Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதிய தேர்தல் முறைமையின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 250ஆக உயர்த்தப்படுமானால், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே, குறிப்பாக மத்திய, மேல், ஊவா மாகாணங்களில் பெரும்பான்மையின மக்கள் மத்தியில் கலந்து வாழும் தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த அடிப்படையில் நுவரேலிய மாவட்டத்தில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும், கொழும்பில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும், பதுளையிலும், கண்டியிலும் தலா இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் எனும் குறைந்தபட்ச எண்ணிக்கையில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை முழுமையாக பயன்படுத்தி தங்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யாவிட்டால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், நுவரெலியா, கொழும்பு, கண்டி, பதுளை மாவட்டங்களில் தமது சனத்தொகைக்கு ஏற்ப தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்துக்கொள்ள புதிய தேர்தல் முறைமையில் இடமிருக்க வேண்டும் என்று மனோ கணேசன், தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை நேரில் சந்தித்து கையளித்த ஆவணத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் மனோ கணேசன் தெரிவித்துள்ளதாவது, “இன்றைய தேர்தல் முறைமை மாற்றப்பட்டு, விருப்பு வாக்கு முறைமை ஒழிக்கப்பட வேண்டும். தொகுதிக்கு என்று ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற யோசனைகளை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், அந்த மாற்றங்கள் ஒருபோதும் இன்று சிறுபான்மை இனம் அனுபவிக்கும் பிரதிநிதித்துவங்களை குறைத்துவிடக் கூடாது. விருப்பு வாக்கு முறைமை ஒழிக்கப்பட வேண்டும், தொகுதிக்கு என்று ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று இன்று குரல் எழுப்பும் பெரும்பான்மை கட்சிகளுக்கு சிறுபான்மை இனம் இன்று அனுபவிக்கும் பிரதிநிதித்துவங்கள் தொடர்பில் அக்கறை இருப்பதாக தெரியவில்லை.

புதிய தேர்தல் முறை மாற்றத்தின் போது, இந்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் நடைபெற்றுள்ள சனத்தொகை வளர்ச்சி, இடம்பெயர்வு, குடியேற்றம் ஆகியவை கணக்கில் எடுக்கப்பட வேண்டும்.

மத்திய, மேல், ஊவா மாகாணங்களில் பெரும்பான்மை இனத்து மக்கள் மத்தியில் கலந்து வாழும் தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்களே உத்தேச தேர்தல் முறை மாற்றங்கள் காரணமாக அதிகம் பாதிப்பு அடையும் அபாயத்தை எதிர்நோக்குகின்றார்கள்.

எனவே தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் நாம் அதிக அச்சம் கொண்டுள்ளோம். இந்த அச்சம் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இந்நாட்டின் சமீப கால வரலாற்றில் தற்போதைய நடப்பு தேர்தல் முறையே தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்களுக்கு அதிகபட்ச பிரதிநிதித்துவங்களை வழங்கியுள்ளது. எனவே இந்த தேர்தல் முறையை மாற்றுவதானால் எங்களது குறைந்தபட்ச உரிமை உறுதி செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் புதிய தேர்தல் முறை மாற்றத்துக்கு நாம் உடன்பட முடியாது.

இந்த அடிப்படையில் நுவரேலிய மாவட்டத்தில் ஐந்து, கொழும்பில் மூன்று, பதுளையிலும் கண்டியிலும் தலா இரண்டு என்ற குறைந்தபட்ச எண்ணிக்கையில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படக்கூடிய ஜனநாயக சூழல் ஏற்பட வேண்டும்.

தமிழ் வாக்காளர்களுக்கு தமது சனத்தொகைக்கு ஏற்ப தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்துக்கொள்ள புதிய தேர்தல் முறைமையில் இடமிருக்க வேண்டும். தமிழ் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை முழுமையாக பயன்படுத்தி தங்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யாவிட்டால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. அது நமது இனத்தின் தலையெழுத்து. ஆனால், சட்டத்தில் இடமிருக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கு, கிழக்கிற்கு வெளியில் வாழும் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவமும் காக்கப்பட வேண்டும்: மனோ கணேசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com