Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் செவ்வியில் எந்த தவறும் இல்லை என்றும் அந்த செவ்வியை வெளியிட்டதற்காக பொன்சேகா தமது பத்திரிகைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாக வெளியிடப்படும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என்றும் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பிரட்ரிக்கா ஜேன்ஸ் தெரிவித்துள்ளார்.

பொன்சேகாவை செவ்வி கண்ட விதம் மற்றும் அதற்கு பின்னணியில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து பிரட்ரிக்கா ஜேன்ஸ் சண்டே லீடரின் நேற்றைய பதிப்பில் விரிவாக எழுதியுள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

அரசதலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தலின்போது சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பது என்று சண்டே லீடர் நிர்வாகம் முடிவெடுத்தது. சண்டே லீடர் பத்திரிகைக்கு எதிராக அரசு தொடுத்துள்ள பல்வேறு வழக்குகள் மற்றும் பத்திரிகையின் ஆசிரியர் லசந்திவின் படுகொலை தொடர்பான விசாரணையில் அரசு தரப்பு மேற்கொண்டுவந்த இழுத்தடிப்புக்கள் ஆகியவற்றிலிருந்து பத்திரிகைக்கு சார்பான ஒரு முடிவை எடுப்பதற்கு தீர்மானித்த பத்திரிகை நிர்வாகம் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பது என்று முடிவெடுத்தது.

தனிப்பட்டமுறையில் - நேர்மையானதும் நடுநிலைமையானதுமான ஊடகவியலை முன்னெடுக்கவேண்டும் என்ற நிலைப்பாடு எனக்கு இருந்தபோதும்கூட - பத்திரிகையின் நிலை குறித்து நிர்வாகம் மேற்கொண்ட முடிவுக்கு நான் கட்டுப்பட்டுக்கொண்டேன்.

பொன்சேகாவுக்கு ஆதரவளி்க்கும் எமது பத்திரிகையின் நிலைப்பாட்டின் ஒரு நடவடிக்கையாக அவரது அரசியல் கருத்துக்களுக்கு இடமளிக்கும் வகையில் அவரை விரிவாக செவ்வி கண்டு பிரசுரிப்பது என்று நாம் தீர்மானித்தோம். இதன்பிரகாரம் கடந்த டிசெம்பர் 9 ஆம் திகதி செவ்விக்குரிய திகதியை பிரேரிப்பதாக கடந்த டிசெம்பர் 7 ஆம் திகதி பொன்சேகாவை தொடர்புகொண்டு தெரிவித்தோம். அவர் எம்மை டிசெம்பர் 8 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு தனது உத்தியோகபூர்வ வதிவிடத்துக்கு வருமாறு பணித்தார்.

நானும் பத்திரிகை முகாமையாளர் லால் குமாரதுங்கவும் எமது புகைப்படப்பிடிப்பாளரும் எமது பத்திரிகை ஊடகவியலாளரான ரக்னீஷ் விஜயவர்த்தனவும் அன்றைய தினம் பொன்சேகாவை செவ்வி காணச்சென்றிருந்தோம். சுமார் ஒரு மணிநேர தாமதத்திற்கு பின்னர் அவர் எம்மை சந்தித்தார்.

செவ்வி ஆரம்பமாகியது. எமது பத்திரிகை நிருபர் பொன்சேகாவிடம் பல விடயங்கள் தொடர்பாக கேள்விகளை தொடுத்தார். பொன்சேகாவும் சகலதுக்கும் பதில்களை வழங்கினார். செவ்வியின் இறுதிக்கேள்வியாக நான் அவரிடம், போர் இடம்பெற்ற கடைசிக்காலப்பகுதியில் சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறதே. உண்மையில் என்ன நடந்தது என்று கேட்டேன்.

அதற்கு அவர், சரணடையும் விடுதலைப்புலிகள் எவரையும் ஏற்றுக்கொள்ளவேண்டாம். அவர்களை சுட்டுக்கொல்லுங்கள் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச 58 ஆவது படையணி தளபதி சவீந்திர டி சில்வாவுக்கு தொலைபேசி மூலம் அறிவித்திருந்தார் என்று தான் ஊடகவியலாளர் ஒருவரின் ஊடாக அறிந்திருந்தார் என்று கூறினார்.

இந்த செவ்வி நேரம் முடிந்த பின்னர், அலுவலகத்துக்கு வந்த நான், பொன்சேகாவின் கருத்து குறித்து மேலும் விளக்கங்களை பெற்றுக்கொள்வதற்காக 58 ஆவது படையணி தளபதி சவீந்திர டி சில்வாவை தொடர்புகொண்ட இது பற்றி விசாரித்தேன். அதற்கு அவர், அனுமதியில்லாமல் தான் இந்த கேள்விக்கு பதிலளிக்கமுடியாது என்று கூறினார். இராணுவ பேச்சாளர் உதய நாணயக்காரவிடம் தொடர்புகொண்டு இது பற்றி கேட்டபோது - தான் எனக்க திருப்பி அழைப்பதாக கூறி தொலைபேசியை துண்டித்துவிட்டார். சிறிது நேரத்தின்பின்னர், என்னை மீண்டும் தொடர்புகொண்ட உதய நாணயக்கார, தான் இது விடயமாக இராணுவ தளபதி ஜகத் ஜயசூரிய மற்றும் சவீந்திர டி சில்வா ஆகியோரிடம் பேசியதாகவும் தாம் இந்த விவகாரத்தில் கருத்து கூறுவதில்லை என்று முடிவெடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த விடயத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாயவை தொடர்புகொண்டேன். அன்றைய தினம் அவர் செயலகத்துக்கு வருகைதரவில்லை என்று கூறிய அலுவலக பேச்சாளரிடம் நான் தொடர்புகொண்டதாகவும் கோத்தபாயவிடம் பேசவேண்டும் என்ற தகவலையும் கூறினேன். ஆனால், எமது பத்திரிகையின் மீது வழக்கு தாக்கல் செய்யுமளவுக்கு தீராத வன்மம் கொண்ட கோத்தபாய என்னை தொடர்புகொள்ளவில்லை.

இதற்கிடையில் கோத்தபாயவின் சகோதரரான பசிலை தொடர்புகொண்டு பேசியபோது பொன்சேகா கூறியது போன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று அவர் மறுக்கவில்லை.

டிசெம்பர் 12 ஆம் திகதி இந்த செய்தி அச்சுக்கு போவதற்கு முன்னர் நான் மீண்டும் பொன்சேகாவை தொடர்புகொண்டேன். செய்தி பற்றி அவரிடம் கூறி மேலும் விளக்கம் கோரியபோது, தான் தெரிவித்த கருத்துக்களில் எந்த பிழையும் இல்லை என்று அவர் சொன்னார். இந்த விவகாரம் குறித்து தகவல் தந்த ஊடகவியலாளர் யார் என்று பொன்சேகாவிடம் கேட்டபோது, அந்த ஊடகவியலாளரின் பெயரை கூறிய பொன்சேகா அவரது பெயரை செய்தியில் வெளியிடவேண்டாம் என்றும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் என்னை கேட்டுக்கொண்டார். அவர் கேட்டுக்கொண்டதற்கமைய நானும் அதனை செய்தியில் குறிப்பிடவில்லை.

அடுத்தநாள் இந்த செய்தி வெளியான பின்னர் அது கடந்த ஆண்டிலேயே சிறிலங்கா பத்திரிகைகளில் வெளியான பொறிபறக்கும் செய்தியாக எல்லாத்தரப்புக்களையம் பற்றிவிட்டது. அதன் பின்னர், பொன்சேகாவை நான் சந்தித்தபோதுகூட அவர் தனது கருத்தை மறுக்கவில்லை.

பொன்சேகாவின் கருத்தினால் அவர் சார்ந்திருக்கும் தமக்கு அரசியலில் பாரிய சிக்கல் ஏற்பட்டுவிடுமோ என்று அச்சம் கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியில் ஒரு பகுதியினரும் ஜே.வி.பியினரும் சண்டே லீடருக்கு வசைமழை பொழிய ஆரம்பித்திருப்பதுடன் பொன்சேகாவுக்கும் அழுத்தம் கொடுத்து அவரை இந்த செய்தி தொடர்பான மறுப்பை வெளியிடுமாறு வற்புறுத்திவருகின்றனர்.

ஆனால், நாட்டின் அரசதலைவரின் சகோதரருக்கு எதிராக - வெளிப்படையாக - உண்மையை வெளியிட்ட பொன்சேகா இது விடயத்தில் என்னிடம் எந்த மறுப்பையும் தெரிவிக்கவில்லை. எமது பத்திரிகைக்கு எதிராக வழக்கு தொடரப்போவதாகவும் பொன்சேகாவின் செவ்வியை வெளியிட்டதற்காக கோத்தபாய என்னை கைது செய்யப்போகிறார் என்று பொன்சேகாவிடம் சென்று நான் அழுதததாகவும் ஜே.வி.பியினர் சிலர் வதந்திகளை பரப்பிவருகின்றனர். இதில் எந்த உண்மையும் இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to பொன்சேகாவின் சண்டே லீடர் செவ்வி: பின்னணியில் நடந்த சம்பவங்களை விளக்குகிறார் ஆசிரியர் பிரட்ரிக்கா ஜேன்ஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com