இந்தியாவிலிருந்து இன்று வருகை தரவுள்ள இந்திய பாராளுமன்ற குழுவினர் நீண்ட காலமாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமது பிள்ளைகளை விடுதலை செய்வதற்கு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என கோரியுள்ளனர். இந்தக் கோரிக்கையை தடுப்புக் காவலில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்கள் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தின் ஊடாக இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுத்து மூலமாக அனுப்பி வைத்துள்ளனர்.
அந்தக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த காலம் எமது நாட்டில் நடைபெற்ற யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சமாதானத்தை நிலைநாட்டியுள்ளதாக இலங்கை அரசாங்கம் கூறி வருகிறது.
அத்தோடு யுத்தத்தில் நேரடியாக சம்பந்தப்பட்ட பலரை புனர்வாழ்வளித்து சமூக மயப்படுத்தி வருகின்றனர். இது வரவேற்கத்தக்கது. ஆனால் பயங்கரவாதம் மற்றும் அவசரகால சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வடக்கு கிழக்கு மலையகத்தைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான எமது பிள்ளைகளும் உறவினர்களும் இலங்கையில் பல்வேறு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஐந்து வருடம் தொடக்கம் பதினெட்டு வருடங்கள் வரை எவ்வித முடிவுமின்றி இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இளைஞர்கள் பெண்கள் வயோதிபர்கள் மற்றும் சிறார்கள் என பலரும் இருக்கின்றனர். இவர்கள் பல்வேறு துன்பங்களையும் சொல்லொண்ணா துயரங்களையும் வேதனைகளையும் அனுபவித்து வருகின்றார்கள்.
எனவே பாரத தேசத்திலிருந்து இலங்கைக்கு வருகை தரவிருக்கும் பாராளுமன்ற உறுப்பினராகிய நீங்கள் எங்கள் பிள்ளைகள் உறவினர்கள் விடுதலைக்காக அரசாங்கத்தை வலியுறுத்துவீர்கள் என்று நம்புகிறோம். தொப்புள் கொடி உறவாகிய நீங்கள் பல வழிகளில் எங்களுக்காக குரல் கொடுத்து வருகிறீர்கள். அதை நாம் மறந்து விடவில்லை.
இன்று என்ன நடக்கும் நாளை என்ன நடக்கும் என்று தெரியாத ஒரு அச்சுறுத்தலான சூழ்நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம். யுத்தத்தில் நாம் பட்ட துயரங்களோடு எங்கள் பிள்ளைகள் இன்னும் விடுதலை செய்யப்படாமல் இருப்பது எங்களுக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது. எனவே இப்படி இருக்கும் போது நாட்டில் இன ஒற்றுமை ஏற்படுவதற்கான வாய்ப்பே கிடையாது.
எனவே பிறந்துள்ள புதிய நந்தன வருடம் எமக்கு சிறப்பாக அமைவதற்கு எங்கள் பிள்ளைகளுக்கு விடுதலை கிடைக்க வேண்டும். இது உங்களது வருகையின் ஊடாகக் கிட்ட வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு.



0 Responses to தமிழ் கைதிகளை விடுதலை செய்ய அழுத்தம் கொடுக்கவும்