Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“பூடம் தெரியாம சாமி ஆடலாமா..?” என்றொரு கிராமத்துச் சொலவடை உண்டு. அப்படி ஒரு காரியத்தைத்தான் பரமக்குடி எம்.எல்.ஏ.வும் அதிமுக அமைச்சருமான சுந்தர்ராஜ் செய்திருக்கிறார். பேசக்கூடாத இடத்தில் பேசத்தெரியாமல் பேசி ஊர் மக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்து, கல் வீச்சுக்கு ஆளாகி தப்பியோடியிருக்கிறார்.

அப்படி எந்த ஊரில் என்ன நடந்தது?

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள புல்வாய்குளம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (06.05.2012) நடைபெற்ற அதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அமைச்சர் சுந்தர்ராஜ் கலந்து கொண்டார்.

திருமணவிழா நடக்கும் இடத்திற்கு அருகில், கட்சி பாகுபாடின்றி அனைத்து சமூகத்தினரும் ஏற்பாடு செய்திருந்த அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது.

திருமணவிழாவில் கலந்துகொண்ட அவர், அருகில் உள்ள கோவிலில் அன்னதான நிகழ்ச்சி நடைபெறுவதைக் கேள்விப்பட்டு அங்கு சென்றார்.

அன்னதான பந்தலில் திடீரென தோன்றிய அமைச்சர் சுந்தர்ராஜ், “தமிழக முதல்வர் அம்மாவால் (ஜெயலலிதா) இது போலவே அனைத்து கோயில்களிலும் அன்னதானம் நடக்கிறது. இங்கு நடைபெறும் அன்னதானத்திற்கும் அம்மாதான் காரணம்..” என்று சட்டசபையில் பேசுவது போலவே ஜெ. புகழ் பாடியிருக்கிறார்.

‘என்னடா இது..? பூடம் தெரியாமல்ல அமைச்சரு சாமி ஆடிட்டாரு.. நாம கட்சி பார்க்காம.. சாதி பார்க்காம.. எல்லாரும் ஒற்றுமையா இருந்து ஒரு அன்னதான நிகழ்ச்சிய நடத்திக்கிட்டிருக்கோம்.. இந்த அமைச்சரு என்னன்னா அவரு பாட்டுக்கு இங்க வந்து அந்தம்மாவ தூக்கி வச்சி பேசுறாரு.. ஒரு பொது நிகழ்ச்சில கட்சி நிகழ்ச்சில பேசுற மாதிரியா பேசுறது..? அமைச்சர யாரு அழைச்சது..? ஏன் இந்த மாதிரி பேசி ஒற்றுமையா இருக்கிற சனங்கள கோபப்பட வைக்கணும்.?’ என்கிற ரீதியில் ஆளாளுக்கு அங்கே அமைச்சருக்கு எதிராக குரல் உயர்த்தியிருக்கிறார்கள். அமைச்சரின் பேச்சுக்கு விழா ஏற்பாட்டாளர்களிடமிருந்து வெளிப்பட்ட கடும் எதிர்ப்பினைக் கண்ட அதிமுக வினரும் காரசாரமாகப் பேசியிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, விழா ஏற்பாட்டாளர்களுக்கும் அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. அமைச்சர் இருந்த மேடையை நோக்கி கல்வீச்சும் நடந்தது. இதனால் அப்பகுதியே பதற்றமானது. தன் பக்கம் ஆள் பலம் குறைவாக இருந்ததை உணர்ந்த அமைச்சர் சுந்தர்ராஜ், அந்த இடத்தை விட்டு நழுவி ஓடிவிட முடிவு செய்தார். தன்னுடன் வந்த ஒரு காரை பாதுகாப்புக்காக முன்னே போகவிட்டு, தான் வந்த காரில் ஏறி தப்பி ஓடினார்.

நேற்று நடந்த இச் சம்பவம் வெளியே தெரியாமல் இருப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அமைச்சர் செய்தார். இருப்பினும் இந்த கல்வீச்சு சம்பவம் கசிந்துள்ளது.

தன் பேச்சால் இப்படி ஒரு சம்பவம் நடந்தது வெளியே தெரிந்தால் அமைச்சர் பதவிக்கே ஆபத்து வந்து விடும் என்று பயந்த சுந்தர்ராஜ், வெளி உலகத்துக்கு இது தெரியாதபடி செய்வதற்கு அத்தனை ஏற்பாடுகளையும் செய்தார். ஊர் வாயை அடைக்க முடியுமா என்ன? அமைச்சருக்கு எதிராக நடந்த கல்வீச்சு குறித்து அவர்களே தகவலை பரப்பி விட்டார்கள்.

0 Responses to ‘பூடம் தெரியாம சாமி ஆடிய’ அதிமுக அமைச்சர் மீது கல்வீச்சு! காரில் ஏறி தப்பி ஓடினார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com