Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமது விடுதலையை முன்னிறுத்தி தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தின் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் விரைந்து முடிவெடுக்கக் கோரும் கடிதமொன்றை ஜனாதிபதிக்கும் நேற்று சனிக்கிழமை மாலை வடக்கு மாகாண முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ளார். அதிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நீண்ட ஆண்டுகளாக எவ்வித காரணங்களுமின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலையை இன்றுவரை துரிதப்படுத்தாமல் உள்ளமை கவலையளித்தாலும், தாங்கள், எதிர்வரும் திங்கட்கிழமை தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் முழுமையான முடிவு தருவதாக எமது சந்திப்பில் உறுதிப்படுத்தினாலும், அந்த நாட்கள் வருவதற்குள் தமிழ் அரசியல் கைதிகளுக்கு உயிராபத்து ஏற்படுமோ என்ற மன பயம் உள்ளது.

நீங்கள் வழங்கிய திங்கள் என்ற முடிவை விரைவுபடுத்தி அதற்கு முன்னதாக விசேட அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் விரைந்து முடிவெடுங்கள். நீங்கள் முன்னர் விடுதலை செய்த 31 அரசியல் கைதிகளில், 7 பேர் சிங்களவர்கள். இங்கு கூட ஒரு பாராபட்சம் காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட அதியுச்ச தண்டனையைக் கூட அவர்களின் குடும்ப உறவுகளால் புரிந்துகொள்வது கடினமாக உள்ளது.

இதற்கும் மேலாக ஒரு நாட்டின் ஜனாதிபதியாக இருக்கக் கூடிய நீங்கள் சிறைக் கைதிகளின் உயிர் சார்ந்த பிரச்சினைகளில் விரைவாக செயற்படாத பட்சத்தில், சிறையில் ஒரு உயிர் இழக்கப்படுமாக இருந்தால்கூட அதன் தாக்கம் வடக்கு, கிழக்கில் பாரிய விபரீதத்தை ஏற்படுத்தி விடும் என்பதனை தங்களுக்க நினைவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன்.” என்றுள்ளது.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் விரைந்து முடிவெடுக்க மைத்திரியிடம் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com