மதிமுக பொதுச்செயலர் வைகோ பொங்கல் பண்டிகை குறித்த வாழ்த்துச்செய்தியில் இலங்கை பிரச்சனை தொடர்பான வருத்தங்களை தெரிவித்துள்ளார்.’’தலைமுறை தலைமுறையாக தமிழர்கள் கொண்டாடி வரும் இனிய விழாதான் தைப்பொங்கல் விழா. இது இயற்கைக்கு நன்றியும் உழைப்புக்கு உயர்வும் தந்து உலக மக்களை வாழ வைக்கும் உழுதொழில் வேளாண்மைக்கு மகுடம் சூட்டும் விழா ஆகும்.
கரும்பும் சர்க்கரைப் பொங்கலும் தமிழர் திருநாளில் நாவுக்குச் சுவை தரும் என்றாலும் நம் இதயத்தில் இனிப்பு இல்லை, உப்பு கரிக்கிறது நெஞ்சில் வடிந்த கண்ணீரால்.
இலங்கைத் தீவில் நம் தமிழ் இனம் கொலைக்களத்தில் வதைபட்டது. அவர்களின் வேதனை நீங்கி உரிமை வாழ்வு பூக்கவும், சுதந்திரத் தமிழ் ஈழம் மலரவும் உறுதி கொண்டு பணியாற்றி இப்பொங்கல் திருநாளில் சூளுரைப்போம்.
தமிழகத்தில் முல்லைப்பெரியாறு உள்ளிட்ட நதிகளின் வாழ்வாதாரங்களுக்கு ஆபத்து நேர்ந்துள்ளது. இந்த அறைகூவல்களை எதிர்கொண்டு தமிழகத்தின் உரிமைகளைக் காக்கவும், விவசாயிகளின் அல்லல்களைப் போக்க உரிய கடமை ஆற்றவும் இந்த தைப் பொங்கல் நாளில் உறுதி கொள்வோம்.
தமிழக மக்கள் நலனுடன், மகிழ்வுடன், ஒற்றுமையுடன் வாழவும், தைத் திருநாளில் தங்கள் வீடுகளில் பொங்கலைக் கொண்டாடவும் எனது இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.
நன்றி: நக்கீரன்



நலனுடன், மகிழ்வுடன், ஒற்றுமையுடன் வாழவும்