Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழர் கூட்டமைப்பினர் மதில் மேல் பூனையாக நில்லாமல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார்கள். இதில் உள்ள சாதக பாதங்களை பார்க்கலாம்.

சாதகமான நிலை

01. தமிழர் கூட்டமைப்பு இதுதான் எமது முடிவென்று தற்றுணிபாக ஒரு முடிவுக்கு முதல் தடவையாக வந்திருப்பது பாராட்டப்பட வேண்டியதே. புலிகள் தீர்மானம் செய்ய இறப்பர் ஸ்டாம்பு அரசியல் செய்த கூட்டமைப்பு துணிந்து ஒரு முடிவை எடுத்தது அதனுடைய வரலாற்றில் முக்கியமான முடிவாகும்.

02. தமிழர்களின் மற்றைய குழுக்களான கருணா, பிள்ளையான், டக்ளஸ், சித்தாத்தன், ஆனந்தசங்கரி போன்றவர்கள் மகிந்தவை ஆதரிக்கிறார்கள். இந்த நிலையில் மகிந்தவை கூட்டமைப்பும் ஆதரித்தால் அவர்களுக்கும் கூட்டமைப்பிற்கும் தெளிவான வேறுபாடில்லாமல் போய்விடும். ஆகவே அந்த அணிகளில் இருந்து கூட்டமைப்பினர் தம்மை வேறுபடுத்தியிருக்கிறார்கள்.

03. சிவாஜிலிங்கத்தை ஆதரித்தால் கூட்மைப்பின் ஒரு பிரிவான டெலோவின் கையில் தலைமையை கொடுத்து, அதன் பின்னால் போவது போன்ற நிலையை ஏற்படுத்திவிடும். கூட்டமைப்பு என்பது அதில் உள்ள எந்தவொரு தனிக்கட்சிக்கும் முதன்மை கொடுக்காதிருக்க வேண்டும் என்ற கோணத்தில் இந்த முடிவு தவிர்க்க முடியாததே.

04. மகிந்தவின் அதிகார பலம், பின்னணியில் உள்ள கோத்தபாய ராஜபக்ஷ, வெள்ளை வான்கள், இலங்கையில் உள்ள இந்திய தேர்தல் ஆலோசகர்களின் வியூகங்களுக்கிடையில் வெறுங்கையுடன் நிற்கும் கூட்டமைப்பு அதற்கு மாறாக எடுத்த முடிவு துணிச்சாலனதே.

05. சரத் பொன்சேகாவும், ரணிலும் ஏதோ ஒரு தீர்வு வடிவத்தை கையொப்பமிட்டு கொடுத்துள்ளார்கள். அது சரியா தவறா என்பதற்கு அப்பால் மகிந்த ராஜபக்ஷ கொடுக்காத ஒரு வாக்குறுதியை அவர்கள் கொடுத்துள்ளார்கள்.

06. இரண்டு வேட்பாளரையும் புறக்கணித்து இனி நாம் பெறப்போவது என்ன ? என்ற கேள்விக்கு பதில் இல்லை. ஆகவே யாரோ ஒருவரை ஆதரித்து அவர் மூலம் பேரம் பேசலாம் என்று முயற்சித்துள்ளார்கள்.

07. மகிந்தவின் குடும்ப ஆட்சியை மாற்ற வேண்டும் என்ற முடிவில் தமிழ் மக்களின் முக்கிய கட்சி ஒன்றும் இணைந்துள்ளமை கவனயீர்ப்பு பெற்றுள்ளது.

08. எந்தத் தீர்வையும் ஏற்காது, எதையாவது ஏற்றால் எதிர் விமர்சனம் வருமோ என்று அஞ்சி, எல்லாவற்றையும் தண்ணீர் பானைபோல போட்டுடைக்காமல் ஒரு முடிவெடுத்தது நல்லதே.

09. ஆட்சி மாற்றம் கே.பி என்பவர் யார் என்ற கேள்விக்கும் பதில் தரும்.

10. எல்லாக் கட்சிகளும் ஏதோ ஒரு பேரம் பேசலில் விலைப்பட்டுவிட்டன. இனி கூட்டமைப்பு மட்டும் தனியாக நின்று சிவாஜிலிங்கத்தை ஆதரித்து என்ன பயன் ?

சாதகமற்ற நிலை

01. வன்னிப் போர்க்களத்தில் தமிழ் மக்கள் சிந்திய இரத்தம் சரத் பொன்சேகா கைகளிலும் படிந்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒருவரை ஆதரிப்பது சரியா என்ற கேள்விக்கு பதில் கூற முடியாத நிலை இருக்கிறது.

02. மகிந்த குடும்பத்துடன் கூடியிருந்து இன்று அவர்களையே கைவிட்ட சரத் நாளைக்கு கூட்மைப்பை கைவிடமாட்டார் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

03. தந்தை செல்வா யூ.என்.பியை ஆதரித்த காலத்து அரசியலுக்கு போயிருக்கிறோம். வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு முந்திய அரசியலுக்குள் போன பின்பு மீண்டும் வட்டுக்கோட்டை தீர்மானம் எதற்கு என்ற கேள்வி உருவாக வாய்ப்புண்டு.

04. கூட்டமைப்பின் வெளிப்படையான ஆதரவு இனவாதிகளை மகிந்த பக்கமாக திருப்பிவிட வாய்ப்பிருக்கிறது.

05. வடக்குக் கிழக்கு மக்களோடு மக்களாக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லை. கொழும்பிலும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வாழ்ந்து கொண்டு மக்கள் சார்பில் கருத்துரைப்பது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தலாம்.

06. இப்பொழுது கூட வெளிநாடுகளில் உள்ள புலிகளின் ஆலோசனையை கேட்டுத்தான் கூட்டமைப்பு செயற்பட்டுள்ளது. அது தனது மக்களிடம் இது குறித்து ஒரு பொதுக் கூட்டம் கூட வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழ வாய்ப்புண்டு. எங்களை தீர்மானிக்க நீங்கள் யார் ? என்ற கேள்வி யாழ். மக்களிடத்தில் இருந்து வரலாம்.

07. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், மதக்குழுக்கள், சமூக ஆர்வலர்கள், உயர்கல்வி நிறுவனங்கள், அரசியல் கற்றவர்கள் என்று புத்திஜீவிகள் யாவரும் புறந்தள்ளப்பட்ட அரசியலே வடக்கிலும் கிழக்கிலும் 30 வருடங்களாக நடந்தது, இனியும் அதுதான் தொடர் கதையா என்ற வலி வடக்குக் கிழக்கில் ஏற்படலாம்.

08. எல்லைகடந்த தமிழீழ அரசு, வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஆகியவற்றுக்கும் நாட்டின் யதார்த்த நிலைக்கும் பலத்த இடைவெளி இருப்பதை இந்த முடிவு காட்டும். இதைப் பார்க்காமல் நாம் கண்களை வசதியாக மூடினாலும் வெளிநாடுகள் பார்க்கும்.

09. யார் மீதாவது துரோகிப்பட்டம் கட்டி அவதூறு செய்யும் ஒரு குழு வெளிநாட்டில் உள்ளது. அவர்கள் வசதியாக சம்மந்தர் மீது சேற்றை வாரி இறைக்க வழி பிறக்கும்.

10. விடுதலைப் புலி ஆதரவாளர் போல வேடமிட்டு, எதிரிகளே சம்மந்தர் மீது புரளி கிளப்பி சேறடிக்க முயல்வார்கள்.

தொகுப்பு

யார் வெற்றி பெறுவார் என்பது தெளிவாக தெரிந்தால் அவருடன் இரகசிய ஒப்பந்தம் செய்துவிட்டு மக்களே தீர்மானிக்கட்டும் என்று நழுவிவிடலாம். ஆனால் இலங்கை வரலாற்றில் யார் வெல்வார் என்று யாருக்குமே தெரியாத முதலாவது தேர்தல் இதுவாகும். இந்தத் தேர்தலில் ஏதோ ஒரு பக்கம் சாராது அரசியல் செய்ய வழியில்லை.

புது மாத்தளனில் அமைக்கப்பட்ட இராணுவ வீரருக்கான சமாதியின் முன்னால் சரத் பொன்சேகா இல்லை. ஆட்சிக்கு வந்தது முதல் புது மாத்தளனில் சமாதி வைத்து, மாதகலில் புத்தவிகாரையை புதுப்பித்ததைவிட மகிந்த தமிழருக்கு எதுவும் செய்யவில்லை. அவருக்கு மீண்டும் ஆதரவளித்து யாது பயன் என்ற கோணத்தில் கூட்டமைப்பு இந்த இடத்திற்கு வந்துள்ளதாகவும் கருதலாம்.

கூட்டமைப்பிற்கு இதை விட்டால் வேறு வழியில்லை.

இலங்கையின் இன்றய அரசியல் கள யதார்த்தத்திலும் வேறு ஆடுகளம் எதுவும் இல்லை.

கூட்டமைப்பு மேலே சொன்ன விடயங்களை எல்லாம் விவாதித்துத்தான் முடிவெடுத்திருக்கும் என்றும் கருதிவிட முடியாது. கந்தையா ஆற்றில் பாய்ந்தால் பொன்னையா குளத்தில் பாயும் என்பதைப் போலவும் பாய்ந்திருக்கலாம்.

ஏதோ ஒரு நம்பிக்கை பாய்ந்துவிட்டார்கள்.

கூட்டமைப்பினர்தானே ஆயுதம் கையில் இல்லாமல் வேஷ்டி, சட்டையுடன் நிற்கிறார்களே! நாம் மனம்போனபடி துரோகிப்பட்டம் கட்டி சன்னதமாடலாம் என்று எண்ணுவோர் மேலே சொன்ன விடயங்களை சீர்துக்கிவிட்டே சேற்றை அள்ள முற்பட வேண்டும்.

கூட்டமைப்பினரோ யாரோ கூற அதன்படி கும்பலாக ஓட இலங்கைத் தமிழர் இப்போதும் தயாராக இருப்பார்கள் என்று கருதிவிட முடியாது.

இது தமிழரசு, .பி.ஆர்.எல்.எப் முடிவு மட்டுமே என்று சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

தமிழ் மக்களிடையே முடிவெடுக்க முடியாத அரசியல் தள்ளாட்டம் ஏற்பட சேறள்ளி வீசுவோரே முக்கிய காரணம். ஆகவே சேறள்ளி வீசாது மக்களுக்கும் மனமுள்ளது என்ற கோணத்தில் அனைவர் கருத்துக்களையும் தொகுத்து சிந்தித்துப் பார்ப்பதே அறிவுக்கு வெளிச்சமாகும்.

நன்றி: அலைகள்

0 Responses to கூட்டமைப்பினர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்கும் முடிவு சரியானதா ? ஒரு முக்கோணப் பார்வை.

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com