Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு, கிழக்கில் ‘சந்தேக நபர்களைத் தேடுகிறோம்’ என்கிற ரீதியில் இராணுவமும், பொலிஸாரும் மேற்கொண்டுவரும் தேடுதல்களினால் பெண்கள் தொடர்ந்தும் தொல்லைக்குள்ளாவதாகவும், கடந்த மாதத்தில் மேலும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டு பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பெண்ணுரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

சமீபத்தில் மீண்டும் ஆரம்பித்துள்ள தேடுதல் நடவடிக்கைகளின் போது, ஜெயக்குமாரி பாலேந்திரன் என்கிற குடும்பத்தலைவி கைது செய்யப்பட்டார். இதே காலப்பகுதியில், அதாவது மார்ச் மாதம் 11ஆம் திகதி சர்மிளா கஜீபன் என்ற 26 வயது, கர்ப்பிணிப் பெண்ணை இராணுவத்தினர் கைது செய்தனர். அடுத்த நாள் குறித்த பெண், ரயில் மூலமாகப் கொழும்பில் உள்ள குற்றத் தடுப்புப் பிரிவிற்கு (நாலாம் மாடி) கொண்டு செல்லப்பட்டதாக பெண்ணுரிமை அமைப்புக்களை மேற்கொள்காட்டி பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

அத்தோடு, இந்தத் திடீர் கைது மற்றும் விசாரணைகள் காரணமாக மூன்று மாதக் கர்ப்பமாக இருந்த சர்மிளாவின் கரு 14 ஆம் திகதியன்று காலை கலைந்து விட்டதாகவும், அந்த நிலைமையில் சாதாரணமாக ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய மருத்துவ உதவிகளோ, மருத்துவ கவனிப்போ அவருக்கு வழங்கப்படவில்லை என்றும் பெண்ணுரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

மாறாக, அதே நிலைமையில் கொழும்பில் இருந்து மீண்டும் ரயில் மூலமாக, அவரை பூஸா தடுப்பு முகாமுக்குக் கொண்டு சென்றுள்னனர். பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவருக்கு, எவ்விதமான அடிப்படை வசதிகளும், மருத்துவ உதவிகளும் வழங்கப்படவில்லை. ஆனால், தொடர்ந்து அவர் விசாரணை செய்யப்பட்டு வருகின்றார் என்று அந்த அமைப்புக்கள் கூறுகின்றன.

இதனிடையே, சந்தேகத்தின் அடிப்படையிலேயே சர்மிளா கஜீபனைக் கைது செய்துள்ளதாகக் குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். அதாவது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த கோபி என்ற நபரின் மனைவியே சர்மிளா என்றும், கோபி இருக்கும் இடத்தைக் கண்டறிவதற்காகவே சர்மிளாவைத் தாங்கள் கைது செய்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், தனது கணவனுடைய பெயர் கஜீபன் எனவும், அவர் கிளிநொச்சி இயக்கச்சியைச் சேர்ந்தவர் எனவும், சவூதி அரேபியாவில் தொழில் செய்துவிட்டு நாடு திரும்பியவர் என்றும் சர்மிளா கூறுகின்றார்.

இவ்வாறே கஜீபனின் தாயாராகிய செல்வநாயகி இராசமலர் என்ற 63 வயது பெண்ணையும் கைது செய்து பூஸா முகாமில் தடுத்து வைத்திருக்கின்றனர். தனது மகனுடைய பெயர் கோபி அல்ல என்றும், கஜீபன் என்பவரே தனது மகன் என்றும் அவரும் கூறுகின்றார். செல்வநாயகி இராசமலர் மோதல் காலத்தில் ஷெல் வீச்சுச் சம்பவம் ஒன்றில் காயமடைந்துள்ளார். இவருடைய உடலில் ஈரலுக்கு அருகில் ஷெல் துண்டு ஒன்று எடுக்க முடியாத நிலையில் இருக்கின்றது. அறுவைச் சிகிச்சையின் மூலமாகவும் அதனை அகற்ற முடியாது என்ற காரணத்தினால், அவருக்கு தொடர்ச்சியாக மருத்துவ உதவி அவசியமாக இருக்கின்றது. அப்படி இருந்தும் பூஸா தடுப்பு முகாமில் இவருக்கும் எவ்வித மருத்துவ உதவியும் வழங்கப்படவில்லை என்றும் பெண்ணுரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இலங்கையில் 2009ஆம் ஆண்டு மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின்னர், விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றாக இல்லாது ஒழிக்கப்பட்டது என அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால், தற்போது புலிகள் மீள்எழுச்சி பெறுவதாகக் கூறி இராணுவம் மீண்டும் ஆங்காங்கே சுற்றிவளைப்புகள், தேடுதல் நடவடிக்கைகள் என்பவற்றை மேற்கொண்டு வருகின்றது என்று அந்த அமைப்புகள் கூறுகின்றன.

இராணுவத்தின் இந்த தேடுதல் நடவடிக்கைகளின்போது, ஆண்கள், பெண்கள், வயோதிகர்கள், சிறுவர்கள் என வயது, பால் வித்தியாசமின்றி பலரையும் இராணுவம் கைது செய்து வருகின்றது என பெண்ணுரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

இதனிடையே, சுற்றி வளைப்புக்கள் மற்றும் தேடுதல்களின்போது கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹணவிடம் பி.பி.சி கேள்வியெழுப்பியுள்ளது. அதன்போது, இதுவரையில் ஏழு பெண்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதம் மீண்டும் இந்த நாட்டில் உருவாகுவதற்கும், இனங்களுக்கிடையில் அமைதியின்மையை ஏற்படுத்தி, நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது, உள்ளிட்ட பல்வேறு காரியங்களை மேற்கொள்பவர்களுக்கு, ஏழு பெண்களும் பாதுகாப்பும் உதவிகளும் வழங்கியிருக்கின்றார்கள். அதற்காகவே அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்று பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, தங்களால் கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் எவருக்கும் கருச்சிதைவு ஏற்படவில்லை என்றும், பயங்கரவாதப் புலனாய்வு பிரிவின் பணிப்பாளரும் அத்தகைய சம்பவம் இடம்பெறவில்லை என்று தங்களுக்குக் கூறியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் அனவைரும் அரசாங்கத்தின் தடுப்பு முகாம்களிலேயே தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களுடைய உறவினர்களோ, சட்டத்தரணிகளோ யார் வேண்டுமானாலும் அவர்களைச் சென்று பார்வையிடலாம். அவர்களை மனித உரிமை அமைப்புக்கள், மனித உரிமை ஆணைக்குழுவினர் போன்றவர்கள் சென்று பார்வையிட்டுள்ளார்கள். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மருத்துவ வசதிகள் என்பன செய்யப்பட்டிருக்கின்றன. அவ்வாறான வசதிகள் கிடைக்கவில்லை என்று கூறுவது அப்பட்டமான பொய்யாகும் என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to வடக்கு, கிழக்கில் இராணுவ தேடுதல்களினால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: பெண் அமைப்புக்கள் குற்றச்சாட்டு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com