Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலகை தொட்ட செய்திகள்…

பதிந்தவர்: தம்பியன் 19 April 2012

இந்தியா 5000 கி.மீ தூரத்தை எட்டித்தொடும் நீண்ட தூர ஏவகணையை இன்று வெற்றிகரமாக பரீட்சித்துள்ளது. இந்த ஏவகணை இந்தியாவின் எதிரியான சீனாவையும், அதேபோல ஐரோப்பா கண்டத்தையும் தொடக்கூடியது என்று இன்றைய அதிகாலை ஐரோப்பிய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நீண்ட தூர ஏவுகணை மூலம் அணு குண்டு தாக்குதலையும் நடாத்த முடியும். ஏவப்பட்ட ராக்கட் சரியான இலக்கை எட்டித் தொட்டுள்ளதாக தொடர்பாளர் ஏஸ்.பி.தாஸ் தெரிவித்தார். வடகொரிய ராக்கெட்டுக்கு நடந்த கதி, உலக நாடுகள் வடகொரியா, ஈரானுக்கு எதிராக அணிவகுப்பது போன்ற காரியங்களை அமைதியாகப் பார்த்தபடியே கமுக்கமாக இந்த வேலையை இந்தியா செய்துள்ளதாக அந்தச் செய்தி குறிப்பிடுகிறது. ஆனால் இந்தியாவின் 5000 கி.மீ பாயும் ஏவுகணை தமது நாடுகளின் பாதுகாப்புக்கு ஆபத்தென எந்தவொரு ஐரோப்பிய நாடும் இதுவரை தெரிவிக்கவில்லை. ஏவுகணை தொழில் நுட்பத்தில் இந்தியா சீனாவைவிட பின்தங்கிய நிலையிலேயே இருப்பதால் மேலை நாடுகள் அதிகமாக அலட்டிக் கொள்ளாதிருப்பதை உணர முடிகிறது. சீனாவுக்கு எதிராக இந்தியாவை முறுக்கிவிடலாமென்ற எண்ணத்தில் மேலை நாடுகள் மௌனம் காப்பது தெரிகிறது.

5,000 கிமீ வரை சென்று கண்டம் விட்டு கண்டம் தாவும் வல்லமை கொண்ட அக்னி 5 ஏவுகணை இன்று காலை 8.05 மணிக்கு ஒரிசா மாநிலத்தில் உள்ள வீலர் தீவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

அக்னி 5 ஏவுகணை 3 அடுக்குகளைக் கொண்டது, அதன் உயரம் 17 மீட்டர் ஆகும். 5,000 கிலோமீட்டர் தூரம் வரை இது பாயக் கூடியது. ஒரு டன் எடை கொண்ட அணு ஆயுதங்களையும் தாங்கிச் செல்லக் கூடிய திறன் கொண்டதாக அக்னி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை உலக அளவில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டும் தான் இதுவரை வைத்திருந்தன. தற்போது அந்த பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது.

மறுபுறம் வடகொரிய ஏவுகணை இருபது துண்டுகளாக உடைந்து கடலில் விழுந்தாலும், இந்த ஏவுகணை உடைந்து விழுவதற்காகவே தயாரிக்கப்பட்ட புஸ்வாணம் என்ற சந்தேகத்தை தென் கொரிய செய்திகள் வெளியிட்டுள்ளன. வடகொரியா தன்னுடைய சரியான ஏவுகணையை இனித்தான் ஏவப்போகிறது என்பது தென்கொரியாவின் ஊகமாகும். பனைமரத்தை கையால் பிடிப்பது போல பிடித்து இந்த ஏவுகணையை அனுப்ப முயன்றபோதே சந்தேகம் கிளம்பியிருந்தது. மேலும் வடகொரியாவின் ராக்கட் உடைந்து சிதறினாலும் அந்த நாட்டுக்கு கொடுக்க இருந்த உணவு உதவியை வழங்க முடியாது என்று அமெரிக்கா அறிவித்தமைக்கு வடகொரியா கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா முன்னரே தருவதாக ஒப்புக்கொண்ட உதவியை கண்டிப்பாக செய்ய வேண்டுமென கோரியுள்ளது.

அடுத்து ஐ.நா பாதுகாப்பு சபைக்கு பான் கி மூன் எழுதிய கடிதம் வந்து சேர்ந்துள்ளது. சிரிய அதிபர் ஐந்து நாட்கள் கடந்துவிட்டாலும் கூட யுத்த நிறுத்தத்திற்கு இன்னமும் தயாராகாத நிலையிலேயே இருக்கிறார். அவருடைய படைகள் தமது கவச வாகனங்களை இன்னமும் மக்கள் வாழும் நகரங்களை விட்டு வெளியேறவில்லை என்று தெரிவித்த அவர் மேலும் 300 கண்காணிப்பாளரை அனுப்ப வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

மறுபுறம் சிரிய அதிபரின் மனைவிக்கு யூ ருப் மூலமாக பல்லாயிரக்கணக்கான புதிய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிரியாவின் முதலாவது பெண்மணியான நீங்கள் உங்கள் கணவர் பக்கம் நிற்காமல் அமைதியின் பக்கமாக நிற்க வேண்டுமென அந்தக் காணொளி மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுவரை 9000 பேரைக் கொன்றுள்ள ஆஸாட்; மீதான விமர்சனத்தையும் முன் வைக்க வேண்டுமெனவும் கோரியுள்ளனர். ஆஸாட்டின் மனைவி தனது கணவனுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிக்கும் ஒருவராக தன்னை அடையாளம் காட்டி வருகிறார். சிரியாவில் ஏற்படவுள்ள அரசியல் மாற்றங்களுக்கு இது ஓர் முன்னோடி நடவடிக்கையாக இருக்க வாய்ப்புண்டு. அதேவேளை ஐரோப்பிய ஒன்றியம் ஆஸாட்டின் மனைவிக்கும் ஐரோப்பாவிற்குள் நுழைய முடியாதென தடை விதித்திருப்பது கவனிக்கத்தக்கது.

இது இவ்விதமிருக்க பார்மூடா நாட்டு கொடியுடன் வந்த கப்பலொன்றை துருக்கிய கடற்படை மத்தியதரைக்கடல் பகுதியில் தடுத்து நிறுத்தியுள்ளது. இந்தக் கப்பலில் சிரிய சர்வாதிகாரி ஆஸாட்டின் படைகளுக்கான ஆயுதங்களும், வெடி மருந்துகளும் கொண்டு வரப்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர். அற்லான்ரிக் குறுசர் என்ற பெயர் கொண்ட இந்தக் கப்பல் ஜேர்மனியர் ஒருவருக்கு சொந்தமானது. ஆக போர்மூடா நாட்டின் கொடியோடு ஜேர்மனி ஆடியுள்ள கபட நாடகமா இது என்ற சந்தேகமும் பிறந்துள்ளது.

இதேவேளை பாலஸ்தீனருக்கு ஆதரவாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட டேனிஸ்காரர் ஒருவரை தனது துப்பாக்கியால் முகத்தில் குத்தி வீழ்த்திய கோமாளியான இஸ்ரேலிய படைத்துறை அதிகாரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற நாச வேலைகள் இஸ்ரேலிய படைகளின் அன்றாட செயல்களாக இருந்தாலும், இப்போதுதான் உலகின் முன் அம்பலமாகியுள்ளது.

பார்மீய ஜனநாயகத் தலைவி ஆங் சூங் சுகி அம்மையார் 24 வருடங்களுக்குப் பிறகு முதல் தடவையாக வரும் யூன் மாதம் பார்மாவை விட்டு வெளிநாடுகளுக்கு வருகிறார். முதலாவது பயணமாக இவர் நோர்வேக்கும், பிரிட்டனுக்கும் புறப்படுகிறார். இதற்கு முன்னரும் இவர் வெளிநாடு வந்திருக்கலாம் ஆனால் அப்படி வந்தால் மறுபடியும் நாட்டுக்குள் நுழைய முடியாது என்று இராணுவ ஜிந்தாக்கள் கூறியதால் 24 வருடங்களாக வீட்டுக்காவலிலேயே இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரோன் இவரை சந்தித்தது தெரிந்ததே.

உலக வங்கியின் உறுப்பினர்கள் நாடு பட்டியலில், உலகின் புதிய நாடும், வளர்ந்து வரும் நாடுமான தெற்கு சூடான் இணைந்துள்ளது. இது குறித்த ஒப்பந்ததத்தில் தெற்கு சூடான் நிதியமைச்சர் கோஷ்தி மேனிபி காய் நேற்று கையெழுத்திட்டார். உலக வங்கி உதவியுடன் தெற்கு சூடானில் பல்வேறு முன்னேற்றப் பணிகள் நடைபெற்று வரும் வேளையில் இந்த ஒப்பந்தம் மேலும் பயனுள்ளதாக இருக்கும்.

அலைகள்

0 Responses to உலகை தொட்ட செய்திகள்…

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com