Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது , இலங்கையில் தமிழர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகள் குறித்து நேரில் கண்டறியச் சென்ற பாராளுமன்றக்குழுவின் தலைவரான சுஷ்மா சுவராஜ், ஒரே நாளில் வன்னி முகாமில் இருந்து கிளிநொச்சி, முல்லைத்தீவு வரை புயல் வேகத்தில் பயணம் செய்து ஆங்காங்கே வாழும் சிலரிடம் மட்டும் பேசிவிட்டு, இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுத் தொடர்பாக அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் பணிகள் திருப்தியளிப்பதாகத் தெரிவித்துள்ளது வியப்பளிக்கிறது.

வன்னி முகாம்களில் இன்னமும் இருக்கின்ற தமிழர்களிடம் நாடாளு மன்றக் குழுவினர் பேசிய போது, அவர்கள் ஒரு அச்சத்துடனேயே தங்களிடம் பேசியதாக தமிழ்நாட்டில் இருந்து சென்ற 2 உறுப்பினர்கள் கூறியுள்ளனர். தங்களோடு பேசிய அம்மக்களின் கண்களில் அச்சம் தெரிந்தது என்று மற்றொரு காங்கிரஸ் உறுப்பினரான கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

முல்லைத்தீவில் மக்களிடம் பேசியபோது அங்கு ஏராளமான ராணுவத்தினரும், சாதாரண உடையில் உளவுப்பிரிவினரும் குவிக்கப்பட்டிருந்தனர் என்று பல நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன. ஆனால், ராணுவத்தின் கெடுபிடி ஏதும் இருப்பதாக எந்தத் தமிழரும் கூறவில்லை என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் சுதர்சன் நாச்சியப்பன் கூறியுள்ளார்.

எனவே, இந்திய நாடாளுமன்றக் குழுவின் பயணம் எந்த விதத்திலும் பயனளிக்காது என்று கூறப்பட்ட கருத்துக்கள் உண்மையாகியுள்ளன. இன்றளவும் தமிழர்கள் கடத்தப்படுகின்றனர். தமிழ்ச் சிறுமிகளை ராணுவத்தினர் கடத்தி கற்பழிக்கின்றனர் என்று யாழ்ப்பாணம் பகுதிக்கான அரசு முகவர் இமால்டா சுகுமார் கூறியிருக்கிறாரே, ஏன் அப்படிப்பட்ட நிலை இருக்கிறது? என்பதை விசாரித்து அறியாமலேயே இந்த உண்மைக் கண்டறியும் குழு பயணம் செய்துக் கொண்டிருக்கிறது.

எனவே இப்படிப்பட்ட குழுவின் பயணத்தால் துயரத்திலும், அவலத்திலும், வாழும் தமிழர்களின் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. மேம்போக்காக ஒரு பயணத்தை மேற்கொண்டு இந்தக் குழு அளிக்கும் அறிக்கை, உண்மையை மறைப்பதாகவும், இலங்கை அரசைக் காப்பதாகவுமே இருக்கும் என்பதற்கு சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ள கருத்துக்களே சான்றாகும்.

எனவே இலங்கையில் போர் நடந்த பகுதிகளுக்கு மனித உரிமையாளர்கள், ஊடகவியலாளர்கள் கொண்ட பன்னாட்டுக் குழுவை ஐக்கிய நாடுகள் மன்றம் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 Responses to ஐ.நா.குழு இலங்கை செல்ல வேண்டும் சீமான் கோரிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com