புதுக்கோட்டை தொகுதியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துக்குமரன். கடந்த 1-ந்தேதி கட்சி தொண்டர் மறைவுக்கு துக்கம் விசாரிக்க சென்றபோது கார் கவிழ்ந்து மரணம் அடைந்தார்.
இதையடுத்து புதுக்கோட்டை தொகுதிக்கு ஜுன் 12-இல் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.க.வேட்பாளராக கார்த்திக் தொண்டைமானை முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்த நிலையில் தி.மு.க. புதுக்கோட்டை தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், அப்படி போட்டியிட்டால் யாரை வேட்பாளராக நியமிக்கலாம் என்பது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆனால் எந்தவொரு முடிவும் எடுக்கப்படாமலேயே கூட்டம் முடிவடைந்தது.
இந்நிலையில் இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அவரது கோபாலபுரம் இல்லத்தில் கூறியுள்ளதாவது:-
புதுக்கோட்டை இடைத்தேர்தலை தி.மு.க. புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் இணைந்து தேர்தல் தேதியை நிர்ணயித்ததால் ஆளும் கட்சியைத் தவிர மற்ற கட்சிகளின் தோல்வி உறுதியே. இடைத்தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்னரே அ.தி.மு.க அதன் வேட்பாளரை அறிவித்தது.
மேலும், இடைத்தேர்தல் எப்போதும் ஆளும் கட்சிக்கே சாதகமாக இருப்பதால் இடைத்தேர்தல் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம். ஆகவே, புதுக்கோட்டை தேர்தலை தி.மு.க. போட்டியிடவில்லை. என்று கூறினார்.
முன்னதாக, புதுக்கோட்டை தொகுதியில் சென்றமுறை வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இத்தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து பா.ம.க.வும் போட்டியிடவில்லை என அறிவித்தது.
பிற முக்கிய கட்சிகளான ம.தி.மு.க.வும், தே.மு.தி.க.வும் தங்கள் கட்சிகளின் நிலைபாடு என்ன என்பதை இதுவரை தெரிவிக்கவில்லை.



0 Responses to புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடவில்லை | கருணாநிதி