டென்மார்க்கின் பிரபல தொழில் அதிபர் மாஸ்க் மக் கெனி மூலர் நேற்று தனது 98 வயது வயதில் டென்மார்க் றீஸ் வைத்தியசாலையில் இயற்கை எய்தியது தெரிந்ததே. ஒரு தனிமனிதன் பொருளாதாரத்தில் மேன்மையடைந்து, ஒரு நாட்டுக்கே முதுகெலும்பாக இருக்க முடியுமா என்ற சிந்தனை பலருக்கு கனவில் கூட வரமுடியாத தொலைவில் உள்ளது. ஆனால் மாஸ்க் மக் கெனி மூலர் என்ற மனிதர் அதை நிறைவேற்றிக் காட்டிவிட்டு வெற்றி பெற்ற வாழ்வுடன் விடைபெற்றுள்ளார்.
வாழ்க மாஸ்க் மக் கெனி மூலர் புகழ்..
மாஸ்க் நிறுவனத்தின் வியாபார சின்னத்தை இன்று உலகில் அறியாத நாடுகள் என்று எதுவுமே கிடையாது. ஐ.நா சபை போல 130 நாடுகளில் 117.000 ஊழியர்களுடன் உலக வர்த்தக சாம்ராஜ்யத்தையே படைத்துள்ளது மாஸ்க். டென்மார்க் என்ற நாடு ஒவ்வொருவரும் உழைக்கும் பணத்தில் அரைப்பங்கை வரியாக எடுத்து உழைக்காத மக்களுக்கு கொடுத்து வாழும் முதலாளித்துவ சோசலிச நாடு. இந்த நாட்டுக்கு அவர் கோடி கோடியாக உழைத்துக் கட்டிய வரி ஒரு நூற்றாண்டு சாதனையாகும்.
உலகத்தின் முதலாவது மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடு டென்மார்க் என்ற பெயரைப் பெற காரணமான முதல் மனிதன் – வாழிய அவன் புகழ்.
இப்போது அவர் மரணமடைந்துள்ள காரணத்தால் அவருடைய 125 பில்லியன் குறோணர் பெறுமதியான சொத்துக்கள் மூன்று மகள்மாருக்கும் கைமாறுகிறது. இதனால் ஏற்படும் பரம்பரை சொத்து மாற்ற வரி பல பில்லியன் குறோணர்களை டேனிஸ் அரசின் கல்லாப்பெட்டியில் கொட்டியிருக்கிறது.
செத்தும் கொடை கொடுத்தான் சீதாக்காதி வள்ளல் என்ற தமிழ் பாடலின் புகழை தன் மரணத்தால் எழுதிக்காட்டினார்.
இன்று காலை வெளியாகியுள்ள டென்மார்க்கின் பத்திரிகைகளை அவதானித்தால் எல்லா பத்திரிகைகளும் அவருடைய புகைப்படத்தையே முதற்பக்கத்தில் தாங்கி வெளி வந்திருக்கக் காண்கிறோம.;
தோன்றில் புகழுடன் தோன்றுக என்ற வள்ளுவர் குறள் போல அனைத்து பத்திரிகைகளிலும் அவர் புகழ் தோற்றம் தந்துள்ளார்.
மாஸ்க்கின் உயர்வுக்கு உதவிய காரணிகளில் முக்கியமான சில :
01. வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு என்ற அவ்வை பாடலே அவருடைய உயர்வின் அடி நாதம். உள்ளத்தில் வெள்ளம் போல கற்பனைகள் பெருகப் பெருக அவருடைய உழைப்பு மலர்த் தண்டுபோல உயர்ந்து, 98 வயது வரையும் ஓய்வின்றி செயற்பட வைத்திருக்கிறது. சென்ற வாரம் நடைபெற்ற நிர்வாகக் கூட்டத்தில் பேசும்போது அடுத்த வருடமும் வருவீர்களா என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. சந்தேகமென்ன கண்டிப்பாக வருவேன் என்றுவிட்டு காரில் ஏறி பயணித்தார். – என்ன நம்பிக்கை – என்ன கற்பனை அழகு.
02. ஒவ்வொரு நொடியும் நவீன சிந்தனைகளே அவருடைய உள்ளத்தில் உதயமானது. அவருடைய கப்பல்களை கடலில் வரிசையான நிறுத்தினால் தமிழீழம் போல ஒரு நாடு கடலில் இருப்பதை காணலாம். ஒரு நாட்டை பல கூறுகளாக பிரித்து உலகத்தை சுற்றிவர வைத்து, அதற்கு முடிசூடாத மன்னராக வலம்வந்தது மாபெரும் கற்பனையாகும். நாட்டை நிலத்தில்தான் அமைக்க வேண்டுமென்பதல்ல கடலிலும், ஆகாயத்திலும் அதை அமைக்கலாம். நமக்கு வேண்டியது கற்பனை என்று வாழ்ந்து காட்டினார்.
ஆம்.. பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே.. நெஞ்சினில் துணிவிருந்தால் நிலவுக்கும் போய் வரலாம். உதாரணம் மாஸ்க்.
03. டென்மார்க் என்ற நாட்டிடம் ஒரு நல்ல புத்தி இருக்கிறது. தனது மக்கள் பொருளாதாரத்தில் முன்னேறினால் அரச இயந்திரம் பாகுபாடின்றி தூக்கிவிடும். ஓர் அரசு செய்யும் காரியங்களை எல்லாம் தனி மனிதனான மாஸ்க் செய்ய விரும்பியபோது அரசு மகிழ்வோடு அனுமதி வழங்கியது. அதுபோல டேனிஸ் மகாராணியார் என்றும் மாஸ்க் மூலருக்கு உறுதுணையாக இருந்துள்ளார். தன்னுடைய பிரஜைகள் நல்லபடியாக வாழ வேண்டும் என்ற நல்ல மனமிக்க அரசும், நல்லதோர் மகாராணியாரும், நல்ல மனமுள்ள மக்களும் கிடைத்ததே மாஸ்க் மூலருக்கு கிடைத்த மாபெரும் உயர்வுக்குக் காரணம்.
இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன்பால் விட்டுவிடல் வேண்டும்.. என்ற குறள்வழி வாழ்ந்தார்.
04. இந்த நாட்டில் எத்தனை அரசியல் கட்சிகள் இருந்தாலும் அவை அனைத்தும் மாஸ்க்கை ஏகோபித்து ஆதரித்தன. அவரிடம் கப்பம் அறவிட எந்தக் கட்சியும் தமது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தியது கிடையாது.
05. உயிரைக்காப்பது எல்லாவற்றையும் விட முக்கியமானது என்று கருதினார் மாஸ்க். 1940 ஏப்ரல் 9ம் திகதி ஜேர்மனிய படைகள் டென்மார்க்கைக் கைப்பற்றியதும் புலம் பெயர்ந்து அமெரிக்கா சென்றார். மறுபடியும் ஏழு ஆண்டுகள் கழித்தே நாடு திரும்பினார். எல்லாவற்றையும் விட மதிப்பானது உயிர் அதை காப்பாற்றாத செயல்களால் பயனில்லை என்று கருதினார்.
சிலப்பதிகாரத்தில் மிகப்பெரிய வர்த்தகனின் மகளான கண்ணகி கற்பு தவறிய கணவனை எரிக்கவில்லை.. அவனுடைய உயிரை எடுத்த மதுரையையே எரித்தாள். கற்பைவிட உயிரே முக்கியம் என்று எடுத்துரைத்தாள். அந்த சிலப்பதிகார செய்தியை வாழ்ந்து காட்டிய மாபெரும் மேதை மாஸ்க்.
05. ஒரு தொழிலில் பெற்ற முதலீட்டை வேறு பல தொழில்களுக்கு மாற்றினார். இதனால் பெரும் கடைத் தொகுதிகள், விமான நிறுவனங்கள், பங்குச் சந்தை முதலீடுகள், எரிவாயு அகழ்தல், கொன்ரேனர் கப்பல்கள் என்று மாஸ்க் நிறுவனத்தை ஆலமரம்போல கிளைவிடச் செய்தார். 1904 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மாஸ்க் நிறுவனம் 2004 ம் ஆண்டு நூற்றாண்டைக் கொண்டாடிய போது தனது தந்தை இல்லையே என்று கவலை கொண்டார்.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு என்ற குறளை உணர்ந்தார். மாஸ்க் நிறுவனத்தை உருவாக்கிய தன் தந்தை வெள்ளி விழாவுடன் இறந்துவிட்டாலும், அவர் செய்த உதவியின் நன்றியையே உயிருள்ளவரை போற்றி குறள்போல வாழ்ந்து காட்டினார்.
06. மற்றவர் மனம் குளிர வேண்டுமென்று தனது மனைவி பெயரில் மாஸ்க் நிதியத்தை உருவாக்கி வாரி வழங்கிய கொடை வள்ளலாக வாழ்ந்தார். இதோ சில உதாரணங்கள் :
அ. 1968 பிளஞ்பேர்க்கில் உள்ள கிறீத்தவ தேவாலயத்திற்கு பெரு நிதி வழங்கினார்.
ஆ. 1983 அமேலியன் போ துறைமுக தொடர்பாடலை ஏற்படுத்திக் கொடுத்தார்.
இ. 1989 தலைநகர் அரச பகுதிகளை சீர்திருத்த நிதி வழங்கினார்.
ஈ. 1991 தெற்கு சிலஸ்வீக்கில் உள்ள டேனிஸ் தேவாலயத்தை மறுதிருத்தம் செய்தார்.
உ. 1992 கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகம் சென்று படிக்க உதவும் நிதியத்தை உருவாக்கினார்.
ஊ. 1994 கறள்கட்டிய கப்பல்களை சீர்திருத்த உதவினார்.
எ. 2004 கோப்பன்கேகன் ஒபரா இசைக்கல்லூரிக்கு வாரி வழங்கினார்.
ஏ. 2007 டென்மார்க் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உருவாக நிதி வழங்கினார்.
ஐ. 2008 சிலஸ்வீக்கில் உள்ள டேனிஸ் உயர்நிலைக் கல்வி நிலையத்திற்கு அள்ளி அள்ளிக் கொடுத்தார்..
பெற்றது கொண்டு சுற்றம் ஓம்பி.. ஓம்பினது கொண்டு பூம்பாது வீசி… என்ற பட்டினப்பாலை பாடல்போல பெற்ற பணத்தைக் கொண்டு தனது சுற்றம் வாழ உதவினார்.
அதனால்தான்..
இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் தொழில் வல்லுநரை டென்மார்க் இழந்துள்ளதாக டேனிஸ் இன்டஸ்ரி சுட்டிக்காட்டியுள்ளது.
மாஸ்க் மக் கெனி மூலர் என்ற மனிதனை ஒவ்வொரு தமிழனும் தவறாமல் அறிய வேண்டும். அவருடைய வாழ்க்கை ஓர் அரிய புத்தகம். சங்கப்பாடல்களிலும், திருக்குறளிலும் நாம் காணும் வாழ்வியல் கருத்துக்களை வாழ்ந்து காட்டிய பெருமகன் அவர்.
தமிழ்நாடு தரங்கம்பாடியிலும், இலங்கை மன்னாரிலும் கால்பதித்த டேனிஸ் மக்கள் உயர்ந்த தமிழ் சிந்தனைகளை உள்வாக்கி வாழ்வதை அறிந்து கொள்ள அவர் வாழ்வை அறிய வேண்டும்.
தமிழ் வர்த்தக உயர்வும் – டேனிஸ் வர்த்தக உயர்வும் ஒன்றுதான் என்பதை பட்டினப்பாலையிலும், மாஸ்க் வாழ்விலும் கண்டு மகிழ முடிகிறது.
பல நூற்றுக்கணக்கான தமிழ் மாலுமிகள் மாஸ்க் நிறுவனத்தில் பணி புரிகிறார்கள்… அனைவருடனும் சேர்ந்து நாமும் அவரை மரியாதைப்படுத்துவோம்.
வாழ்க மாஸ்க் மக் கெனி மூலர் புகழ்..
அலைகள்



0 Responses to தமிழர் கண்ட வர்த்தகக் கொள்கைகளை செயலாக்கி வாழ்ந்த சீரிய மனிதன்…