Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு கிழக்கு மாகாணங்களானவை தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பகுதிகள் ஆகும்.

ஆனால், இரண்டு மாகாணங்களையும் இணைக்கும் பகுதிகளில் இராணுவத்தைக் கொண்டு அரசாங்கம் திட்டமிட்ட வகையில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றது. இது, தமிழ்ப் பிரதேசங்களின் அடையாளங்களை அழிக்கும் செயற்பாடு என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில் இன்று வியாழக்கிழமை ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையமொன்றினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சி.வி.விக்னேஸ்வரனின் உரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வடக்கு கிழக்கு மாகாணங்களானவை எமது தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரிய இடங்கள். இப்பொழுது அவற்றின் தொடர்புகளைக் கொச்சைப்படுத்த, தமிழரின் முழுமையான தொடர் இடம் என்ற கருத்தை அப்புறப்படுத்த அரசாங்கத்தினால் பலவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கிழக்கும் வடக்கும் சேரும் இடங்களைத் தொடர் தமிழ்ப் பிரதேசம் என்று அடையாளம் காட்டாதவாறு சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று முந்தைய நாள் கொக்குளாய், கொக்குத்தொடுவாய் போன்ற இடங்களைச் சென்று பார்த்தேன். களப்பின் அடுத்த பக்கத்தில் கிழக்கு மாகாணக் கிராமமான தென்னைமரவாடி இருக்கின்றது. தொடர்ச்சியாகத் தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்ந்த அந்த இடத்தில் தமிழர் தாயகம் தொடர்ச்சியாக என்றுமே இருந்ததில்லை என்று காட்டும் நோக்கில் அங்கு சுமார் 350 சிங்களக் குடும்பங்கள் கொண்டு வரப்பட்டு குடியேற்றப்பட்டுள்ளார்கள். முன்னர் நீர்கொழும்பில் இருந்து காலத்திற்குக் காலம் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சியின் போது சில மாதங்களுக்கு மீன் பிடிப்பில் ஈடுபட அங்கு வந்தவர்கள் தற்போது தமது குடும்பங்களையும் கொண்டு வந்து குடியேறியுள்ளார்கள். இவர்களுள் முன்னர் அங்கு வந்து சென்ற சிங்கள மீன்பிடியாளர்களை விட வேறு நூற்றுக்கணக்கான பலரும் அடங்குவர். சிறிது சிறிதாக அவர்களின் ஆக்கிரமிப்பு நடந்தேறிக் கொண்டிருக்கின்றது.

இதை ஏன் கூறுகின்றேன் என்றால் இன்றைய காலகட்டம் மிகப் பொல்லாத காலகட்டமாக மாறியுள்ளது. மிக வேகமாக, மிக உக்கிரமாக ஆக்கிரமிப்பும் வெளியார் குடியேற்றங்களும் இராணுவ உதவியுடன் வடகிழக்கு மாகாணங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. நாம் வெளிநாட்டில் இருந்து வந்து நம்மவருக்கு வைத்திய வசதிகளையுந் கொடைகளையுந் தந்து உதவிக் கொண்டிருக்கும் போது எமது பாரம்பரிய நிலங்கள் பறிபோகின்றன. வடகிழக்கு என்பது தமிழர் தாயகம் என்ற அந்தக் கருத்திற்கு மாறான நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை உங்கள் எல்லோர் மனங்களிலும் பதிய வைக்க விரும்புகின்றேன். பல காணிகளை வடமாகாணத்தினுள், அதுவும் யாழ் குடா நாட்டினுள், இராணுவம் ஆக்கிரமித்து அவற்றைச் சட்டப்படி கையேற்க நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கின்றது.

நாங்கள் எமது வீட்டு நிலத்தைச் சுத்தப்படுத்த ஒரு பாத்திர நீரினுள் ஒரு சில துளி டெற்றோலையோ, பைனோலையோ ஊற்றுகிறோம். பின்னர் அந்தப் பாத்திரத்தில் இருக்கும் கிருமிநாச நீர் தன் வேலையைச் செய்கின்றது. நிலத்தைச் சுத்தப்படுத்துகிறது. அதேபோல் மக்களின் மத்தியில் அவர்கள் நிலங்களைத் தமதாக்கி அங்கு இராணுவத்தினரைப் வதிய வைத்து விட்டார்களானால் அதன் பின் அங்குள்ள கலாசாரப் பண்புகளையும், வாழ்க்கை முறைகளையுஞ் சுற்றாடலையும் ஏன் வழங்கு மொழியினைக் கூட மாற்றி அமைத்து விடலாம். கிருமி நாச நீர் போல் இருந்து பாரம்பரியங்களை முற்றாக அழித்து விடலாம். பலருக்கு இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் மிக இனப் படுகொலைக்கொப்பான நுண்ணிய நடவடிக்கைகள் புரிவதாகத் தெரியவில்லை. மரங்களைக் காண்கின்றோம். ஆனால் அங்கு இருக்கும் வனத்தை அடையாளம் காணாது வாழ்கின்றோம். அன்றாட தேவைகளில் மூழ்கி விடுகின்றோம்.

ஒட்டிசுட்டானில், கொடுத்த அனுமதிப் பத்திரத்திற்கு மேலதிகமாக மூன்று மடங்கு கருங்கல்லைத் தெற்கிலிருந்து வந்துள்ள ஒரு கம்பெனி அகழ்ந்தெடுத்துச் சென்றுள்ளது. இது எப்படி நடந்தது என்றே புலப்படவில்லை. கொழும்பில் தரப்பட்ட அனுமதிப் பத்திரம் என்பதால் எம் மாகாண அலுவலர்கள் அதைப் பற்றிக் கவனம் செலுத்தாமல் இருந்தார்களோ அல்லது அவ்வாறு இருத்தி வைக்கப்பட்டார்களோ எமக்குத் தெரியாது. எமது வளங்கள் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனவே எமது மக்களுக்கு இங்கு நடப்பதைத் தான் நான் கூறி வைக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

0 Responses to வடக்கு கிழக்கில் இராணுவத்தைக் கொண்டு சிங்களக் குடியேற்றங்களை அரசு மேற்கொள்கிறது: சி.வி.விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com