இலங்கைத்தீவில் 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற தமிழர் மீதான அநாகரீகமற்ற தாக்குதலின் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையினால் ஜெனீ வாவில் நடத்தப்படும் மனித உரிமை அமர்வுகளில் தமிழ் பிரமுகர்கள் கலந்து கொள்வது வழக்கமாகியது.
ஆனால் இவ் அமர்வுகளில் ஒரு சிலரை தவிர வேறு யாரும் தொடர்ச்சியாக கலந்து கொள்ளும் பழக்கத்தை கொண்டிருக்க வில்லை.
தெற்கிலுள்ள சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் 1987 ஆம் ஆண்டின் பிற்பகுதிகளிலிருந்து 1990 ஆம் ஆண்டு வரை தெற்கில் ஏற்பட்ட வன்முறைகள், காணாமல் போதல் தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்க்ஷ உட்பட அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, முன்னாள் சட்டமா அதிபரும் அமைச்சருமான திலக் மாரப்பன் போன்றோருடன் அரசசார்பற்ற பிரதிநிதிகளான திருமதி. நிமல்கா பெர்னாண்டோ, பாக்கியசோதி சரவணத்து, சுனிலா அபேயசேகர ஆகியோர் தெற்கின் விடயங்களை சமர்ப்பிப்பதற்காக ஐ.நா.மனித உரிமை அமர்வுகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.
இதில் அரச சார்பற்ற பிரதிநிதிகளான நிமல்கா பெர்னாண்டோவும் பாக்கியசோதி சரவணத்துவும் பொதுவாக இலங்கையின் மனிதர் உரிமை மீறல்களை தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற வேறுபாடு காட்டாது எடுத்துரைத்து வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சர்வதேச மனித உரிமை அமைப்புகளான சர்வதேச மன்னிப்புச் சபை மனித உரிமை கண்காணிப்பு போன்றவை மிக நீண்ட காலமாக ஐ.நா. மனித உரிமை அமர்வில் உலகில் இடம்பெறும் சகல மனித உமை மீறல்கள் பற்றி பேசி வருகின்றன.
ஐ.நா. மனித உரிமை சபை
ஐ.நா. வின் முன்னாள் செயலாளர் நாயகத்தின் முன்னெடுப்பினால் மிக நீண்ட காலமாக ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவென நடைபெற்ற கூட்டத்தொடர் 2006 ஆம் ஆண்டு முதல் ஐ.நா. மனித உரிமை சபையாக இயங்கி வருகிறது. இவ் மனித உரிமை அங்கத்துவ நாடுகளை கொண்டது. இந்த 47 நாடுகளும் பிராந்திய ரீதியாக ஆசிய, ஆபிக்க நாடுகளுக்கு 13, 13 அங்கத்துவத்தையும், தென் அமெரிக்க அல்லது லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு 8 அங்கத்தவர்களையும், மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு 7 அங்கத்துவத்தையும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு 6 அங்கத்துவத்தையும் எல்லாமாக 47 நாடுகளை கொண்டுள்ளது.
எதிர்வரும் 27 ஆம் திகதி இம் மனித உரிமைச் சபையின் 19 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. இக் கூட்டத் தொடர் மார்ச் மாதம் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தொடருக்கு ஐ.நா. சபையின் உருகுவேயின் தூதுவரான திருமதி லோரா டுபியூ லாசேரா என்பவர் தலைமை தாங்கவுள்ளார்.
இக்கூட்டத்தொடரின் முதல் வாரத்தில் ஐ.நா. அங்கத்துவ நாடுகளின் ஜனாதிபதிகள், பிரதமர்கள், வெளிநாட்டு அமைச்சர்கள் உரையாற்றவுள்ளனர்.
இச்சபையை பொறுத்தவரையில் பொதுவாக மனித உரிமை மீறல்களை மோசமாக கொண்டுள்ள நாடுகளின் அமைச்சர்கள் அல்லது மனித உரிமையை முன்னேற்ற வேண்டுமென்ற கொள்கை உள்ள நாடுகளின் பிரதிநிதிகளே உரையாற்றுவது வழக்கமாகியுள்ளது.
இந்த அடிப்படையில் இங்கு பேராசியர் ஜீ.எல். பீரிஸ் அல்லது அமைச்சர் மஹிந்த சமரசிங்க உரையாற்றுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. நல்லிணக்க குழுவினால் ஏற்பட்ட விடயம் இதேவேளை முள்ளிவாய்க்கால் போர் அவலங்களின் பின்னர் அறிக்கை தயாரிக்க அமர்த்தப்பட்ட குழுக்களான ஐ.நா. செயலாளர் நாயகத்தின் மூவர் கொண்ட குழு இலங்கையின் நல்லிணக்கக் குழு ஆகியவை தமது அறிக்கைகளை தயாரித்து வெளியிட்டு விட்டார்கள். இவ்விரு அறிக்கைக ளும் இரு வேறுபட்ட கருத்துகளை கொண்டதாக காணப்படுகின்றன.
நல்லிணக்க குழுவினால் ஏற்பட்ட ஒரே ஒரு நல்ல விடயம்
இலங்கை தீவில் தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை தொடர்ந்து பதவிக்கு வந்த அரசுகள் அலட்சியம் பண்ணியுள்ளதாக கூறுவதே.
இதே இடத்தில் ஐ.நா. செயலாளர் குழுவின் அறிக்கை இலங்கை அரசுபடைகளும் தமிழீழ விடுதலைப் புலிகளும் போர்க் குற்றம் புரிந்துள்ளதாகவும் இது சர்வதேச விசாரணைக் குழுவினால் விசாரிக்கப்பட வேண்டுமென கூறுகிறது.
இவ் அடிப்படையில் 19 ஆவது கூட்டத் தொடர் இலங்கையின் மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்களை கவனத்தில் கொள்ளுமா? என்ற கேள்வி பாதிக்கப்பட்ட ஈழத் தமிழரிடையே எழுந்துள்ளது.
சர்வதேச நாடுகளோ அமைப்புகளோ இலங்கையின் விடயங்களில் எந்தவித தலையீடுகளும் இருக்கப்படாது என்பது இலங்கை அரசினுடைய கொள்கை.
இக்கூட்டத்தொடருக்கான முன்னெடுப்புகள் புலம்பெயர் வாழ் தமிழ் அமைப்புகள் செய்தார்களோ இல்லையோ, இம்முறை இலங்கையை ஒரு கை பார்க்க வேண்டுமென அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் அரச சார்பற்ற நிறுவனங்கள், சர்வதேச மனித உரிமைச் சபை, மனித உரிமை கண்காணிப்பகம், முன்னாள் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரான திருமதி லூயிஸ் ஆபரை தலைவியாக கொண்ட (International Crisis Group) சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு ஆகியவை சர்வதேச அளவில் கங்கணம் கட்டி நிற்கின்றன.
இந்த நிலைமைகளை அறிந்த இலங்கை அமைச்சர்கள் ஐ.நா. மனித உரிமை அங்கத் துவ நாடுகளின் ஆதரவைப் பெற முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
தீர்மானிக்கப் போவது நிச்சயம் இந்தியாவே
எனினும் இலங்கை நிலையை சர்வதேச ரீதியாக தீர்மானிக்கப் போவது நிச்சயம் அயல் நாடான இந்தியாவே. இதன் காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தற்பொழுது இந்தியாவின் ஆதரவை நாடி பணிகளை ஆரம்பித்துள்ளன.
எதிர்வரும் 19 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக ஓர் தீர்மானம் கொண்டு வரப்படுமானால் அது எந்தவித தடையுமின்றி நிறைவேறும் என்பதில் ஐயமில்லை. காரணம் ஐ.நா. மனித உரிமை சபையின் அண்மைக்கால வரலாற்றில் இலங்கையை ஆதரிக்கும் நாடுகளான சீனா, ரஷ்யா, கியூபா, ஈகுவடோர், பாகிஸ்தான் போன்ற நாடுகள் எந்த ஒரு வாக்களிப்பிலும் வெற்றி கொண்டதில்லை.
உதாரணமாக லிபியா, சிரியா, பெலரூஸ் போன்ற நாடுகள் மீது ஐ.நா.மனித உரிமை சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணைகள் யாவும் சீனா, ரஷ்யா, கியூபா, ஈகுவடொரின் ஆதரவு மட்டுமே இருந்தது.
இப்படியான பிரேரணையில் விருப்ப மற்ற நாடுகள் யாவும் தற்பொழுது நடு நிலைமை வகிக்கப் பழகியதனால் அந்நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்வதில்லை. ஆகையால் 19 ஆவது கூட்டத் தொடருக்கு ஜெனீவாவை நோக்கி படையெ டுக்கும் அமைச்சர்களும் மனித உரிமை ஆர்வலரும் என்ன செய்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பாரிஸிலிருந்து ஜெனீவாவிற்கு அதிவேக ரயில் இதேவேளை, இவ் 19 ஆவது கூட்டத் தொடரின் ஆரம்பதினமான 27 ஆம் திகதி ஐ.நா. விற்கு முன்பு புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் விழிப்பு போராட்டம் ஒன்றும் இதனது இரண்டாவது வாரமான மார்ச் 5 ஆம் திகதி மாபெரும் கூட்டம் ஒன்றும் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் ஜெனீவா ஐ.நா. முன்றலில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக புலம்பெயர் வாழ் ஊடகங்கள் கூறுகின்றன.
இம் மாபெரும் கூட்டத்தில் பங்கு கொள்வதற்காக ஐரோப்பிய நாடுகளிலிருந்து வேறுபட்ட போக்குவரத்து வசதிகள் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலிருந்து ஜெனீவா செல்வதற்காக அதிவேகரயில் ஒன்றை பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் வாடகைக்கு அமர்த்தியுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
இப்பொழுது தான் உண்மை ராஜதந்திரப் போரை இலங்கை தமிழர்கள் உட்பட புலம் பெயர்வாழ் தமிழர்கள் ஆரம்பித்துள்ளார்கள் போல் தோன்றுகிறது.
தீவிரவாத சிங்கள ஆர்ப்பாட்டம் இலங்கை அரசினால் ஒழுங்கு செய்யப்பட்ட சிங்கள புலம்பெயர் தீவிரவாத மக்களின் (ஐரோப்பிய) நாடுகளின்) ஆர்ப்பாட்டம் ஜெனீவா ஐ.நா. முன்றலில் எவ்வேளையிலும் 19 ஆவது கூட்டத்தொடர்வே முளையில் நடைபெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 19 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் அமைச்சர்களும் பங்கு பற்றலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
ச.வி. கிருபாகரன், பிரான்ஸ்
tchrfrance@hotmail.com
ஜெனிவாவை நோக்கி படையெடுக்கும் அமைச்சர்கள், மனித உரிமை ஆர்வலர்கள்!
பதிந்தவர்:
தம்பியன்
13 February 2012



0 Responses to ஜெனிவாவை நோக்கி படையெடுக்கும் அமைச்சர்கள், மனித உரிமை ஆர்வலர்கள்!