Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது ஐ.நா அங்கு பொதுமக்களை பாதுகாக்க தவறியுள்ளது எனும் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்வதாக ஐ.நாவின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

ஐ.நாவின் பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றவில்லை. இவ்விவகாரத்திலிருந்து ஐ.நா  பாடங்கள் சிலவற்றை கற்றுக்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஐ.நா தனது பொறுப்புக்களை நிறைவேற்றியதா என்பது குறித்து மீளாய்வு அறிக்கை ஒன்று பான் கீ மூனிடம் ஒப்படைக்கப்பட்டது. சார்லஸ் பெட்டரி தலைமையிலான குழுவினர் கடந்த எட்டு மாதங்களாக விசாரணை நடத்தி இந்த அறிக்கையை தயார் செய்திருந்தனர்.  அவர்கள் தமது ஆய்வின் முடிவில், ஐ.நா அமைப்பின் பாதுகாப்பு பேரவை, மனித உரிமை பேரவை, ஐ.நா முகவர் நிறுவனங்கள் உள்ளிட்டன உரிய முறையில் தமது கடமையை செய்யவில்லை என தெரிவித்திருந்தன.

இந்த அறிக்கை பான் கீ மூனுக்கு சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் பிபிசிக்கு கசிந்திருந்ததை அடுத்து ஊடக கவனம் பெறத்தொடங்கியது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தமக்கு ஆலோசனை வழங்குவதற்க் ஊடனடியாக சிரேஷ்ட உறுப்பினர்களை கொண்ட குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் விரைவில் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ள பான் கீ மூன், இந்த மீளாய்வு அறிக்கையை பகிரங்கப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ஐ.நா அமைப்பின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இறுதியுத்தத்தின் போது அதிகளவிலான பொதுமக்களின் உயிர்கள் காவுகொல்லப்பட்டமைக்கு ஐ.நாவும் காரணமாகியுள்ளது இந்நடவடிக்கைகளில் புலப்படுகின்றதுடன்,  ஐ.நா மீது நேரடியாக குற்றம் சுமத்துவதற்கு காரணத்தை இது ஏற்படுத்தியுள்ளது.

எனினும் அதற்கு முன்னர் இவ்விவகாரத்தை தானே பகிரங்கப்படுத்தி, பாடங்களை கற்றுக்கொண்டுவிட்டதாக ஐ.நா கூறியிருப்பதன் மூலம் தனது தவற்றுக்கான அதிருப்தியை மட்டுப்படுத்திக்கொள்ள முனைகிறதா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.

இதேவேளை ஐ.நா சபை இலங்கையில் விட்ட தவறுகளை, எதிர்வரும் காலங்களில் மீண்டும் விடக்கூடாது என்ற உறுதியை வழங்க வேண்டும் என சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் கொலைக்களம் டாக்குமெண்டரி திரைப்படத்தை இயக்கிய கேலும் மெக்ரே இதனை தெரிவித்துள்ளார். வி.புலிகளுக்கு எதிரான போரை இலங்கை அரசு ஆரம்பித்த போது, இந்த செயற்பாடுகளுக்கு சாட்சியங்களுக்கு இல்லாது செய்யும் பணிகளை திட்டமிட்டு நடத்தியது. அதன் அடிப்படையிலேயே வடக்கிலிருந்து ஊடகங்கள் முதற்கட்டமாக வெளியேற்ரப்பட்டன. பின்னர் சர்வதேச ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டன. இறுதியில் ஐ.நாவும் வெளியேறிக்கொண்டது.

இதன் மூலம் இறுதி போரின் போது பொதுமக்களுக்கு ஏறட்ட இழப்புக்கள் வெளிவராது போயின. இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகள் நடைபெறாதிருக்கவும், ஐ.நா மீதான நம்பிக்கை பேணப்படவும், ஐ.நா சபை அதற்கு ஈடான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கெலும் மெக்ரே தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடக்கு கிழக்கில் யுத்தம் தீவிரமடையத்தொடங்கிய போது யுத்த பிரதேசங்களிலிருந்து ஐ.நா அதிகாரிகள் வெளியேறியதை தனது இலங்கையின் கொலைக்களம் டாக்குமெண்டரி ஊடாக வீடியோ பதிவுகளில் சாட்சியாக வெளிக்கொணர்ந்தார் கெலும் மெக்ரே. இதையடுத்தே இவ்விவகாரம் சர்ச்சைக்கு உள்ளாகியிருந்தது. அங்கிருந்த ஐ.நா அதிகாரிகளின் உயிர்களுக்கு தம்மால் உத்தரவாதம் அளிக்க முடியாது என இலங்கை அரசு கைவிரித்ததை தொடர்ந்து அவர்கள் உடனடியாக கொழும்பு திரும்பியிருந்தனர். எனினும் அனுபவமில்லாத ஐ.நா அதிகாரிகள் அப்போது இலங்கையிலிருந்ததால் இலங்கை அரசின் மிரட்டலுக்கு அடிபணிந்துவிட்டதாக மீளாய்வு அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to தமிழ் மக்களை பாதுகாக்க தவறியது ஐ.நா: ஒப்புக்கொண்டார் பான் கீ மூன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com