Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில், கடந்த கால அரசாங்கங்களுக்கு கிடைத்திராத அரிய சந்தர்ப்பம், இன்றைய அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளது. இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முதலடியை அரசாங்கம் எடுத்து வைப்பதை, இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என, இந்திய நாடாளுமன்றக் குழுவினருடனான சந்திப்பின்போது, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்ற குழுவினருக்கும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே நேற்று கொழும்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, நான்கு காரணங்களால் இலங்கை அரசாங்கத்திற்கு, இனப்பிரச்சினை தீர்விற்காக பொன்னான வாய்ப்பு இன்று கிடைத்துள்ளது.

முதலாவது, இலங்கை அரசாங்கம், தமிழ் தலைவர்களுடன் உடன்பாடு காணும் போது எதிர்க்கட்சி அதை எதிர்த்து அரசியல் செய்யும். இது இலங்கை சரித்திரம். இன்று சரித்திரம் மாறியுள்ளது. முதன் முறையாக அரசாங்கம், தமிழ் தலைமையுடன் நடத்தும் பேச்சுவார்த்தையை பிரதான எதிர்கட்சி ஆதரித்து உள்ளது. அத்துடன் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும்படி கோரியுள்ளது.

இரண்டாவது, யுத்தத்தை நடத்திகொண்டே கடந்த கால அரசுகள் பேச்சுவார்த்தைகளை நடத்தின. அதனால் பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கவில்லை. இன்று யுத்தம் இல்லை. இது பேச்சுவார்த்தைக்கு ஏதுவான சூழலை உருவாக்கியுள்ளது.
மூன்றாவது, வரலாற்றில் இன்று தமிழ் மக்களும், தமிழ் தலைமைகளும், பிரிபடாத ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காண்பதற்கு பகிரங்கமாக இணங்கி வந்துள்ளார்கள். அதுபோல் ஆயுத போரட்டத்தை நிராகரித்து, ஜனநாயக வழியில் தீர்வு காண்பதற்கு தமிழர்கள் தயாராக இருக்கின்றார்கள். இது கடந்தகால விடுதலை புலிகளின் நிலைப்பாட்டில் இருந்து ஏற்பட்டுள்ள அடிப்படை மாற்றம் ஆகும்.
நான்காவது, இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க இன்று இரண்டு ஆவணங்கள் இருக்கின்றன. 13ம் திருத்தம் என்ற அரசமைப்பு சட்டமும், கற்றுக்கொண்ட பாடங்கள் அறிக்கையும் இந்த இரண்டு ஆவணங்கள் ஆகும். 13ம் திருத்தம், இலங்கை-இந்திய அரசுகள் சேர்ந்து பெற்றெடுத்த குழந்தை ஆகும். கற்றுக்கொண்ட பாடங்கள் இலங்கை அரசு தனியாக பெற்றெடுத்த குழந்தை ஆகும்.

எனவே வெறும் மேசையில் அமர்ந்து, வெற்று காகிதத்தை வைத்து பேச வேண்டிய நிலைமை இன்று இல்லை. பேச்சுவார்த்தை இதில் இருந்து தொடர முடியும். இந்த யதார்த்தங்களை இலங்கை அரசாங்கம் இனிமேலும் புறக்கணிக்க முடியாது. வெறுமனே காலம் கடத்தவும் முடியாது. இந்த யதார்த்தங்களை கருத்தில் கொண்டு இலங்கை அரசுக்கு அழுத்தங்கள் கொடுக்க வேண்டியது, இந்திய அரசின் கடமை.

இந்த கருத்துகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் எடுத்து செல்லுங்கள் என காங்கிரஸ் எம்பி சுதர்ஷன் நாச்சியப்பனிடம் மனோ கணேசன் எடுத்து கூறியுள்ளார்.

அத்துடன், இலங்கை பிரச்சினை தமிழ் நாட்டுக்கு மாத்திரம் உரிய பிரச்சினை இல்லை. அது முழு இந்தியாவிற்கும் உரித்தான பிரச்சினை. அந்த நோக்கிலேயே இந்தியாவின் பல்வேறு தேசிய கட்சிகளையும் அழைத்துக்கொண்டு இங்கு வந்துள்ளோம்.
இனிமேல் இலங்கை பிரச்சினை தொடர்பில் இந்தியாவிலுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்திய நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவார்கள் என சுதர்ஷன் நாச்சியப்பன் பதில் அளித்துள்ளார்.

0 Responses to அரிய சந்தர்ப்பத்தை வரலாறு வழங்கியுள்ளது மனோ கணேசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com