Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பூபதிஅம்மாவின் நினைவுநாள் மீண்டும் மீண்டும் வரும்போதெல்லாம் இந்த போராட்டத்துக்காக தமது மக்களை அளித்த அம்மாக்கள் அனைவரும் அதற்கும் மேலாக இந்த விடுதலைப்போராட்டம் வெற்றிகளையும் அடையவேண்டும் என்பதற்காக தாமே முன்வந்து செயற்பட்ட எண்ணற்ற தாய்களும் நினைவில் வந்துபோவர்.

அன்னைபூபதி என்பது விடுதலைக்கான போராட்டத்தில் ஒரு பெரும் குறியீடாக என்றென்றும் வாழும். விடுதலைப் போராட்டம் என்பது தனித்து ஆயுதந்தரித்த போராளிகளினதும் அரசியல் வேலைசெய்யும் போராளிகளதும் தனி முயற்சி மட்டும் அல்ல.

ஆயதந்தரித்த ஒரு போராட்ட அமைப்பின் பின்னால் அணிதிரளும் ஆயிரம் லட்சம் மக்களது ஒன்று திரண்ட போர்க்குரலே விடுதலைப்போராட்டம் என்பதற்கு ஒரு குறியீடாக பூபதி அம்மாவின் போராட்டமும் அதில் அவர் காட்டிய உறுதியும் இறுதியில் அதற்காகவே தன்னை அர்ப்பணித்து மரணித்ததும் திகழ்கிறது.

ஒரு புரட்சியோ அன்றி விடுதலைப் போராட்டமோ தாய்மார் விடும் கண்ணீருக்குள்ளாகவே பிறப்பெடுப்பதை உலக வரலாறு முழுதிலும் அதன் பக்கங்கள் ஒவ்வொன்றிலும் பார்க்கமுடியும்.

தாய் வடிக்கும் கண்ணீரின் வலிமை மகத்தானது. அது எத்தனையோ சாம்ராஜ்யங்களையும், பேரரசுகளையும், சர்வாதிகாரத்தையும், ஒடுக்குமுறையையும் வீழ்த்தி மண்ணோடு மண்ணாக்கி அதன்மீது நீதியை நிறுத்தியுள்ளதை சரித்திரம் திரும்ப திரும்ப சொல்லி சொல்லி வந்துகொண்டிருக்கிறது.

தமிழீழத்திலும் அதுதான் நடந்தது. தமிழீழ விடுதலை போராட்டத்தை முன்னெடுப்பதற்கான உணர்வை தனக்கு தந்த நிகழ்வாக தேசியதலைவர் குறிப்பிடும் நிகழ்வும் ஒரு தாயின் கண்ணீர்தான்.

1958ஆம் ஆண்டு கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஒரு விதவைத்தாயின் கண்ணீர்தான் தமக்குள் பல அதிர்வுகளை உருவாக்கி இந்த இனத்துக்கான விடுதலைப் போராட்டத்துள் இறங்க வைத்ததாக தேசியதலைவர் தமது ஒவ்வொரு நேர்காணலிலும் குறிப்புகளிலும் சொல்லி வந்திருக்கிறார்.

ஒரு இனத்தின் தேசியவிடுதலைக்கான தலைவனையே உருவாக்கும் ஆற்றல்மிக்கதாக தாயின் கண்ணீர் அமைந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் கொடுமைகளையும் அநீதிகளையும் கண்டு அழுது கொண்டிருந்த தாய்மார் அதன் பின்னர் அந்த கொடுமைகளுக்கு எதிராக அந்த அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து போரிடும் தமது பிள்ளைகளுக்கு துணையாக களம்காணும் நிகழ்வுகளும் வரலாறு முழுதும் எல்லா விடுதலைப் போராட்டங்களிலும் காணக் கிடைக்கின்றன.

உலகில் நடந்தேறிய புரட்சிகள் அனைத்திலும் இந்த காட்சியே திரும்ப திரும்ப வந்துபோகிறது. ரஸ்ய புரட்சியின்போது மக்கள் எவ்வாறு அணிதிரண்டார்கள், எவ்வாறு எல்லா மக்களும் எழுந்தார்கள் என்று அழகாக விபரிக்கும் மார்க்சிம் கோர்க்கி என்ற அற்புதமான படைப்பாளி செதுக்கிய தாய் என்ற உலகப்புகழ் பெற்ற நாவலிலும் பெலகேயா நீலவ்னா என்ற தாய் எவ்வாறு ஒரு புரட்சிகர தாயாக மாறுகிறாள் என்பதையே காட்டுகின்றது.

சாதாரண அம்மாக்கள் போலவே அடுப்படியில் நெருப்புடன் வெந்து ஆலை சங்கு ஊதியதும் வேலைக்கு போகும் கணவனுக்கு உணவு செய்யவும் மீண்டும் ஆலை சங்கு ஊதியவுடன் வீட்டுக்கு வருபவர்களுக்கு உணவு தயாராக வைத்திருக்கும் ஒருத்தியாகவே இருக்கிறாள்.

அவளுக்கு அரசியல் எதுவுமே தெரியாமலேயே வெளி உலகம் நகர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அவளின் மகன் பாவேல் மூலமாக அவளுக்குள்ளும் பெருந்தீ ஒன்றின் சின்னஞ்சிறு பொறி ஒன்று விழுகிறது.

பாவேல் ஒரு புரட்சியாளனாக மக்களின் விடுதலைக்கான ஒரு போராளியாக மாற மாற அவளும் அதே மாற்றத்துடன் மாறுவதுதான் உலக விடுதலை அமைப்புகளின் மகன்கள் அனைவரதும் தாய்மாருக்கும் பொருந்தும்.

மிக மிக நுணுக்கமான முறையில் தாய் ஒருத்தியின் உணர்ச்சியை தொட்டு சொல்லும் இந்த தாய் நாவலின் தாயைபோன்றே ஈழத்திலும் தாய்மார் தமது பிள்ளைகளின் பாதுகாப்பு பற்றியேமுதலில் அக்கறையும் ஆதங்கமும் கொண்டிருந்தாலும் விடுதலைப் போராட்டத்தின் பெருந் தீ அனைவரையும் தொட்டும் உரசியும் செல்ல செல்ல அவர்களும் அதனுள் இணைவது வரலாற்றின் ஓட்டத்தில் மிக இயல்பாகவே நடந்துள்ளதை காட்டும் ஒரு பதிவுதான் பூபதி அம்மாவின் போராட்டமும் அவரின் தியாகமும்.

எப்படியான ஒரு போராட்ட சூழலில் அன்னை பூபதியின் உண்ணாவிரதம் ஆரம்பிக்கிறது என்று பாருங்கள். அவர் ஆழமாக நேசித்த அவளின் பிள்ளைகளின் போராட்டத்தை நசுக்கி எறியவென்று உலகின் நான்காவது ராணுவம் தனது கனரக ஆயுதங்களுடன் வந்து இறங்கி நின்று மெது மெதுவாக சுதந்திரப் போராட்டத்தை அழிக்க முயன்ற வேளையில்தான் பூபதி அம்மா மாமாங்கம் வீதியிலே நீதி கேட்டு பசியுடன் அமர்ந்தார்.

இது உண்மையிலேயே ஒரு விடுதலைப் போராட்டத்தின் பரிணாம வளர்ச்சியின் இன்னொரு பக்கம்தான். போராளிகள் மட்டுமே போராடி விடுதலையை எடுத்து தருவார்கள் என்ற நினைப்பில் இருந்த மக்கள் மத்தியில் இருந்து ஒரு பெண் அதுவும் ஒரு தாய் தானாகவே நேரடியாக களத்தில் பாரதப்படைகளின் கொடுமைகளுக்கு எதிராக இறங்கியது.

ஒரு பெரும் மாயை எமது மக்களை கூழ்ந்திருந்த பொழுதில் அன்னை பூபதி அதனை துடைத்தெறிய துணை நின்றவர். பாரதபடைகள் எமது விடுதலைக்காகவும் எமது மக்களின் உரிமைகளை பெற்றுத்தரவே வந்து இறங்கி இருப்பதாக நம்பி வரவேற்றுக் கொண்டிருந்த எமது மக்களுக்கு இந்திய படைகளினதும் இதனை அனுப்பிய அரசின் தலைமையினதும் கபட நோக்கம் பற்றி புரிய வைக்க தனது உயிரை தந்தவர் பூபதிஅம்மா.

விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராளியாக அரசியல் பொறுப்பாளனாக இருந்த திலீபன் அமர்ந்த அதே போராட்ட முறையில் ஒரு சாதாரண தாய், ஒரு குடும்ப தலைவி அமர்ந்த பொழுதில் இந்த போராட்டத்தின் அனைத்திலும் சாதாரண வாழ்வுக்குள் வாழ்ந்துவரும் மக்கள் அனைவரும் இறங்கும் ஒரு தருணம் வெளிப்படையாக ஆரம்பித்தது.

அதுவே நாட்டுப்பற்றாளர்கள் எனும் ஆயிரம் ஆயிரம் தேசத்தின் விடுதலைக்கான மனிதர்களைகளமிறக்கியது. இந்த விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப நாளில் இருந்தே இது தனித்து இதன்போராளிகளின் முயற்சியாக மட்டும் இருந்திருக்கவில்லை.

இதற்கான போராளிகளை மறைத்து வைத்திருந்த ஆரம்பகால உதவியாளர்கள் முதல் ஏதோ ஒரு இரவில் தெரு முனையில் காத்திருந்து சைக்கிளில் வரும் போராளிகளுக்கு அடுத்த தெருவின் இருளுக்குள் சிங்கள ராணுவமோ இந்திய ராணுவமோ காத்திருக்கிறான் என்ற தகவலை தந்த அந்த முகமும் பெயரும் தெரியாத நாட்டுப்பற்றாளர்வரை அனைவரும் வணங்கத்தக்கவர்களே.

நாட்டுப்பற்றாளர் என்பவர்கள் இந்த வரையறைக்குள் மட்டுமே அடங்குவர் என்றில்லாமல் இந்த விடுதலைப்போராட்டத்தின் அனைத்து மட்டங்களிலும் அனைத்து உச்சகட்ட செயற்பாடுகளிலும் துணை நின்ற செயல்வீரர்கள் அவர்கள்.

வீதிக்கு வீதி தடுப்புசோதனை நிகழும் எதிரி நகருக்குள் போராளியை அழைத்து செல்வதில் இருந்து குளிர் உறைந்த புலம்பெயர் தேசத்து தெருக்களில் வீடுவீடாக அலைந்து செயற்பட்டவர்கள்வரை நாட்டுப்பற்றாளர்களின் வீச்சு எழுதி முடியாதது.

இவர்கள் அனைவரும் தாம் வாழும் சாதாரண மனிதர்களின் வாழ்வுக்குள்ளாக வாழ்ந்து கொண்டே விடுதலையின் பாரத்தையும் சுமந்தவர்கள். இந்த பணியின் முடிவும் இதன்போது ஏற்படும் பாதிப்புகளும் அறிந்தே வந்தவர்கள்.

தமது இனத்தின் விடுதலைக்காக களமாடும் போராளிகளுக்கும் இந்த விடுதலை இயக்கத்துக்கும் உறுதுணையாக நின்று செயற்பட்ட பெரும் தூண்கள் இவர்கள். நாட்டுப்பற்றாளர் மிகவும் செறிவானதும் மிகவும் ஆணித்தரமானதுமான ஒரு செய்தியையே தமது வாழ்வினூடாக சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள்.

எப்படி ஒரு சாதாரண குடும்பவாழ்வுக்குள் இருந்தபடியே விடுதலைக்காக தம்மால் இயன்றதையும் அதற்கும் மேலானதுமான செயற்பாட்டை செய்யலாம் என்பதே அவர்களின் செய்தி ஆகும்.

அன்னை பூபதியினதும் நாட்டுப்பற்றாளர்களினதும் நினைவு தினத்தில் அவர்களது வாழ்வு சொல்லும் செய்தியை நாமும் பற்றியபடியே நடப்போம் என்பதே அவர்களுக்கான உண்மையான வணக்கமும் நன்றியும் ஆகும்.

ilamparavai@hotmail.com

0 Responses to தீயாக எழுந்த தாயும் நாட்டின் விடுதலைக்கான பற்றாளர்களும்: ச.ச.முத்து

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com