Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசியலுரிமைக்கான போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தமிழ் மக்கள் ஒருங்கிணைந்து பொது எதிரிக்கும் (பௌத்த சிங்கள பேரினவாதத்துக்கும்), சர்வதேசத்துக்கும் பெரும் செய்தியைச் சொல்லி வந்திருக்கின்றார்கள். இப்போதும், அப்படியொரு  ஒருங்கிணைவையும், அதனூடான வெற்றியையும் நாம் காண வேண்டியிருக்கின்றது. அதுதான், தொடந்தும் தமிழ் மக்கள் தமது போராட்ட உணர்வினை தொலைத்துவிடவில்லை என்று நிரூபிப்பதற்கும் - நீடித்து நிற்பதற்கும் உதவும்.

இலங்கையின் 15வது பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் எதிர்வரும் திங்கட்கிழமை (ஒகஸ்ட் 17, 2015) நடைபெறவுள்ளது. தென்னிலங்கையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலோடு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அறுதியான ஆட்சி மாற்றமாக மாற்றுவதற்கான முனைப்புக்களோடு பல் சக்திகளும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியோடு இணைந்து கொண்டு செயற்படுகின்றன. மறுபுறத்தில், மீண்டும் அதிகாரத்தை அடைந்துவிட வேண்டும் என்கிற பெரும் அவாவில் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு இயங்குகின்றது.  தென்னிலங்கை ஆட்சி அதிகாரங்களை நோக்கிய பெரும் ஏக்கத்துடனேயே எப்போதும் செயற்பட்டு வந்திருக்கின்றது. இந்தத் தேர்தலையும் அதற்கான களமாகவே பார்க்கின்றது.

தமிழ் மக்களுக்கு இந்தத் தேர்தல் இரண்டு விடயங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது. முதலாவது, இந்தத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்று பௌத்த சிங்கள பேரினவாதக் கட்சியொன்று ஆட்சியமைக்கும் சூழல் இல்லாத நிலையில், பாராளுமன்றத்துக்குள் மூன்றாவது பலமான சக்தியாக தமிழ்ப் பிரதிநிதிகளை முன்னிறுத்துவதனூடு ஆட்சியமைக்கும் தரப்போடு பலமான பேரம் பேசல்களை செய்ய முடியும். அது, எமது அரசியலுரிமைப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நோக்கி நகர்வதற்கான உந்துதல்களை பெருமளவில் வழங்கலாம்.

மற்றையது,  ஆயுதப் போராட்டத்தில் தோற்றாலும்- எமது இலக்கு நோக்கிய போராட்ட உணர்வினையும், ஒருங்கிணைவினையும் தமிழ் மக்கள் விட்டுத் தரவில்லை என்பதை இந்தத் தேர்தலிலும் நிரூபிக்க வேண்டும். ஏனெனில், தமிழ் மக்களின் தொடர்ச்சியான ஒருங்கிணைவு என்பது பொது எதிரிக்கும் (பௌத்த சிங்கள பேரினவாதத்துக்கும்), பிராந்திய சக்திகளுக்கும் தொடர்ச்சியான செய்தியைச் சொல்லிக் கொண்டிருக்கும். கடந்த கால ஏமாற்றங்களைக் கடந்து செல்வதற்கு தமிழ் மக்கள் தொடர்ந்தும் இணைந்திருப்பதுதான் இப்போதுள்ள ஒரே வழி. எமது அரசியலுரிமைகளைப் பெறுவதற்கான முனைப்புக்களையும் அதுதான் தக்க வைக்கும். மாறாக, எமக்குள் நாம் அக முரண்பாடுகளின் போக்கில் உடைந்து, உதிரிகளிடம் எம்மை ஒப்படைக்க முடியாது. அது, தொடர்ச்சியான தோல்விகளுக்கு காரணமாகிவிடும்.

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் சர்வதேச சதியோடு இலங்கை அரசாங்கத்தினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. எனினும், தமிழ் மக்களின் ஆன்ம பலத்தினை எந்தவொரு சக்தியினாலும் உடைக்க முடியவில்லை.  கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழ் மக்களின் ஆன்ம பலத்தை உடைப்பதற்கான பெரும் முயற்சிகளை பௌத்த சிங்கள பேரினவாதமும்- பிராந்திய வல்லரசுகளும் மேற்கொண்டன. இந்தத் தேர்தலிலும் அதற்கான பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த சதி முயற்சிகளை சரியான இனங்கண்டு கொண்டு தமிழ் மக்கள் முழுமையான வாக்களிப்பொன்றைச் செய்தாக வேண்டும்.

பூகோள அரசியல் மாற்றங்களை கணக்கில் கொள்கின்ற போது தனி ஈழம் எனும் கோரிக்கையின் பக்கம் நாம் இப்போது செல்ல முடியாதுள்ளது. ஆனால், எமது தாயக நிலப்பகுதியைத் தக்க வைப்பது தொடர்பில் வடக்கு- கிழக்கிலும், வடக்கு- கிழக்கிற்கு வெளியிலுள்ள ஒவ்வொரு தமிழ் மகனும்- மகளும் அக்கறை கொள்ள வேண்டும். அந்த அக்கறையை இந்தத் தேர்தலிலும் சரியான தெரிவுகள் மூலம் வெளிப்படுத்த வேண்டும். எமக்குள் நாம் பிரிந்து நின்று களமாற்றுவது சில நேரங்களில் உதிரிகளுக்கு பெரும் வாய்ப்பினை வழங்கிவிடும். அப்படியான கடந்த கால அனுபங்களை நாம் பெற்றிருக்கின்றோம். அது, எமது போராட்டங்களின் ஒவ்வொரு கால கட்டத்திலும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஆயுதப் போராட்டத்தின் முடிவுக்குப் பின்னர் தமிழ் மக்கள் தமது அரசியல் போராட்டத்தில் வாக்கினை பெரும் ஆயுதமாக வடக்கு மாகாண சபைத் தேர்தலிலும், கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பயன்படுத்தி பலமான செய்தியைச் சொல்லியிருக்கின்றார்கள். அப்படியான செய்தியை பெருமெடுப்பில் ஒருமித்து வாக்களித்து மீண்டும் சொல்ல வேண்டும். நாம் ஏற்கனவே ஒருங்கிணைந்து வாக்களித்து என்ன நன்மைகளை- அதிகாரத்தைப் பெற்றுவிட்டோம் என்கிற அதிருப்திகரமான கேள்வியை எழுப்பி, அதன் போக்கில் வாக்களிப்பினை தட்டிக்கழிக்காதீர்கள். நாம், தோல்வியிருந்து எழுந்து வெற்றியை அடைய வேண்டியவர்கள். அதற்கு, மீண்டும் மீண்டும் எழுந்து ஓட வேண்டும். அது, ஏமாற்றங்களை வெற்றி கொண்ட ஓட்டமாக இருக்க வேண்டும். தமிழ் மக்கள் இம்முறையும் வாக்கினை ஆயுதமாக்க வேண்டும். ஜனநாயகத்தில் பெரும் நம்பிக்கையுள்ளவர்களாக!

4tamilmedia.com

0 Responses to தமிழ் மக்கள் வாக்கினை ஆயுதமாக்க வேண்டும்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com