சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம் தாய் மரணமடைந்து வீட்டிற்குள் சடலமாகக் கிடக்க, அவருக்கு அருகிலேயே இரண்டு வயது சிறுமி ஒருவர் ஐந்து தினங்கள் சடலத்தோடு இருந்த சம்பவம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுள்ளது. சிட்னி நகரத்திற்கு சுமார் 400 கி.மீ தென்மேற்கே உள்ள வெகா வெகா நகரத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. தாய் இறந்துவிட்டதை அறிய முடியாத சிறுமி பசியில் அங்கிருந்த சாக்லேட்டுக்களை சாப்பிட்டபடியே ஐந்து நாட்களை கழித்துள்ளார். அயலில் இருந்தவர்கள் தற்செயலாக சிறுமி இருந்த வீட்டுக்கு சென்றபடியால் சம்பவத்தை அறிந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். சிறுமியை வைத்தியசாலை கொண்டு சென்ற அம்புலன்ஸ் வண்டிப் பிரிவினர் கூறும்போது சம்பவத்தை விபரிக்கும் ஆற்றல் சிறுமிக்கு இல்லை என்று தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அவுஸ்திரேலியாவில் நடந்தாலும் டென்மார்க் உட்பட உலகின் பல நாடுகளிலும் உள்ள முக்கிய ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
மறுபுறம் நேற்று ஞாயிறு பெல்ஜியம் வந்து அந்நாட்டு பிரதமர் எலியோ டி நுபோலை சந்தித்த ஐ.நா செயலர் பான் கி மூன் சிரியா தொடர்பாக தனது ஆழ்ந்த கவலைகளை மறுபடியும் வெளியிட்டார். ஐ.நாவின் கண்காணிப்பு குழு சிரியாவில் இறங்கும்போதும் கோம்ஸ் நகரத்தில் குண்டு வீச்சு நடந்துள்ளதைப் பார்க்கும்போது தமக்கு அமைதி வருமென்ற நம்பிக்கைகள் அனைத்தும் சிதைந்து சின்னாபின்னமாகிவிட்டதாக தெரிவித்தார்.
அதேவேளை ஐ.நாவின் கண்காணிப்புக் குழுவை சிரிய அதிபர் வருக வருகவென வரவேற்றுள்ளார். ஆனால் அவர்களுக்கு சில புத்திமதிகளை அவர் கூறியுள்ளார். கண்காணிக்கும் போது அனைத்துத் தரப்பையும் சரிவர கண்காணியுங்கள், அதைவிட முக்கியம் கண்காணிப்பு குழுவினரின் உயிர்களுக்கு நாங்கள் உத்தரவாதம் தர முடியாது என்ற கிலியையும் கிளப்பியுள்ளார். மேலும் கண்காணிப்புக்குழு சிரிய படைகளுடன் இணைந்து செயற்படாமல் சகட்டு மேனிக்கு நடந்து தமது தலையில் தாமே மண்ணள்ளிப் போட்டுக் கொண்டால் அதற்கு தாம் பொறுப்பல்ல என்றும் கூறியுள்ளார். கண்காணிப்பு குழு என்பது மக்களை பாதுகாக்கும் குழு அல்ல.. அது போரை தடுக்கும் குழுவும் அல்ல அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தகவல் எடுத்துக் கொடுக்கும் உளவுப்பிரிவுகள் போன்ற ஒரு குழுவினரே என்பது கவனிக்கத்தக்கது. யுத்த நிறுத்தக் கண்காணிப்பு குழு சிறீலங்கா வந்து தமிழ் மக்களின் அழிவுக்கு துணைபோன கதை இதற்கு நல்லதோர் உதாரணமாகும். எனவேதான் சிரிய அதிபர் தனது மிரட்டலை வெளியிட்டுள்ளார்.
மறுபுறம் ஈராக்கில் நடைபெற்ற மூன்று குண்டுத்தாக்குதல்களில் ஐந்துபேர் கொல்லப்பட்டார்கள். குர்டிஸ்தானியர்கள் அதிகம் வாழும் வடபுல கிருக் நகரில் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றன. முதலாவது தாக்குதலில் குர்டிஸ்தானிய பாதுகாப்பு படைப்பிரிவு தலைவர் குறி வைக்கப்பட்டார் ஆனால் இவருடைய மெய்ப்பாது காலரே பலியானார், மேலும் 11 பேர் காயமடைந்தனர். அதுபோல இப்பகுதிக்கு அருகில் இருந்த பல்கலைக் கழகத்தில் வன்முறைக்கு எதிரான மாநாடு நடைபெற்றபோது இன்னொரு தாக்குதல் நடைபெற்று மூன்று பேராசிரியர்கள் படுகாயமடைந்தனர். இன்றொரு குண்டு வெடிப்பில் உள்ளுர் அரசியல் தலைவர் ஒருவருடைய மகன் கொல்லப்பட்டுள்ளார். இப்படி ஐந்து பேரைக் காவுகொண்டு நேற்றய வன் பொழுது முடிவுக்கு வந்தது.
பகரின் இராணுவ வைத்தியசாலையில் உண்ணாவிரதமிருந்துவரும் மனித உரிமைப் போராட்டக்காரர் அல் காவ்யாவை அவருடைய மனைவி, மகள் குடும்பத்தினர் சென்று பார்வையிட்டுள்ளனர். டேனிஸ் தூதுவர் அல் காவ்யாவை சந்தித்து, நீரோடு பழரசத்தையும் சேர்த்துக் குடிக்கும்படி கேட்டிருந்தார். இதைத் தொடர்ந்து பழச்சாறும் குடிப்பதால் மரணம் சிறிது தாமதமாகியுள்ளது.
நோர்வேயில் உளவியல் கொலையாளி ஆனர்ஸ் பிகார்ஸ் பிறீவிக்கின் மீதான விசாரணைகள் இன்று ஆரம்பமாகின. இவரை உளவியல் நோயாளி என்று கூறி சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவிடாமல் 77 பேரைக் கொன்ற கொலையாளி என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவர் பல ஆயுட்கால தண்டனைகளை அனுபவிக்க வாய்ப்புள்ளது. நீதிமன்றில் இவர் செய்த படுகெகாலைகளை விளக்கும் 12 நிமிட காணொளி திரையிடப்பட்டது. இதைப்பார்ப்ப பிறீவிக் கண்ணீர்விட்டு கதறி அழுதார். நோஸ்க் மக்களில் மூன்றில் ஒருவர் இவரை வெறுப்பதாக ஆய்வு அறிக்கை கூறுகிறது.
அலைகள்



0 Responses to இறந்த தாயுடன் ஐந்து தினங்கள் இருந்த குழந்தை