Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பத்து ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியை தென்னிலங்கை சக்திகளோடு இணைந்து தமிழ் மக்களும் தோற்கடித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டதனாலேயே, புதிய அரசாங்கமொன்று உருவாகியுள்ளது. புதிய அரசாங்கத்திற்கு எமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான கால அவகாசத்தை வழங்கியுள்ளோம். அதனை மீறினால் போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகமொன்று வவுனியாவில் நேற்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்த நாட்டில் குறிப்பாக தமிழர், முஸ்லிம்கள், மலையக மக்கள் வாழுகின்ற இடங்களில் ஒரு புதிய நம்பிக்கை உருவாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ராஜபக்ஷவின் சர்வாதிகாரம் தலைதூக்கியிருந்தது. தென்னிலங்கையில், நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என்றும் குடும்ப ஆட்சிக்கும் அவர்களது ஊழல்களுக்கும் எதிராகவும் கிளர்தெழுந்தார்கள்.

தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் கூட இந்த ராஜபக்ஷ ஆட்சியில் தமது நிலம், மதம், பண்பாடு, ஜனநாயகம் என்பவற்றை இழந்து நிர்கதியாக்கப்பட்டனர். நாம் எமது உரிமைக்காக எத்தனை உயிர்களை கொடுத்தோம். எத்தனை போராட்டங்களை நடத்தினோம்.

இராணுவ மயமாக்கலை செய்த அந்த அரசாங்கம் எமது இன அடையாளங்களையே அழித்தது. தென்னிலங்கையில் இருந்து இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என குரல் வலுத்த போது நாங்களும் அதற்கு ஆதரவு கொடுக்க வேண்டியிருந்தது.

எமது நிலங்களை இராணுவத்தின் துணையுடன் பறித்து, அங்கு சிங்களவர்களையும் இராணுவ குடும்பங்களையும் குடியமர்த்தினார்கள். இதற்கு மஹிந்தவின் ஆட்சிதான் காரணமாக அமைந்தது. அதுபோன்ற காரணங்களால் தான் நாம் ஆட்சிமாற்றத்தை விரும்பினோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எடுப்பதற்கு முன்னர் மக்களிடம் கருத்துக்களை கேட்ட போது இது ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானம் என கூறினார்கள். இது அப்பட்டமான பொய். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாவட்ட ரீதியாக உள்ளூராட்சி சபை உறுப்பினர்களிடமும் கட்சி உறுப்பினர்களிடமும் கருத்து கேட்டே தீர்மானமெடுத்தது.

நாம் எதற்காக இதுவரை போராடினோமா அதை பெற வேண்டுமானால் எமது நிலம் எமது நிலமாக இருக்க வேண்டும். அதை அழித்தவனையே நாம் தோற்கடித்தோம். நாங்களும் தேசிய இனம். எங்களுக்கும் இறைமை இருக்கிறது. எங்களாலும் ஆட்சியாளரை தீர்மானிக்க முடியும் என்பதை ராஜபக்ஷவுக்கு காட்டியுள்ளோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என கூறிய பின்னர் சிலர் பத்திரிகை மாநாடுகளை நடத்தி, இந்த தேர்தலை புறக்கணிக்கக் கோரினர். எம்மோடு இருந்தவர்கள்கூட விமர்சித்தார்கள். சிலர் வாக்காளிக்காது விட்டார்கள். ஆனால், அவர்களின் கருத்துக்கள் எடுபடவில்லை. இனியும் எடுபடாது. அவர்களின் கருத்தை நம்பியிருந்தால் இன்று ராஜபக்ஷ ஆட்சியில் இருந்திருப்பார்.

நாங்கள் இந்த புதிய அரசையும் நம்பி நடக்கவில்லை. இந்த அரசுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை. ஆனால், தற்போது எமது மக்களின் காணிப் பிரச்சினை, அரசியல் கைதிகள் பிரச்சினை, தீர்வுத் திட்டம் குறித்து பேசி வருகின்றோம். அவர்களும் சிலதை செய்கிறார்கள். செய்வதாக கூறுகிறார்கள்.

நாம் வவுனியாவில் நடந்த கட்சி மாநாட்டில் இந்த அரசு எமது பிரச்சினையை தீர்க்காது போனால் தைத்திங்களில் ஜனநாயக போராட்டம் வெடிக்கும் என தெரிவித்தோம். ஆனால், இன்று புதிய அரசு வந்துள்ளது. சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மீள்குடியேற்றுவதாக சொல்கிறார்கள். வடக்கு மாகாண சபையில் மாற்றம் வந்துள்ளது. காணிகளை மீள வழங்குவதாக கூறியுள்ளார்கள். இதனால் எமது பிரச்சினையை தீர்க்க காலம் தேவை.

நாம் கால அவகாசம் வழங்கி எமது போராட்டத்தை பிற்போட்டுள்ளோம். எமக்கு தீர்வு கிடைக்காது போனால் எமது மக்களை தயார்படுத்தி கூறியபடி எமது ஜனநாயக போராட்டம் நடக்கும். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to ராஜபக்ஷவை தோற்கடித்து புதிய அரசுக்கு கால அவகாசத்தை வழங்கியுள்ளோம்: மாவை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com