Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

க்கிரமிப்பு யுத்தத்தில் சரணடைந்த அப்பாவி தமிழர்களை சிறிலங்கா அரச படைகள் விலங்கிட்ட் விலங்குகளைப்போல் ஈவிரக்கமின்றி சுட்டுத்தள்ளும் மிருகவெறித்தனமான கொலைப்படலம் அண்மையில் ஆதாரத்துடன் வெளியாகியிருக்கிறது.

பிரிட்டனை தளமாகக்கொண்டு இயங்கும் 'சனல் - 4' தொலைக்காட்சி சேவை வெளியிட்ட காணொலி மனிதநேயம்மிக்க எல்லா மக்களின் மனங்களையும் ஒரு கணம் உலுப்பியிருக்கிறது. ஈழத்தமிழன் ஒவ்வொருவனும் இந்தக்காட்சியை கணனியின் முன்னிருந்து கண்ணீருடன் பார்த்து எழும்பி தன்னுறவுகளை நினைத்து வெதும்புகிறான்.

தற்போதைய நிலையில் ஈழத்தமினத்திற்கு சர்வதேச சமூகம்தான் எல்லாமே என்றாகிவிட்டதால் - இவற்றின் பின்னணியில் - சில நியாயமான வினாக்களை முன்வைப்பது இங்கு சாலப்பொருந்தும்.

கடந்த ஆண்டின் இறுதிப்பகுதி முதல் இந்த ஆண்டின் முற்பகுதிவரை இவ்வாறான சம்பவங்கள் தமிழர்தாயகத்தில் நடைபெறுகின்றன என்று புலம்பெயர்ந்துவாழும் தமிழ்மக்கள் ஒப்பாரி வைத்தழுது தமது உறவுகளை காப்பாற்க்கோரி சர்வதேச சமூகத்திடம் மன்றாடி நின்றபோது, அது பற்றி செயல்ரீதியாக கிஞ்சித்தும் நடவடிக்கை எடுக்காது, தனியே அறிக்கைகள் மூலம் சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்துவந்த சர்வதேச சமூகம் இன்று இந்த ஆதாரபூர்வமான மனிதப்பேரவலத்துக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?

இந்த மனிதப்பேரவலம் தொடர்பாக விசாரணை செய்யலாமா என்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பிலும் நீதிவான்களாக தம்மைக்காண்பித்துக்கொண்டு தமிழர்களை கொல்ல கொலைவாளை துடைத்துக்கொடுத்த பன்னாட்டு சமூகம், சிறிலங்கா அரசின் கொலைப்படலத்துக்கு முழுமையான அங்கீகாரம் கொடுத்துவிட்டு, தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு இன்று என்ன பதில் வைத்திருக்கிறது?

பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றுதள்ளிய சிறிலங்கா அரச படைகளின் தளபதிகளையும் அந்நாட்டு அரச அதிபரையும் போர்க்குற்றம் புரிந்தார்கள் என்ற ரீதியில் சர்வதேச நீதிமன்றின் முன்நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டபோதெல்லாம், அதற்கு ஆதாரம் உள்ளதா என்று வினா எழுப்பிய சர்வதேச சமூகம், தம்மிடம் சரணடைந்த பொதுமக்களை இவ்வாறு கொன்று தள்ளிய நாட்டு அரசினை எந்த வகையான 'ஜனநாயகத்திற்குள்' அடக்கப்போகிறது?

இவ்வாறு படுகொலைகளை புரிந்த படைகளின் தளபதிகள் பலருக்கு உயர்பதவிகள் அளித்தும் வெளிநாட்ட தூதவர்களாக பதவி உயர்வளித்தும் அவர்களுக்கு இராஜதந்திர அந்தஸ்து வழங்கியிருக்கும் சிறிலங்கா அரசின் நடவடிக்கையை அங்கீகரித்து - தமிழ்மக்களை கொலைபுரிந்த இரத்தக்கறைபடிந்த கைகளுடன் தமது நாடுகளுக்கு வரும் சிறிலங்கா படை அதிகாரிகளை - வெளிநாடுகள் தமது நாட்டில் தூதவர்களாக அடைக்கலம் கொடுக்கப்போகின்றனவா?

தமிழ்மக்கள இவ்வாறு கொலைவாள் கொண்டு அரிந்து வதைபுரிந்த படைகளின் தளபதிகள் மற்றும் அதிகாரிகள் அடங்கலாக 80 பேருடன் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடருக்கு செல்லவுள்ள சிறிலங்கா அரச அதிபர் மகிந்த தலைமையிலான குழு, உள்நாட்டில் புரிந்த கொலைப்படலத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெறுவதற்கு ஆயத்தமாகிவருகிறதே. இதற்கும் ஐக்கிய நாடுகள் சபை வாய்மூடிய வண்ணம் இருக்கப்போகிறதா?

தம்மிடம் சரணடைந்த அப்பாவி பொதுமக்களை இவ்வாறு கொன்றுதள்ளியுள்ள ஒரு அரசாங்கம், தனது ஆட்சியை எந்த வகையில் ஜனநாயகம் என்ற சொல்லுக்குள் அடக்கப்போகிறது? போரின்போது தம்மிடம் சரணடைந்த 7 சிங்கள படைவீரர்களை - தாங்கள் உயிர்விடும் தறுவாயில்கூட - சிறுகாயமுமின்றி தென்பகுதிக்கு அனுப்பிவைத்துவிட்டு மாவீரர்களானவர்கள்தான் விடுதலைப்புலிகள். போருடன் சம்பந்தப்பட்டவர்களை அந்த நியமங்களின் பிரகாரம் விடுதலைசெய்து தமது கொள்கைக்காக கடைசிவரை போரிட்டு மாண்டவர்கள் பயங்கரவாதிகள் என்றால், தம்மிடம் சரணடைந்த அப்பாவி பொதுமக்களை நிர்வாணமாக்கி கண்களை கட்டி படுகொலை செய்த படைகளையும் அதனை வழிநடத்திய அரசையம் என்ன சொற்பதத்தால் அழைப்பது?

இப்படி எத்தனை கேள்விகளைத்தான் அடுக்கிச்செல்வது?

இனச்சுத்திகரிப்பை தனது அரசின் இரகசிய கொள்கையாக வைத்துக்கொண்டு சர்வதேசத்தின் காதுகளில் பூச்சுற்றிய வண்ணம் காட்டு தர்பார் நடத்தி தமிழ்மக்களை சங்காரம் செய்யும் ஒரு அரசுக்கு சர்வ சக்தி பொருந்திய வல்லரசுகளாக தம்மை காண்பித்துக்கொள்ளும் நாடுகள் இன்னமும் காவடி தூக்கியவண்ணமிருந்தால், அது வரலாறு காணாத இன்னும் ஒரு போருக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைக்கு இட்டுச்செல்லும்.

விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்றும் அவர்கள் மேற்கொண்ட அனைத்துமே பயங்கரவாதம் என்று கூறிவந்த சர்வதேச சமூகம், இவ்வாறான கொலைப்படலத்தை அரங்கேற்றும் ஒரு அரசுக்கு எதிராக ஆயுத வழியின்றி எந்த மார்க்கத்தில் போரிடவேண்டும் என்று எதிர்பார்க்கிறது?

தமது மக்களுக்கு சிங்கள அரசினாலும் அதன் படைகளாலும் இவ்வாறான ஒரு நிலை ஏற்படும் என்பதனால், அந்த வன்முறைகளிலிருந்து தமது மக்களை காப்பாற்றுவதற்காகவே - இரத்தவெறி பிடித்த அரசுக்கு எதிராகவே - விடுதலைப்புலிகள் ஆயுதம் தரித்தார்கள். தமது மக்களைக்காப்பாற்றுவதற்காகவே போராடினார்கள் என்பதை இப்போதாவது சர்வதேசம் புரிந்து கொள்கிறதா?

தமிழ்மக்கள் ஆயுத ரீதியில் சிங்களப்படைகளுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தி தம்மை பாதுகாத்துக்கொள்ளாவிட்டால் இதே மாதிரியான கொலைப்படலத்தைத்தான் அது நித்தமும் சந்திக்க நேரிடும். இதனை இவ்வளவு காலமும் புரிந்துகொள்ளாத சர்வதேசம் - ஒரு இனத்தின் பாதுகாப்புக்கும் அவர்களின் விடிவுக்கும் முக்கியத்துவம் கொடுக்காது தனது பூகோள அரசியல் இருப்பு என்ற பூதக்கண்ணாடியை வைத்து - தமிழர்களின் போராட்டத்தில் குற்றம் கண்டுபிடித்தது. சிறுபான்மையினம் ஒன்று தனது பாதுகாப்பிற்காக நடத்திய போராட்டத்தில் குறை கண்டுபிடித்தது.

இன்று சிறிலங்கா அரசுக்கு ஆதரவும் அனுசரணையும் ஆலோசனையும் ஆசீர்வாதமும் கொடுத்ததன் மூலம் சர்வதேசம் தனது கைகளிலும் படிந்த இரத்தக்கறையை அழிக்கமுடியாமல் நின்று திண்டாடுகிறது.


தமிழ்மக்களின் பேரம்பேசும் சக்தியாக - வலுவான இராணுவமாக - அரசியல் தளமாக - இருந்த விடுதலைப்புலிகள் அமைப்பை உலகமே திரண்டுநின்று அழித்துஒழித்துவிட்டது.

தற்போது அந்த வெற்றிடத்தை நிரப்பவேண்டிய பொறுப்பு சர்வதேசத்திடமே உள்ளது.

தமிழ்மக்களின் விடிவுக்கு சர்வதேசம்தான் உத்தரவாதம் அளிக்கவேண்டும்.

அவர்கள்தான் அதனை பெற்றுக்கொடுக்கவேண்டும்.

இன்னமும் தமிழினம் சர்வதேசத்தை நம்பி அதன் தீர்வை எதிர்பார்த்து ஏங்கிநிற்கிறது.

Majura

0 Responses to மகிந்தவின் மரணப்பொறிக்குள் விலங்கிட்ட விலங்குகளான தமிழினம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com