Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கச்சத்தீவில் இலங்கைக் கடற்படையினரால் இடித்து மீளக் கட்டப்பட்டுவரும், புனித அந்தோனியார் தேவாலய கட்டுமானப் பணிகள் இந்திய அரசின் அழுத்தத்தினால் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை இலங்கை கடற்படை மறுத்துள்ளது.

கால நிலை உட்பட சில காரணங்களுக்காக கட்டுமானப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அது விரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் கடற்படை பேச்சாளர் அக்ரம் அலவி பி.பி.சி.யிடம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஆயர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, கச்சத்தீவிலுள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தை இடித்து மீளக்கட்டும் பணிகள் கடந்த வாரம் கடற்படையினரால் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அதற்கான அஸ்திவாரம் போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், அங்கு தற்போது பெய்துவரும் கடும் மழை கட்டுமானப்பணிகளை தொடர்வதற்கு இடையூறாக இருப்பதாக தெரிவித்த அக்ரம் அலவி, நிர்மாணப் பணியை தொடர்வதற்கு அஸ்திவாரம் காயும் வரை காத்திருக்க வேண்டியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரண்டு காரணங்களினாலேயே தேவாலய கட்டுமானப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாகவும், அந்நடவடிக்கை விரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தேவாலய கட்டுமானப்பணி எப்போது முடியும் என்று பி.பி.சி. எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கடற்படை பேச்சாளர், கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னர் தேவாலயம் முழுமையாக கட்டி முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்கனவே சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் கச்சத்தீவிலுள்ள தேவாலயத்தை கட்டும் நடவடிக்கையில், தமிழக அரசு தரப்பையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன் பின்னர் தேவாலய கட்டுமானப்பணிகள் இந்தியாவின் அழுத்தம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ஊடகங்களில் செய்திகள் வெளியாகிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய மீளமைப்புப் பணிகள் நிறுத்தப்படவில்லை: இலங்கைக் கடற்படை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com