Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று ஒஸாமா பின்லேடன் கொல்லப்பட்ட தினமாகும்.

வரும் நவம்பர் நடைபெறப் போகும் அமெரிக்க தேர்தலில் ஒஸாமா பின்லேடனை கொன்ற வீரன் என்ற புகழ் மாலையுடன் தற்போதைய அதிபர் பராக் ஒபாமா வெற்றி பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அமெரிக்க எதிரணியினர் அதற்கும் வேட்டுவைக்க ஆரம்பித்துவிட்டனர்.

ஒஸாமா பின்லேடன் என்பவர் நரைத்த தலை முடிக்கு நிறம் தீட்டிய ஏழைக் கிழவர். அவர் தனது வீட்டின் பின்புறம் விவசாயம் செய்து அன்றாட வாழ்வை நகர்த்தி வந்திருக்கிறார். அப்படிப்பட்ட வீரியம் குன்றிய இயலாமை நிறைந்த, நோயாளியான ஒருவரை அமெரிக்க அதிரடிப்படை கொல்ல, அதை பராக் ஒபாமாவும், கிளரி கிளின்டனும் பார்த்து ரசித்தது ஒரு கோமாளிக் கூத்தென்று பிரச்சாரங்கள் நடைபெறுகின்றன. பின்லேடனின் அப்போடா பாட் இல்லத்தில் இருந்த 14 இஞ்சி சிறு தொலைக்காட்சி, அவருடைய ஏழ்மை மிகுந்த வீட்டு உபகரணங்கள் யாவும் அவருடைய இயலாமை வாழ்வின் அடையாளங்களாகும். பாகிஸ்தான் அரசின் உளவுப்பிரிவு காட்டிக் கொடுக்க, மீடியாக்களுக்கு வேடிக்கை காட்டி, வசதியாக ஒருவரை கொன்றுவிட்டு அதை ஓர் அமெரிக்க சாதனை என்று பீற்றியடிப்பது வெட்கத்திற்குரிய செயலாகும் என்கிறார்கள்.

இன்று ஒஸாமா பின்லேடன் கொல்லப்பட்ட தினமாகும். இது குறித்த கருத்தாடல்கள் தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. பின்லேடன் கொல்லப்பட்டது அமெரிக்க மக்களுக்கு ஒருவித பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கிறார்கள். இப்போது தான் நின்மதியாக உறங்குவதாக அரிசோனாவை சேர்ந்த 70 வயது லிண்டா மகிழ்வு தெரிவித்தார். 2001 செப் 11ம் திகதி உலகத்தின் 70 நாடுகளைச் சேர்ந்த 2973 பேர் படுகொலை செய்யப்பட காரணமான பயங்கரவாதியே ஒஸாமாபின்லேடன் என்பது குறிப்படத்தக்கது. அப்படிப்பட்ட பின்லேடனை கொல்லும்படி நேரடியாக உத்தரவிட்ட பராக் ஒபாமாவுக்கே அனைத்து பெருமைகளும் சேரும் என்று 37 வயது டேவிட் மூலர் தெரிவித்தார். இப்படி பின்லேடன் இன்றைய பொழுதுகளை கவர்ந்து கொண்டார்.

இது இவ்விதமிருக்க நேற்று செவ்வாய் அதிரடியாக அமெரிக்க அதிபர் ஆப்கானிஸ்தானை சென்றடைந்தார். அவர் ஆப்கான் அதிபருடன் எதிர்வரும் 2014 ற்கு பிறகு வரவுள்ள அமெரிக்க – ஆப்கான் உறவுகளுக்கான ஒப்பந்தத்தில் இன்று கைச்சாத்திடவுள்ளார். கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ந்த ஆப்கான் போர் வெற்றியுடன் முடிவடையும் தறுவாய்க்கு வந்துவிட்டது என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.

மேலும் பின்லேடன் கொலையின் வீறாப்பு ஏறத்தாழ பிசுபிசுத்துவிட்ட நிலையில் மேலும் ஏதாவது பரபரப்புக்களை ஏற்படுத்த வேண்டிய தேவை இருப்பதாலேயே அமெரிக்க அதிபர் சொல்லாமல் கொள்ளாமல் ஆப்கான் சென்றடைந்தார் என்று கூறப்படுகிறது. வரும் 2014 ல் நேட்டோ படைகள் ஆப்கானை விட்டு வெளியேறினாலும், அமெரிக்காவின் கண்காணிப்பு தொடரும் என்று தனது எதிரிகளுக்கு தெரிவித்துள்ளார் ஒபாமா. அதேவேளை பராக் ஒபாமா வந்திறங்கியதை எப்படியோ மோப்பம் பிடித்த தலபான்கள் இரண்டு தற்கொலைக் குண்டு தாக்குதல்களை தலைநகர் காபூலில் நடாத்தினார்கள். இத்தருணம் ஐந்து பொது மக்கள், ஒரு படையினர் உட்பட அறுவர் மரணமடைந்து, 17 பேர் படுகாயமடைந்தனர். பராக் ஒபாமாவுக்கு தாம் விடுக்கும் இறுதி எச்சரிக்கை இதுவென்று தலபான்கள் அறிவித்துள்ளனர். குண்டு வெடிக்க வெடிக்க பணியாற்றும் வீரர் ஒபாமா என்ற செய்தியை இந்தப் பயணம் மிற் றொம்னிக்கு விடுத்துள்ளது.

மறுபுறம் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் தகுதியை மிற் றொம்னி நெருங்கிக் கொண்டிருக்கிறார். இவருடன் போட்டியிட்ட நியூற் கிங்கிறிட்ஜ் இன்று உத்தியோகபூர்வமாக விலகினார். தொடர்ந்து போட்டியிட்டாலும் மிற் றொம்னியை வெற்றிபெற இயலாது என்ற நிலையில் பின்வாங்கியுள்ளார்.

அதேவேளை அமெரிக்க அதிபர் காவார்ட் பல்கலைக்கழகத்தில் தான் முதலிடத்திலும் மிற் றொம்னி இரண்டாமிடத்திலும் இருந்தார் என்று சென்ற வாரம் விட்ட பகடிக்கு பதிலடி கொடுத்த றொம்னி இது ஐரோப்பிய பாணியிலான இரண்டாந்தர பகடி என்று கேலி செய்தார். அதற்கு பதிலடி கொடுத்த பராக் ஒபாமா ஐரோப்பா குறைவானது என்று கருதும் றொம்னி தனது பணத்தில் பெரும் பகுதியை சுவிஸ் வங்கியில்தான் போட்டு வைத்திருக்கிறார், மேலும் அவருடைய பணம் காமாக் தீவுகளிலும் முதலீடாகியுள்ளது. இப்படி அமெரிக்க பணத்தை ஐரோப்பாவில் கொட்டியுள்ள மிற் றொம்னி ஓர் அமெரிக்க பணக்காரர் என்றும், அவருடைய பணத்தால் அமெரிக்க பொருளாதாரத்தை உயர்த்தலாம் என்றும் கூறுவது கேலிக்குரிய விடயம் என்று பதிலடி கொடுத்துள்ளார். இம்முறை அமெரிக்க தேர்தலில் பொருளாதாரம், வேலை வாய்ப்பு ஆகிய இரண்டு விடயங்களே முக்கியம் பெறும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கு அமைவாக றொம்னியின் பொருளாதாரத்தின் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளார் ஒபாமா.

இப்படி ஆங்காங்கு ஜனநாயகக் கூத்தாட்டங்கள் நடக்க கடந்த ஒரு வாரமாக பர்மீய பாராளுமன்றத்திற்கு சத்தியப்பிரமாணம் எடுத்து போக மறுத்த அவுங்சாங் சுகி அம்மையார் தனது என்.எல்.டி கட்சியின் 33 உறுப்பினர்களுடன் பாராளுமன்றம் போய் அமர்ந்தார். இவருடைய வருகை பர்மீய ஜிந்தாக்களுக்கு சர்வதேச உதவிகளை பெற வழி திறந்துவிட்டுள்ளது.

தற்போது உலகம் முழுவதும் நடைபெறும் அரசியல் நிகழ்வுகளும், நகர்வுகளும் ஒரு செய்தியை உலக மக்களுக்கு தெட்டத் தெளிவாக தெரிவிக்கிறது. ஜனநாயக முறையில் அனைத்து நாடுகளும் தமது பிரச்சனையை தீர்க்க வேண்டும். சர்வதேச சமுதாயம் போட்டுள்ள சுருதி பிழைத்த அபசுரமான தாள ஒழுங்கிற்கு கோமாளிகள் போல அனைத்து உலகத் தலைவர்களும் ஆட வேண்டும், இதுதான் ஜனநாயகம். இந்த தாளம் பிழைத்த கூளத்திற்கு ஆடாவிட்டால் பின்லேடனுக்கு ஏற்பட்ட கதிதான் அனைவருக்கும் என்பது தெட்டத் தெளிவாக தெரிகிறது. இது 21ம் நூற்றாண்டின் அரசியல் போக்கு அவ்வளவுதான்.

அலைகள்

0 Responses to கிழட்டு ஒஸாமாவை கொன்ற முரட்டு ஒபாமாவின் போலி வீரம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com