Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாடு பூராவும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழையினால் பல இடங்களில் வெள்ளக்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால், இதுவரை 3,248 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் ஒருவர் பலியாகியுமுள்ளார்.

வங்காளவிரிகுடாவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கத்தால் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை தொடக்கம் கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் கரையோர, தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் 2,228 குடும்பங்களும், கிளிநொச்சியில் 811 குடும்பங்களும், முல்லைத்தீவில் 209 குடும்பங்களும் இடம்பெயர்ந்துள்ளன. இடம்பெயர்ந்த குடும்பங்கள் பொது இடங்களிலும், உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக சமைத்த உணவுகள் வழங்க 3 மாவட்டங்களின் அரச அதிபர்களும் பிரதேச செயலகங்கள் ஊடாக நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

இதேசமயம், நேற்றுமுன்தினம் கிளிநொச்சி வட்டக்கச்சியில் மேய்ச்சலுக்காக மாட்டைக் கொண்டு சென்ற சி.யோகலிங்கம் (வயது 37) என்பவர் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தின் பல குளங்கள் நிரம்பி வான் பாய்வதாலும் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தொடக்கம் மழை பெய்வதாலும் வெள்ள அபாயம் அதிகரித்துள்ளது. அத்துடன் இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

0 Responses to வடக்கில் கடும் மழை; வெள்ளத்தினால் 3,248 குடும்பங்கள் இடம்பெயர்வு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com