இந்த நாட்டில் அரசாங்கத்திற்கு நாங்களும் வரிப்பணம் செலுத்திக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அந்த வரிப்பணத்தின் மூலம் எமது பிரதேசத்திற்கும் மக்களின் வாழ்க்கைக்கும் எந்தவிதமான உதவிகளும் செய்யப்படுவதில்லை, இன்னமும் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அந்த மக்களுடைய நிலங்களை இராணுவத்தினர் ஆக்கிரமித்து இருந்து கொண்டு, மீள்குடியேற விடாமல் அடாவடி புரிந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் நாங்கள் இந்த மே தினத்தில் ஒரு அறைகூவலை விடுக்கின்றோம்.
இராணுவமே வெளியேறு, யுத்தம் நிறைவடைந்து விட்டது. நாங்கள் எங்கள் நிலத்தை ஆள வேண்டும். எங்கள் நிலத்தில் வாழ வேண்டும். நீ உன் நிலததிற்குப் போ என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தின் பின்னர் எழுச்சி பூர்வமாக இடம்பெற்றிருந்த மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
இதில் தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
இன்று ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அது தமிழர்களைப் பொறுத்தவரை சாதகமானதொன்றாக அமையாவிடினும், அதில் கூறப்பட்டிருக்கின்ற தமிழர் பகுதியின் நில ஆக்கிரமிப்பு, இராணுவ வெளியேற்றம், மற்றும் அரசியல் தீர்வு போன்ற விடயங்களை அரசாங்கம் நிறைவேற்றியே ஆகவேண்டும்.
அரசியல் ரீதியான போராட்டத்தில், ஆயுத ரீதியான போராட்டத்தில் தமிழர்களை தோற்கடித்து விட்டதாக கூறிக்கொண்டிருந்தாலும், இன்று நடந்து கொண்டிருக்கும் இராஜதந்திரப் போராட்டத்தில் எம்மை தோற்கடிக்க முடியாது.
கடந்த 60வருடங்கள் எங்களை ஏமாற்றியதுபோதும், இனியும் நாங்கள் ஏமாந்து போவதற்குத் தயாராகவில்லை. எங்களின் சுயத்தை அழித்து முடித்துக்கட்ட எடுக்கப்படும் முயற்சிகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றார்.
இதனைத்தொடர்ந்து, அங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்,
எங்களின் விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட்டு, அதிலிருந்து எமது மக்களை காப்பாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறப்பட்டது. ஆனால் புலிகள் வைத்திருந்தனர் என்ற பெயரில் எங்கள் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
புலிகள் வைத்திருந்தனர். புலிகள் செய்தனர் என்பதற்காக அரசும் இராணுவத்தினரும் இணைந்து அதனையே செய்தால், இராணுவத்தினரின் பயங்கரவாதத்தை எப்படி எவ்வாறு நாங்கள் சொல்லிக் கொள்வது என்பது தெரியவில்லை.
எங்களின் விவசாய நிலங்களில், எங்களின் கடல்களில், எங்களின் குளங்களில் இறங்க முடியவில்லை. இந்த நிலையில் பயங்கரவாதத்தை எதிர்த்து தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இணைந்து நடத்தவேண்டும் என்றார்.
தொடர்ந்து ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தனதுரையில்,
கிளிநொச்சி மண் ஒரு மகத்தான மண் இந்த மண்தான் உலகம் வியந்த வீரத்தையும், அதன் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் கண்டிருந்த மண், இங்கிருந்தே தீர்மானங்கள் எடுக்கப்படவேண்டும்.
இங்கிருந்தே பிரகடனங்கள் வெளியிடப்படவேண்டும். இதுதான் தமிழர்களின் இருதய பூமி. மேலும் இன்றிருக்கின்ற அரசாங்கம், ஒரு முட்டாள்தனமான அரசாங்கம். அதனால்தான் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் இந்த அரசாங்கம் படுதோல்வி கண்டிருக்கின்றது.
அதேபோன்று அன்று கொழும்பில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை தட்டிக்கேட்டபோது நாங்கள் புலிகள் என்றும் எங்களை புலி ஆதரவு சக்திகள் என்றும் சிங்களவர்கள் பேசியிருந்தனர்.
அன்று இனவாதம் பேசியவர்கள், இனவாதம் கக்கியவர்கள் இன்று அரச பயங்கரவாதத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் நடராஜா குருபரன் தனதுரையில் குறிப்பிடுகையில்,
அரசாங்கம் இராணுவத்தின் இறைமை குறித்து பேசிக் கொண்டிருக்கின்றது. ஆனால் உண்மையில் அவை தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகள் என்பதை நாங்கள் நினைவில் கொள்ளவேண்டும். எங்களின் இராஜதந்திரப் போராட்டம் நிச்சயமாக வெற்றிபெறும்.
இன்று தம்புள்ளவில் இடம்பெற்றது. நாளை இன்னும் பல இடங்களில் இடம்பெறும் என்பதை நாங்கள் நினைவில் கொள்ளவேண்டும். என்றார்.
இந்த நிகழ்வு கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபை மண்டபத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளர் வேழமாலிகிதன் தலைமையில், மண்ணுக்காக மரணித்துப்போன மாவீரர்களிற்கும், மக்களிற்கும் அகவணக்கம் செலுத்தி ஆரம்பமானது. இந்த நிகழ்வில் நூற்றுக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.



0 Responses to இராணுவமே வெளியேறு! | மேதினக் கூட்டத்தில் மாவை சேனாதிராசா