Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சுதந்திர தின நேர்காணலுக்காக விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவனை சந்தித்தோம். தொல்.திருமாவளவனிடம் கம்பீரமான தோற்றம் மட்டுமல்ல, அவரது கண்களிலும் ஒரு அறிவு மிக்கத் தெளிவு இருக்கும். பேச்சில் நிதானம் இருக்கும். அதே சமயம் கருத்தை ஆணித்தரமாகப் புரிய வைப்பார். நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சட்டென்று சரியான தெளிவான பதில் கொடுப்பதில் வல்லவர். அதில் இப்படி மாற்றி எழுதிக் கொள்ளுங்கள் என்று சொல்லும் அளவுக்கு கவனமற்ற பதிலாக அது இருக்காது.

தமிழர்களுக்கு மகுடம் வைப்பது போல அவரது பேச்சு முடியும் வரை ஒரு ஆங்கில வார்த்தையும் பேச்சில் கலந்து இருக்காது. அவருக்கு ஒரு சுதந்திர தின வணக்கம் தெரிவித்துவிட்டு அவர் பேசியதைக் கேட்கத் தொடங்கினோம்.

"நமது நாடு 69வது சுதந்திர தினத்தில் கால் பதித்து உள்ளது. உலக நாடுகள் இந்தியாவை உற்று நோக்கிக் கொண்டு இருக்கும் வேளையில் அவர்கள் வியக்கும் அளவில் இந்தியா வல்லரசு நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு வளர்ச்சி நாடாகவும் மாறி வருகிறது. எனினும் இன்னமும் கோடானு கோடி மக்கள் ஏழ்மை நிலையில்தான் வாழ்ந்து வருகிறார்கள்.

குடியிருக்க வீடு இன்றி, குழந்தைகளைப் படிக்க வைக்க வசதியின்றி, வயிறார உணவின்றி வாழ்ந்து வருகிறார்கள் என்பது இந்த சுதந்திர தின நாளில் வேதனைத் தரக்கூடிய விஷயம். கல்வி வளர்ச்சி, விவசாய உற்பத்தி இவைகள் நமது இந்தியாவில் பெரும் தேக்க நிலையில்தான் இருக்கின்றன. சாதி, மதம் என்கிற பெயரால் நாட்டில் இன்னும் வன்முறைகள், கௌரவக் கொலைகள் நிகழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன. பின்னர் எப்படி நாம் சுத்திர இந்தியா என்று பெருமைக் கொள்ள முடியும்?

ஆட்சியாளர்களின் ஆணவப் போக்கும், அதிகாரப் போக்கும் கூட இதற்கு ஒரு காரணம் தான். அப்படிப்பட்டத் தலைவர்கள் நாட்டின் அதிகார ஆட்சியிலிருந்து விலக வேண்டும். குறிப்பாக இந்தியாவில் இரட்டை வாழ்வியல் முறை ஒழிந்தால்தான் நாடு முழுமையாக சுதந்திரத்தை அடைந்துள்ளது என்பதை பெருமையாக பறைசாற்றிக் கொள்ள முடியும்.

இரட்டை வாழ்வியல் முறை என்பது தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒரு இடம், மற்ற சாதியினருக்கு ஒரு இடம் என ஒதுக்கப்படும் வாழ்வுமுறையைத்தான் சொல்கிறேன். தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று டீக்கடைகளில் தனி குவளைகள் இன்றும் உண்டு. தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று ஊரில் தனி சுடுகாடு உண்டு. இதெல்லாம் அவசியமில்லை என்று ஏன் அதிகார வர்க்கத்தினருக்குத் தோன்றவில்லை?

இன்றைய இளைஞர்கள் விழிப்புணர்வுடன் நல்லது கெட்டதைப் புரிந்து இருக்கிறார்கள். ஆனால், அது மட்டும் போதாது. கல்வி, விஞ்ஞானம், விவசாயம் என்று அனைத்துத் துறைகளிலும் தங்களது ஆற்றலை நிரூபிப்பது போல, திறமையை வெளிக்காட்டுவது போல அரசியலிலும் ஆற்றலையும், திறமையையும் இளைஞர்கள் வெளிக்காட்ட முன்வர வேண்டும்.

வயிற்றுப் பிழைப்புக்கு தங்களது ஆற்றலை நிரூபித்தால் மட்டும் போதும் என்று எண்ணுவது இளைஞர்கள் நாட்டுக்கு செய்யும் துரோகம் போன்றதுதான். இவர்கள் நாட்டுக்கு செய்ய வேண்டிய பொறுப்புக்களை உணர்ந்து செயல்பட்டாலே இந்தியா 2020ம் ஆண்டில் வல்லரசாகிவிடும். இது நடக்க வேண்டும் என்றால் இளைஞர்கள் எதையும் எதிர்க்கொள்ளும் மனப்பக்குவத்துடன் துணிச்சலுடன் நாட்டின் வளர்ச்சிக்கான பணிகளில் ஈடுபட வேண்டும். அது மட்டுமின்றி இளைஞர்களை சீரழிக்கத் தூண்டும் அரசியல்வாதிகளை இனம் கண்டு அவர்களை ஒதுக்கித் தள்ள வேண்டும். தங்களை அரவணைத்துச் செல்லும் அரசியல் வாதிகள் பின்னால் இளைஞர்கள் நல்ல நோக்கத்துடன் செல்ல வேண்டும் என்பது எனது சுதந்திர தின நாள் மற்றும் அப்துல் கலாமின் கனவை நிறைவேற்றும் குறிக்கோளுக்காக இளைஞர்களிடம் நான் வைக்கும் வேண்டுகோள்.

அப்துல் கலாம் ஏழ்மையை, வறுமையை உடைத்தெறிந்து, அதை அவர் தமது அறிவு மற்றும் தெளிவால் வென்று சாதித்துக் காண்பித்தவர். இளைஞர்களும் அதையே ஒரு போதனையாக எடுத்துக்கொண்டு செயற்பட வேண்டும். உங்களது கனவு உங்கள் சக்திக்கு மீறியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அதை அடைய கடும் முயற்சி எடுத்து வெற்றி பெறமுடியும். இதனை தனது இறுதி மூச்சு இருக்கும் வரை வலியுறுத்திய மிகச் சிறந்த தீர்க்கதரிசி அப்துல் கலாம். அவர் கனவு நினைவாக இளைஞர்கள் நல்ல தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டும்.

அடுத்து மதுவிலக்கு பற்றிப் பேசவேண்டுமானால், அரசியல் அமைப்புச் சட்டம் 47ன் படி தேசிய அளவில் மதுவிலக்கை அமல்படுத்தும் உரிமை மத்திய அரசுக்கு உள்ளது. எனவே, தேசிய அளவில் மத்திய அரசு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். இன்றைய நாளில் தமிழக அரசு மதுவிலக்கு அமல்படுத்துவதைப் பற்றி ஒன்றும் அறிவிக்கவில்லை என்றாலும், சட்டபேரவைக் கூடும் நாளில் மதுவிலக்கை அறிவிக்கலாம் என்பது என் போன்ற அரசியல்வாதிகள் மற்றும் மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

தமிழக அரசுதான் காந்தியவாதி சசி பெருமாளின் மரணத்துக்கு பொறுப்பு. அவருக்கு, அவரது போராட்டத்துக்கு, அவரது இறப்புக்கு தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும் என்றால், கண்டிப்பாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மதுவிலக்கு என்பது தேசிய அளவில் இருக்க வேண்டும். அண்டை மாநிலமான பாண்டிச்சேரியில் மதுவிலக்கு இல்லாமல் தமிழகத்தில் இருந்து என்ன பயன்? ஈழத்தமிழர்கள் விஷயத்தை எடுத்துக்கொண்டோம் என்றால் அவர்கள் இன்னமும் அல்லல் பட்டுக்கொண்டுதான் அங்கு வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் வசிக்கும் பகுதியில் சிங்களவர்கள் ஆதிக்கம் இன்னமும் ஓயவில்லை.பெண்களுக்கு, பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்திரவுகள் இன்னமும் குறைந்த பாடில்லை என்பது ஒரு புறம் மனதை வேதனைப் படுத்த, இந்தியா மற்றும் உலக நாடுகள் ஈழத் தமிழர்களுக்கு அளிக்கும் உதவிகள் அவர்களை சென்றடையவில்லை என்பது மிக வேதனை. தவிரவும் தமிழர்களின் நிலங்கள் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இந்நிலையில் ராஜபக்ஷே பிரதமராக வேறு போட்டியிடுகிறார். அவரை மக்கள் வீட்டில் முழுவதுமாக உட்கார வைத்தால் மட்டுமே ஈழத் தமிழர்களுக்கு விடிவு காலம்.ஐநா சபை ராஜாக்ஷேவை சர்வதேச குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் வரவேண்டும் என்று திமுக, அதிமுக அல்லாத கட்சிகள் விரும்புகின்றன. விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும் அதையேதான் விரும்புகிறது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மலர்ந்தால் மட்டுமே விளிம்பு நிலை அரசியல் நிலைமை மாறி அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படும். அனைவரும் சமம் என்கிற நிலைத் தோன்றும்." என்று மிகத் தெளிவாக கருத்துக்களை முன்வைத்த திருமாவளவன் அவர்களிடம், கடைசியாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் பற்றி சொல்லுங்கள் என்றபோது,

"யதார்த்தமானவர், மனதில் பட்டத்தைப் பளிச்சென்று சொல்லக் கூடியவர்." என்று இரண்டே வார்த்தைகளில் ரத்தினச் சுருக்காமாகப் பதிவு செய்தார்.

நமது 4தமிழ்மீடியா இணையத்தளப் பத்திரிகை தனது 8வது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறது. எமக்கு நீங்கள் கூறும் வாழ்த்துக்கள் என்ன எனக் கேட்ட போது, "இனி வரும் காலங்களில் இணையப் பத்திரிகைகளைத்தான் இளைஞர்கள் விரும்பிப் படிப்பார்கள். அதற்கு முன்னோடியாகத் திகழும் 4தமிழ்மீடியாவுக்கு எனது வாழ்த்துக்கள். எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும் 4தமிழ்மீடியா பத்திரிக்கை தர்மத்தை மீறாமல் இருக்கவும், இளைய தலைமுறையினருக்கு முன்னோடியாக இருந்து நல்ல காருத்துக்களை பதிவு செய்யவும் எனது வாழ்த்துக்கள்." என்றார்.

- 4தமிழ்மீடியாவுக்காக எழில்செல்வி

இந்தியச் சுதந்திர தினத்தை முன்னிட்டு இ.வி.கே.எஸ் இளங்கோவன், தமிழிசை ஆகியோருடன் மேற்கொண்ட சிறப்புச் செவ்விகள் :

0 Responses to இந்தியாவில் இரட்டை வாழ்வியல் முறை ஒழிந்தால்தான் நாட்டுக்கு உண்மையான சுதந்திரம்: திருமாவளவன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com