Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எமது விடுதலைப்போராட்டத்தின் வீச்சும் மாவீரர்களின் தியாகமும் எமது மக்கள் மீதான இனப்படுகொலையுமே இன்று சர்வதேசத்தின் கண்களைச் சற்றுத் திறந்துள்ளது என கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நிட்சயமாக நாம் தமிழீழத்தைப் பெற்றே தீருவோம். அதற்காக எமது மக்கள் குறிப்பாக புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றுபட்ட சக்தியாக இணைந்து சர்வதேசத்திற்கு தொடர்ந்து அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என நெதர்லாந்தில் வைத்து தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழர் திருநாள் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:

எமது மொழி, கலை கலாசாரம் என்பனவற்றை அழியவிடாது காப்பாற்ற வேண்டிய தேவை புலம் பெயர் மக்களுக்கு உண்டு. எமது மக்கள் புலம்பெயர்ந்து பல நாடுகளில் வாழ்க்கின்றனர். அந்தந்த நாடுகளின் மொழி கலை கலாசாரம் என்பவற்றுக்கு மத்தியிலே பிள்ளைகளுக்கு எமது மொழியையும் கலை கலாசாரத்தையும் ஊட்ட வேண்டி உள்ளது.

எவர் எந்த மொழியையும் கற்கலாம். மொழி என்பது ஒரு ஊடகம். அதைக் கற்பதாலோ கதைப்பதாலோ எந்தவித ஆபத்தும் இல்லை. ஆனால் எமது மொழியையும் பிள்ளைகள் கற்க வேண்டும். அதை ஆழமாக நேசிக்க வேண்டும். இதற்காகவே எமது தேசியத் தலைவர் தூரநோக்க சிந்தனையுடன் புலம் பெயர் நாடுகளில் அனைத்துலகக் கட்டமைப்பை உருவாக்கி கலைப்பண்பாட்டுக் கழகங்களை ஏற்படுத்தி அதனூடாக எமது மொழி கலை கலாசாரம் என்பனவற்றை அழியவிடாது பாதுகாத்தார்.

இன்றும் அது நிலைத்து நிற்கின்றது. எமது இனம் கடந்த 1948 ஆம் ஆண்டிலிருந்து சிறிலங்கா அரசுகளினாலும் சிங்களப் பேரினவாதத்தினாலும் இனப்படுகொலைக்கு உள்ளாகி இருக்கின்றது. இறுதியாக முள்ளிவாய்க்கால் பேரவலத்தை ஏற்படுத்தியுள்ளது.

முள்ளிவாய்காலுடன் போர் முடிவடைந்து விட்டதாக மகிந்த அரசு கூறினாலும் இன்றுவரை எமது இனம் அடக்குமுறைக்கு உட்பட்டுள்ளது. திட்டமிட்ட குடியேற்றம், படுகொலை, ஆட்கடத்தல், பாலியல் வன்முறை என அட்டூழியங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றது.

எனவே நாம் இனியும் தொடர்ந்து சிங்கள இனத்துடனோ ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளோ வாழ முடியாது. தனியாகப் பிரிந்து தமிழர்களை தமிழர்களே ஆழக்கூடிய வகையில் சுயநிர்ணய உரிமையுள்ள தமிழீழத்தை அடைந்தே தீரவேண்டும். எமது தேசியத் தலைவர் முள்ளிவாய்க்கால்வரை எமது இறைமையையும் கௌரவத்தையும் யாருக்கும் எந்த நாட்டுக்கும் அடிபணியாமலும் விட்டுக்கொடுக்காதும் பாதுகாத்திருக்கின்றார். அவரின் மதிநுட்பத்தின் காரணமாகவே இன்று எமது பிரச்சினை சர்வதேசம் வரை வந்திருக்கின்றது.

இன்று அவர் மௌனித்திருந்தாலும் அவரின் கொள்கையை நாம் விட்டுக்கொடுக்காது எமது இறைமையைப் பாதுகாக்க வேண்டும். முள்ளிவாய்காலுக்குப் பின் இன்று சர்வதேசம் எமது பிரச்சினை தொடர்பாக சற்றுக் கண்திறந்திருக்கின்றது. எனவே சர்வதேச ரீதியில் எமது இனப்பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வை நாம் பெற வேண்டும். அது தனிநாடாகவே அமைய வேண்டும்.

இதைவிடுத்து, எந்தவொரு அரைகுறைத் தீர்வுக்கும் நாம் செல்லத் தயாரில்லை. தமிழீழத்திற்காகவே நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களும் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்களும் தங்களின் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். ஆனால் இவற்றையெல்லம் மறந்து இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரைகுறைத் தீர்வைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தற்போது உள்ள உறுப்பினர்களிடம் நிலையான கொள்கை கிடையாது. ஆளுக்காள் இடத்திற்கிடம் வேறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதில் உள்ள சிலருக்கு மாகாணசபையில் போட்டியிட வேண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என்ற விரும்பம் அடிமனதில் உள்ளது. மாகாணசபைக்கு பொலிஸ், காணி அதிகாரம் என்றும் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்றும் சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளும் தீர்வையே தமிழர்கள் கேட்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

மாகாண சபை என்னும் உழுத்துப்போன எந்தவித அதிகாரமுமற்ற தீர்வைப் பற்றி கூட்டமைப்பு கதைப்பதே தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தும் அகௌரவமாகும். சிலவேளை பொலிஸ், காணி அதிகாரத்தைக் கொடுத்தாலும் ஆளுனர் ஐனாதிபதியால் நியமிக்கப்படும் வரை முதலமைச்சருக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது.

எனவே இப்படியான தீர்வைப் பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தற்போது உள்ளவர்கள் கதைக்காமல் நிலையான தமிழீழத்தைப் பற்றியே பேச வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பை நாம் உருவாக்கும்போது தமிழீழத்தை நோக்கிய திட்டத்துடனேயே அமைத்தோம். எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தவறான வழியில் சென்றால் அதைத் தட்டிக் கேட்க வேண்டிய உரிமை எனக்குண்டு.

ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பபை உருவாக்கியதில் எனக்கும் மாமனிதர் சிவராமுக்குமே பெரும் பங்குண்டு. இன்றைய காலகட்டத்தில் புலம்பெயர் மக்களைக் குழப்புவதற்கும் எமது தலைவரினால் உருவாக்கப்பட்ட அனைத்துலகக் கட்டமைப்பை உடைப்பதற்கும் பல சதிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

தாயகத்தில் எமது விடுதலைப் போராட்டத்தையும் கொள்கையையும் சிங்களத்திற்கு கருணா, பிள்ளையான் போன்றோர் காட்டிக் கொடுத்து இன்று அவர்கள் சுகபோக வாழ்கை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு எந்தவித கொள்கையும் கிடையாது. இதுபோன்றே இன்று புலம் பெயர் நாடுகளிலும் சிலர் சிங்கள அரசின் நிகழ்சித் திட்டத்தின் கீழ் இயங்கி வருகின்றனர். அவர்கள் தேசியம் பேசிக் கொண்டே எமது மக்களின் பலத்தை உடைத்து வருகின்றனர். அனைத்துலகக் கட்டமைப்புக்கு எதிராக போட்டி மாவீரர் நிகழ்வு, போராளிகள் நிகழ்வு, நடைப்பயணம் என பல்வேறு வேலைத் திட்டங்களை செய்து வருகின்றனர்.

எனவே எமது புலம் பெயர் தமிழ் மக்கள் இதில் விழிப்பாக இருக்க வேண்டும். இவ்வாறானவர்களை இனங்கண்டு கொள்ள வேண்டும். தற்போது எமது மக்களில் பெரும்பாலானோர் இவர்களை இனங்கண்டுள்ளனர். ஏனையோரும் இவர்களின் மாயையில் இருந்து விடுபட வேண்டும். நாம் உறுதியாக இருக்கும்போது எம்மை யாரும் அசைக்க முடியாது என ஜெயானந்தமூர்த்தி தனது உரையில் தெரிவித்தார்.

பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தமிழ் அமுதம் இசைக்குழுவினரின் இசைவிருந்து மற்றும் மாணவர்களின் கலை நிகழ்வுகள் என்பவும் இடம் பெற்றன. அத்துடன் கலைஞர்கள் கௌரவிப்பும் இடம் பெற்றது. கலைஞர்களுக்கு ஜெயானந்தமூர்த்தி கேடயங்களை வழங்கி வைத்தார்.

moorthymp@yahoo.com

0 Responses to மாவீரர்களின் தியாகமே சர்வதேசத்தின் கண்களைத் திறந்துள்ளன!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com