Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சுவிஸ் தமிழீழ தேசிய மாவீரர் நாள்

பதிந்தவர்: தம்பியன் 01 December 2009

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமதின்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூர்ந்து சுவிஸ் ஃபிறிபுர்க் ஃபோரம் பிரம்மாண்ட மண்டபத்தில் மாவீரர் நாள் 2009 நிகழ்வு மிகவும் எழுச்சிகரமாக நினைவுகூரப்பட்டது.

நண்பகல் 12.45 மணியளவில் மாவீரர்களைப் பெற்றெடுத்த தந்தை ஒருவரினால் பொதுச்சடர் ஏற்றிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து திமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ்கிளைப் பொறுப்பாளரினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கொள்கைவிளக்க உரை தொடர்ந்து வெண்திரையில் ஒளிபரப்பப்பட்டது. இன்றைய இடர்மிக்க காலகட்டத்தில் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது உரையினை தரமுடியவில்லை என்று முன்னுரை வழங்கியபோது மண்டபத்தில் கரகோசம் எழுப்பி, தலைவர் வருவார் நம்பணி தொடர்வோம் என்று மக்கள் ஆர்ப்பரித்ததை குறிப்பிட்டாக வேண்டும். மக்கள் மனதில் நம்பிக்கையையும் சுயவழிப்புணர்வையும் வளர்த்தெடுத்த தேசியத்தலைவர் தமிழீழத்தை நோக்கி மக்களை வழிநடாத்துவார் என்பது திண்ணம். தமிழர்களின் தேசியத் தலைவரது பாதையில் தமிழீழ விடுதலைப் புலிகள் என்றும் பயணிப்போம்! தடைகள், பெரும் இடர்களைத் தாண்டி எமது விடுதலைப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்பதை கருப்பொருளாகக் கொண்டு தலைமைச் செயலகத்தின் உரை அமைந்தது. தமிழின விடுதலைக்காய் தலைவரும் போராளிகளும் உறுதியுடன் தம்மை வழிநடாத்த வேண்டும் என்று அவாவி நின்ற மக்களுக்கு அப்பணிகளைத் தொடர்ந்து செய்வோம் என்ற உறுதிமொழியானது மக்கள் தமக்கான பணிகளை விரைவுபடுத்திச்செல்ல ஆர்வத்தையம் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கும் என்பது திண்ணம்.

உரையின் முடிவில் மணியோசை மண்டபம் நிறைக்க பறைமேளம் வான்வரை ஓசை எழுப்ப மாவீரர்களுக்கான ஈகைச்சுடர் மாவீரரைப் பெற்றெடுத்த தாயார் ஒருவாரால் ஏற்றிவைக்கப்பட்டது. அகவணக்கத்தினைத் தொடர்ந்து சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்த மாதிரி மாவீரர் துயிலும் இல்லமும், குறிப்பாக கரும்புலிகளுக்கான தூபிகளும் மின்விளக்குகளால் ஒளியூட்டப்பட்டு உத்தமர்களின் உறைவிடம் ஒளிப்பிரகாசமானது. நெய் விளக்கேந்தி மாவிரர் குடும்பத்தவர் வரிசையாக நிற்க தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தணப் பேழைகளே என்கின்ற கல்லறைப்பாடல் மக்களின் மனங்களையெல்லாம் ஆக்கிரமித்துக்கொண்டது. மலர்வளயமும் திபங்களும் மாவீர் நினைவுத்தூபி நோக்கி எடுத்துவரப்பட்டு சிறப்பு விருந்தினர் திரு. தணி குமார் சேரன் அவர்களால் மலர்வளயம் சாற்றப்பட மாவீரர்களது குடும்ப உறினரால் சுடர்வணக்கமும் தேசிய மலராம் கார்த்திகைப்பூக்கொண்டு மாவீரர்களுக்கான மலர்வணக்கமும் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் கலைபண்பாட்டுக்களக இசைக் குழுவினரால் மாவீரர் கானங்கள் இசைக்கப்பட மலர்வணக்கமும் சுடர் வணக்கமும் நிகழ்ந்துகொண்டிருந்தன. எமக்காய் வாழ்ந்து எமக்காய் மடிந்த ஈகைச் செல்வங்களே உங்களைப் போற்றுவதால் நாம் புனிதமடைகின்றோம்! உங்கள் கல்லறை மீதுமே சத்தியம் செய்துமெம் பணி தொடர்வோம் என்று வரிசையாக மக்கள் மாவீரர்தூபி நோக்கி அணிவகுத்து மலர் தூவி சுடர் ஏற்றி தமது வணக்கத்தைச் செலுத்தினர். எங்கிருந்து என்பது புரியாது. எவர் பிள்ளைகள் என்று பாராது. என்பிள்ளைதான் நீயோ என்று எல்லோரும் தமது பிள்ளைகளாய்எண்ணி மாவீர்களை பூசித்த காட்சியானது தமிழினத்தையும் ஈழவிடுதலையையும் எந்தத் துரோகமும் எந்த சதித் தந்திரங்களுக்கும் வென்றுவிடமுடியாது, அவை தூர விரட்டியடிக்கப்படும் என்பதை உணர்த்திநின்றது.

என்றுமில்லாதவறு மண்டபம் நிறைந்த மக்கள். ஒவ்வொருவரும் பொறுப்புடன்கூடிய சிந்தனை. நான் என்பது தொலைந்து நாமாக வளர்ந்து தேசியம் அங்கே திடகாத்திரத்தோடு நின்றது. மண்டபமேடையில் இவ் ஆண்டின் சிறப்பு வெளியீடுகளாக எழுச்சிகானங்களை உள்ளடக்கிய 3 இறுவெட்டுக்கள் மாவீரர் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த மொழிப்பற்றாளரும், தமிழீழ தேச விடுதலைக்காய் குரல்கொடுத்துவருபவருமான திரு. தணி குமார் சேரன் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டன. தொடர்ந்த சிறப்புவிருந்தினரின் சிறப்புரை இடம்பெற்றது. மக்களின் உறுதியான போராட்டம் தொடரவேண்டிய அவசியத்தையும் இனவிடுதலை என்பது ஈழவிடுதலையைத் தவிர வேறெந்த வழியிலும் சாத்தியமாகப்போவதில்லை என்பதையம் விலியுறுத்தி அவரது பேச்சு அமைந்தது.

நிகழ்வின் தொடர்ச்சியாக, சுவிஸ் கிளையின் தமிழீழ கல்விச் சேவையினரால் நடாத்தப்பட்ட மாவீரர் நாள் பேச்சுப் போட்டியில் பங்குகொண்ட மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வில் பல்கலைக்களக பேராசிரியரும் தமிழர்களின் உரிமைக்காய் நீண்டகாலமாய் குரல் கொடுத்துவருபவருமான மதிப்பிற்குரிய திரு. பீற்றர் சால்க் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி கௌரவித்தார். அனைத்து மாணவர்களும் மேடையில் வீற்றிருக்க 13 வயதுப் பிரிவில் முதலாம் இடத்தை தனதாக்கிய மாணவன் 'தமிழீழ விடுதலைப் போரில் பால்ராஜ் அண்ணா' என்ற தலைப்பில் உரையாற்றி மக்களின் பாராட்டினைப் பெற்றார்.

தொடர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை கலைபண்பாட்டுக் களகத்தினரால் வழங்கப்பட்ட 'வித்துக்கள்' என்கின்ற நாட்டிய நாடகம் தமிழ் மக்களின் இன்றைய அவலம் நிறைந்த வாழ்வுக்கு காரணமாயிருந்த முள்ளிவாய்க்கால்வரைக்குமான யுத்தம் எவ்வாறு நடைபெற்றுது?, உலக ஒழுங்கில் ஏற்பட்ட மாற்றங்கள் ஒரு உன்னதமான விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக எப்படித் திருப்பிவிடப்பட்டது என்பதையெல்லாம் ஆதாங்களோடு விளக்கியது. அத்தோடு, போராட்டத்தின் ஒரு அங்கமான பலம்பெயர் தமிழர்களின் போராட்ட எல்லை எது, அதன் தொடர்ச்சி என்ன, தொடர்ச்சியான போராட்டங்களினூடாக இன்று வதைமுகாம்களில் உள்ள மக்கள் உட்பட ஈழத்தாயின் அனைத்து மக்களுக்கமான பாதுகாப்பான வாழ்வை மீட்கவேண்டும் போன்ற கருத்துக்களை தத்ரூபமாக வெளிப்படுத்தியது.

இறுதி நிகழ்வாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளையின் அறிக்கை வாசிக்கப்பட்டது. தமிழீழ விடுதலையை வென்றெடுக்க தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது வழிநடாத்துதலில், அவர்களால் உருவாக்கப்பட்ட அனைத்துக் கட்டுமானங்களையும் பலப்படுத்தி தொடர்ந்து போராடுவோம் என்றும், தலைவனுக்கும் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கும் எந்நாளும் பக்கபலமாய் உள்ள மக்கள் தமக்கான பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இப்பணிகளை உறுதியுடனும் ஒற்றமையுடனும் முன்நின்று எமது கிளை முன்னெடுத்துச் செல்லும் என்றும் உறுதிகூறப்பட்டது.

இவ் ஆண்டின் மாவீரர் நிகழ்வின் சிறப்பம்சமாக பல்வேறு விடயங்கள் தென்பட்டாலும், மக்கள் முழுமனதோடு அனைத்து விடயங்களிலும் ஈடுபட்டமையானது சிறப்பிலும் சிறப்பாகும். உரிய நேரத்திற்கு வருகைதந்து, உணர்வுகளால் ஒன்றுபட்டு, கிளைச் செயற்பாட்டாளர்களோடு கரம்கோர்த்து அனைத்துப் பணிகளையும் முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்கிய மக்களை பாராட்டியாகவேண்டும்.

மாலை 5 மணிக்கு தேசியக்கொடி இறக்கத்தோடு நிகழ்ச்சி நிறைவுபெற்றது. வீடு திரம்பம் மக்கள் முகங்களில் புத்துணர்ர்சி புரையோடி இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. மாவீரர்கள் எதிரிக்கு சிம்மாசொப்பனமாகவும் தமிழர்க்கு ஆன்மபலமாகவும் இன்றுமட்டுமல்ல என்றும் விளங்குவார்கள் என்பதை ஒவ்வொரு தமிழர்களின்தும் வார்த்தைகளும் உணர்த்திநின்றது.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் மாவீரர் குடும்ப மதிப்பளிப்புக் குழுவின் ஏற்பாட்டில் முற்பகல் 11 மணியளவில் மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு அதே மண்டபத்தின் ஒரு பகுதியில் நடைபெற்றது. எமக்காய் தமைத் தந்த மாவீரர்களை ஈன்றெடுத்தவர்கள் மற்றும் சகோதர சகோதரிகள் கிளைச் செயற்பாட்டாளர்களோடு கூடிநின்று மாவீரராகிய பிள்ளைகளையும் அவர்தம் வாழ்வையம் பகிர்ந்துகொண்டதோடு அப் பிள்ளைகளின் செயலை எண்ணிப்பெருமை பாராட்டினர். அவர்களது இலட்சியத்தில் தமிழினம் விடிவுபெறவேண்டும் என்றும் மனதாரப் பிரார்தித்தனர். இந் நிகழ்வின் இறுதியில் எம் தேசியப் பூவாம் கார்த்திகைப் பூக்களை வழங்கி மதிப்பளிப்புக்குழுவினரால் மாவீரர்களின் பெற்றோர் மதிக்கப்பளிக்கப்பட்டனர்.

swiss1
swiss2
swiss3
swiss4
swiss5
swiss6
swiss7
swiss8
swiss9
swiss10
swiss11
swiss12
swiss13
swiss14
swiss15
swiss16
swiss17
swiss18
swiss19
swiss20
swiss21
swiss22
swiss23
swiss24
swiss25
swiss26
swiss27

0 Responses to சுவிஸ் தமிழீழ தேசிய மாவீரர் நாள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com