Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையினை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு யார் ஆட்சி செய்யப் போகின்றார்கள் என்பதை தீர்மானிக்கும் தேர்தல் வரும் திங்கட் கிழமை (ஒகஸ்ட் 17) நடைபெறவிருக்கின்றது. தென்னிலங்கையில் ஆட்சியதிகாரத்துக்கான போட்டியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியும் (ஐ.தே.க), முன்னாள் ஜனாதிபதியை உத்தியோகப்பற்றற்ற ரீதியில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திக் கொண்டு செயற்படும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் பெரும் போட்டி போடுகின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைமைப் பொறுப்புக்களையும் ஏற்றிருந்தார். ஆனாலும், தன்னுடைய அழுத்தங்களை மீறி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வேட்பாளர் நியமனம் வழங்கப்பட்டதை எதிர்த்து இந்தத் தேர்தலில் நடுநிலைமை வகிக்கப் போவதாக அறிவித்துவிட்டார். இந்த நிலை, இயல்பாகவே நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னிணிக்கான சார்பு நிலையை ஏற்படுத்தி விட்டிருப்பதாக தென்னிலங்கை நோக்கர்கள் கூறுகின்றார்கள். இது, சிங்கள மக்கள் மத்தியில் குறிப்பிட்டளவான தாக்கத்தைச் செலுத்தி, வாக்களிப்பிலும் பிரதிபலிக்கும் தோற்றப்பாடுகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஏற்கனவே, ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நல்லாட்சி பற்றிய கோசத்தோடு வந்த (மைத்திரிபால சிறிசேன-) ரணில் விக்ரமசிங்க- ஜாதிக ஹெல உறுமய- முஸ்லிம் காங்கிரஸ்- மனோ கணேசன் கூட்டு இப்போதும் நிலைத்திருக்கின்றது. இது, பருமட்டான வாக்கு வங்கியை மீண்டும் தக்க வைக்க உதவும் என்று கருதப்படுகின்றது.

மறுபுறத்தில் மஹிந்த ராஜபக்ஷவையும், அவரின் போர் வெற்றியையும் மீண்டும் முன்வைத்து களமிறங்கியிருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரால் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய மக்கள் முன்னணியின் மீதான மக்களின்- ஊடகங்களின் அபிமானத்தை இல்லாமலாக்குவதற்கான செயற்பாடுகள் பெரிதாக இல்லை. இது, அவர்களின் பிரச்சாரங்களிலும் பிரதிபலிக்கின்றது. “வடக்கை ரணில் பிரித்துக் கொடுக்கப் போகின்றார்” என்கிற வாதத்தை சிங்கள மக்கள் மத்தியில் மீண்டும் மீண்டும் மஹிந்த தரப்பு ஒப்புவிக்கின்றது. அதன் மூலம் வாக்கினைப் பெற்றுக் கொண்டுவிடலாம் என்றும் கருதுகிறார்கள். இதனைத் தாண்டிய செயற்பாடு என்பது பெரிதாக இல்லை. இந்த நிலை, இயல்பாகவே, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினை இரண்டாம் நிலைக்கு தள்ளி விட்டிருக்கின்றது.

சிங்கள புத்திஜீவிகளிடமும்- இளைஞர்களிடமும் குறிப்பிட்டளவான அபிமானம் பெற்றுள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தன்னுடைய மீளெழுச்சிக் காலத்தில் இருக்கின்றது. அநுரகுமார திஸ்ஸாநாயக்க கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டது முதல் மக்கள் மத்தியில் கட்சிக்கான அபிமானம் என்பது குறிப்பிட்டளவில் அதிகரித்து வந்திருக்கின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்திலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக பெரும் பிரச்சாரத்தை ஜே.வி.பி முன்னெடுத்திருந்தது. அது, மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு பெரும் ஒத்தாசையாக இருந்தது என்பது வெளிப்படை. இந்த நிலையில், ஜே.வி.பி தன்னுடைய பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையை குறைந்தது 10 வரையில் உயர்த்திக் கொள்வதற்கான வாய்ப்புக்களை இந்தப் பொதுத் தேர்தல் வழங்கலாம்.

எனினும், வடக்கு- கிழக்கில் தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளை தொடர்ச்சியாக பெற்று வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை இம்முறையும் பாராளுமன்றத்துக்குள் மூன்றாவதாக அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சியாக இருக்கும். அது, குறைந்தது 15 ஆசனங்களையாவது வெற்றி கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன.

-தேர்தல் முடிவுகள் பருமட்டாக இவ்வாறாக அமையலாம்

ஐ.தே.க -105 (+/-10)

ஐ.ம.சு.கூ- 85 (+/-7)

த.தே.கூ – 16 (+/-1)

ஜே.வி.பி – 12 (+/-2)

மற்றயவை – 07 (+/-3)

தமிழ்த் தேசியக் களம்

தமிழ்த் தேசியத்தினை பிரதானமாக முன்னிறுத்தும் வடக்கு- கிழக்கு தேர்தல் களம் இம்முறை மக்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தினை தூண்டியிருக்கவில்லை. ஆனால், ஊடகங்களிலும்- சமூக ஊடகங்களிலும் பெரும் பரபரப்புக் காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றது. நீண்ட நாட்களிற்குப் பின் தமிழ்த் தேசியக் கட்சிகள் இரண்டு ஒன்றையொன்று வைரிகளாக முன்னிறுத்தி மக்களிடம் வாக்குக் கோருகின்றன.

இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியான முன்னிலையை வகிக்கப் போகின்றது என்பது வெளிப்படை. ஆனால், கூட்டமைப்பிற்கு பெரும் அழுத்தத்தைக் கொடுத்து குறிப்பிட்டளவான வெற்றிக்கான செய்தியை சொல்லிவிட வேண்டும் என்பதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மூர்க்கமான தேர்தல் களமாடுதலை செய்கின்றது. இது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினையும் வேகமாக இயக்க வைத்திருக்கின்றது.

ஆனால், இந்த நிலை என்பது பெரும்பாலும் யாழ்ப்பாணத்துக்குள் மாத்திரம் சுருங்கிவிட்ட நிலைமைதான் காணப்படுகின்றது. அது, வடக்கில் ஏனைய தேர்தல் மாவட்டங்களுக்குக் கூட அவ்வளவுக்கு பரவியிருக்கவில்லை. கிழக்கில் அதன் அதிர்வுகள் உணரப்படவில்லை என்றே சொல்லும் நிலையே காணப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 ஆசனங்களில் 5ஐ கைப்பற்றிவிட வேண்டும் என்கிற நிலையில் களமாடுகின்றது. மறுபுறத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ குறைந்தது 2 ஆசனங்களையாவது பெற வேண்டும் எனும் நோக்கத்தோடு இயக்குகின்றது. ஆனால், அதனை அடைவது என்பது பெரும் சிரமமானது. ஏனெனில், யாழில் இரண்டு ஆசனங்களைப் பெற வேண்டுமாயின் குறைந்தது 80000 வாக்குகளையாவது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெற வேண்டியிருக்கும்.

வடக்கு- கிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் இம்முறை வாக்களிப்பு என்பது குறைவாகக் காணப்படும் என்கிற நிலை உணரப்படும் நிலையில், யாழ்ப்பாணத்தில் 80000 வாக்குகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் பெற முடியுமா என்பது சந்தேகத்துக்குரியது.

யாழில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் கூட தமக்கான ஒரு ஆசனத்தையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று களமாடுகின்றன. ஆனால், தமிழ்த் தேசிய வாக்குகளின் பிளவினால் இந்த தரப்புக்களில் ஒருதரப்பு தப்பிப்பிழைக்கும் வாய்ப்புக்கள் உண்டு.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பிரதானமான வெற்றியைக் தக்க வைக்கப் போகின்றது. மறு தரப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் களமிறங்கியுள்ள ரிஷாட் பதியுதீன் ஒரு ஆசனத்தை வெற்றி கொள்வார் என்று கருதலாம். அவருக்கு முஸ்லிம் மக்களின் ஆதரவு உண்டு.

கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கரமே இம்முறையும் ஓங்கியிருக்கப் போகின்றது. அங்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சவால் விடுக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகள் இல்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வடக்கு கிழக்கின் அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிட்டாலும், வெற்றி வாய்ப்புப் பற்றிய நம்பிக்கைகள் யாழ்ப்பாணத்துக்குள்ளேயே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் இரண்டு ஆசனங்களை வெற்றி கொள்ள வேண்டும் எனும் நிலைப்பாட்டோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களமாற்றுகின்றது. இரா.சம்பந்தனின் வெற்றி குறிப்பிட்டளவு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னோருவரையும் வெற்றி கொள்வதற்கான முனைப்புக்கள் வெற்றியளிக்குமா என்பது திருகோணமலை தமிழ் வாக்காளர்களின் வாக்களிப்பு வீதம்- ஒருங்கிணைவில் தங்கியிருக்கின்றது.

மட்டக்களப்பு தேர்தல் களம் வன்னி மாவட்டத்தின் நிலையை ஒத்தது. அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முன்னணி வகிக்கும். அங்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் களமிறங்கியுள்ள முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு. ஆக, அங்கு தமிழ் வாக்குகளின் பிளவு இம்முறை சாத்தியமில்லை.

அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்த வரையில் ஒரு ஆசனத்தை பெறுவதற்கான வாக்கு வங்கியே தமிழ்த் தரப்பிடம் உண்டு. அதனை, இம்முறையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக் கொள்ளும்.

வடக்கு - கிழக்கில் பொதுத் தேர்தல் முடிவுகள் பருமட்டாக இவ்வாறு அமையலாம்.

யாழ்ப்பாணம் (7)

த.தே.கூ 4 (+1)

த.தே.ம.மு 1 (+1)

ஈ.பி.டி.பி 1 (-1)

ஐ.தே.க 1 (-1)

வன்னி (6)

த.தே.கூ 4 (+1)

த.தே.ம.மு 1 (-1)

ஐ.தே.க 1 (+1)

மட்டக்களப்பு (5)

த.தே.கூ 4

ஐ.தே.க 1

திருகோணமலை (4)

த.தே.கூ 1 (+1)

ஐ.தே.க 1

ஐ.ம.சு.கூ 1

அம்பாறை (7)

த.தே.கூ 1

ஐ.தே.க 4 (-1)

ஐ.ம.சு.கூ 2 (+1)

வடக்கு கிழக்கில் த.தே.கூ அதிகபட்சமாக 14- 17 ஆசனங்களை நேரடி வாக்களிப்பின் மூலமும், தேசியப் பட்டியல் மூலமாக ஒரு ஆசனத்தையும் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு. அது, பருமட்டாக 16 அல்லது 17 ஆசனங்களை வெற்றி கொள்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்கும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 1 ஆசனத்தை வெற்றி கொள்ளும். அதன் அதிகபட்ச இலக்கு 2 என்ற அளவுக்குள் இருக்கும். இம்முறையும் தமிழ்த் தேசிய அரசியல் களம் தன்னுடைய பிரதான தரப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினையே மீண்டும் முன்னிறுத்தும்…!

0 Responses to பொதுத் தேர்தல் 2015: வெற்றி யாருக்கு? (ஆசனங்களின் பங்கீடு - ஒரு ஒப்புநோக்கு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com