Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் பேசுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தென்னாபிரிக்காவிற்கு செல்லவுள்ளமை, இலங்கை மீதான ஐக்கிய நாடுகளின் சர்வதேச விசாரணையை எந்த விதத்திலும் பாதிக்காது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தென்னாபிரிக்க விஜயத்திற்கும், இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கும் இடையே எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சூமா, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்தில் இலங்கை அரசாங்கத்துடனும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும் பேசி தமது அனுபவங்களை பகிர்ந்துகொள்ள முன்வந்திருந்தார்.

அந்த அழைப்பின் பிரகாரம், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழுவொன்றும் அண்மையில் தென்னாபிரிக்கா சென்று திருப்பியது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மார்ச் மாத கூட்டத் தொடர் நடைபெற்ற பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தென்னாபிரிக்கா சென்று பேச்சுக்களை நடத்துவதாகவும் முடிவாகியிருந்தது. அந்த முடிவுகளின் படியே இன்று புதன்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழுவொன்று தென்னாபிரிக்கா செல்லவுள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அடிப்படை காரணங்கள், அவற்றைத் தீர்ப்பதற்கான வழிகள் ஆகியவை தொடர்பில் சகல விதமான விடயங்கள் பற்றி இந்த விஜயத்தின்போது பேச்சு நடத்தப்படும் என்று கூறிய அவர், ஐக்கிய நாடுகளினால் மேற்கொள்ளப்படவுள்ள சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்று (இலங்கை) அரசாங்கம் கூறியிருப்பது நல்ல முடிவல்ல என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to கூட்டமைப்பின் தென்னாபிரிக்க விஜயம் ஐ.நா. விசாரணைகளைப் பாதிக்காது: இரா.சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com