இலங்கையில் ஈழத்தமிழர்களின் இரத்தம் புத்த பகவான் காலடியில் மட்டுமல்ல, தலைநகர் முழுவதிலும் ஓடிய அந்த நாட்கள், ஒவ்வொரு ஈழத்தமிழனின் மனதிலிருந்து அழிக்க முடியாத காயங்களை ஏற்படுத்தியிருந்தது.
கறுப்பு ஜுலைக் கலவரம் ஆரம்பித்து இருபத்தொன்பது வருடங்கள் பூர்த்தியாகின்றன. அன்றைய ஜுலை நினைவுகள் எம்முன் வரும் அதேவேளை, தமிழர்கள் மீதும் தமிழர் தேசமெங்கும் இன்றும் பல ஜுலையை விதைத்தபடி உள்ளது சிங்கள பௌத்த இனவாதம்.
தமிழர்களுக்கெதிரான படுகொலைக் கலாசாரத்தை 1983 ஆம் ஆண்டு ஜுலை 23ஆம் திகதி ஐ. தே.க. ஆட்சியே ஆரம்பித்து வைத்தது. அன்றிலிருந்து இன்றுவரை ஆட்சிபீடமேறும் அனைத்து பெரும்பான்மையின கரங்களும் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவுகொள்ளும் தந்திரோபாய அரசியலையே நடத்திவந்தன.
அன்று..
1983 ஆம் ஆண்டு 23ஆம் திகதி யாழ். திருநெல்வேலிப் பிரதேசத்தில் 13 இராணுவத்தினர் அழிக்கப்பட்ட செய்தியால் நிலை தடுமாறிப் போன சிங்கள இயந்திரங்கள், கொழும்பில் வாழ்ந்த தமிழர்களை அழிக்கத் திட்டமிட்டனர். இதனையடுத்து, ஜுலை 24, 25ஆம் திகதிகளில் கொழும்பில் தமிழர்கள் வாழ்ந்த இடமெங்கும் தேடித் தேடி அழித்தனர்.
3000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதுடன், அவர்களின் சொத்துக்கள் வாழ்விடங்கள் அழித்தொழிக்கப்பட்டு, சிங்கள காடையர்களால் கொள்ளையடிக்கப்பட்டன.
அன்றைய சம்பவங்களில், வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலை எல்லோரையும் உறைய வைத்த சம்பவமாகும். ஜுலை 25ஆம் திகதி 33 கைதிகளும் ஜுலை 28ஆம் திகதி 18 கைதிகளும் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்தப் படுகொலையின் பொழுதே குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உட்பட பல பேர் மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். சிறைச்சாலையும் தமிழர்களின் இரத்தத்தில் நீந்தியது.
இதனையடுத்தே தமிழர்களின் விடுதலைப் போராட்டம் வீரியமடைந்தது என்று கூறலாம். மேலும், சிங்கள அரசினால் தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்கு முறைகளும் குரோத எண்ணங்களும் 2009 மே இல் அதிகமாகியது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் கொலை செய்யப்பட்டு, பல இலட்சக்கணக்கான மக்கள் அநாதைகளாக்கப்பட்டு இன்று வரை தமது வாழ்விடங்களை எதிர்பார்த்து நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கையைப் பொறுத்தவரையில் ஆட்சியில் யார் ஏறினாலும் அடக்கப்படுவது தமிழனம் மட்டுமே. சித்திரவதைகளும் படுகொலைகளும் உரிமை மறுப்புக்களுமே தமிழர்கள் விடுதலையை நாடும் சிந்தனைகளைத் தோற்றுவித்தது எனலாம்.
சிங்களப் பேரினவாத ஆட்சியை தமிழர்கள் மீது திணிக்கவே காலம் காலமாக இந்த வன்முறைகள் நடத்தப்பட்டன. பேரினவாத அரசியலுடன் தமிழ் அரசியல் தலைமைகள் நடத்திய போராட்டத்தின் தோல்வி நிலையிலும் தமிழர்கள் மீதான படுகொலைக்கு எதிராகவுமே விடுதலைப் புலிகளும் ஏனைய போராளி இயக்கங்களும் தேற்றம் பெற்றன. தனி ஈழம் என்கிற போராட்டமும் பரிணமித்தது.
அதனைத் தொடர்ந்து, யுத்தங்கள் மூலமாகவும் வேறுபல வன்முறைகள் மூலமாகவும் தமிழிழனப் படுகொலை மிக அதிகரித்தது. அதன் பின்னர் தமிழர்கள் புலிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு தொடர் படுகொலைகளில் அழிக்கப்பட்டார்கள். அந்த படுகொலை இன்றைய காலம் வரை தொடர்கிறது.
இன்று…..
கடந்த மாதம் 29 ஆம் திகதி வவுனியா சிறைச்சாலையில் நடந்த படுகொலைச் சம்பவம் இரத்தக் கறைபடிந்த ஆடிக் கலவரத்தின் தொடராகவே பார்க்கத் தோன்றுகிறது. அன்று சிங்களக் கரங்களால் சிறைச்சாலையில் விதைக்கப்பட்ட வலிகளும் ரணங்களும் தமிழர்கள் மத்தியில் மாறாத நிலையில், இது மேலும் மரண வலியை ஏற்படுத்தி விட்டது.
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் இருவர் எவ்வித காரணமும் இன்றி வேறு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தனர். அவர்களை மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கு அழைத்துவருமாறு, அங்குள்ள 30 தமிழ் அரசியல் கைதிகள், மூன்று சிறை அதிகாரிகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.
இச்சம்பவத்தையடுத்து, மரணம் படிந்திருந்த அந்த இருப்புக் கரங்களில் கைதிகளின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. இந்நிலையில், அன்றைய தினம் அப்பாவித் தமிழன் ஒருவனின் உயிரை இரும்புக் கரங்கள் பற்றிக் கொண்டன.
பூட்டிய இரும்புக் கதவுகளின் பின்னால் காலத்திற்கு காலம் அரங்கேறும் சம்பவங்கள் எமக்கான உரிமைகள், சுதந்திரத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி நிற்கின்றன.
உரிமைகள் மறுக்கப்பட்டு, பறிக்கப்பட்டு, தமிழர்கள் மத்தியில் அரங்கேற்றப்படும் படுகொலைக் கலாசாரத்தினை இன்றும் மக்கள் எதிர்கொள்கின்றனர். இவ்வாறான சம்பவங்களினால் தமிழர்களின் எதிர்காலமே கேள்விக் குறியாகி உள்ளது.
இந்நிலையில், இலங்கை அரசின் தந்திரோபாய இன அழிப்பு நாடகம் தொடர்ந்தால், மீண்டுமொரு விடுதலைப் போராட்டம் எழும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.



0 Responses to இரத்தத்தில் தோய்ந்த அந்த நாட்கள்!