்று கடமை உணர்வு காட்டுகிறார்கள்.

தமிழ்நாட்டுக்கு வந்து, தமிழ்ப் பெண் மீது கை வைக்கும் ஒருவருக்கு சகல பாதுகாப்பும் கொடுக்கப்படுகிறது என்றால், என்னதான் நடக்கிறது இந்தியாவில்?

ஜூனியர் விகடன்

0 Responses to எங்கள் பெண்ணைத் தொட்டவன் கைகள்..?!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com