Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

(மேலதிக இணைப்பு) இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை பேணி அவர்களின் நோக்கங்களை தெளிவாக கற்றறிந்து அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை தந்திரோபாயமாக முறியடித்ததால்தான் சிறிலங்கா போரில் வெற்றிபெற இலகுவாகவிருந்தது என்று சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற சந்திப்பொன்றில் எவ்வாறு வன்னிப்போர் வெற்றிக்கொள்ளப்பட்டது என்று விளக்கம் அளித்தார் கோத்தபாய ராஜபக்ச.

இந்தியாவை கையாண்டவிதம்

சிறிலங்காவுக்கு நெருக்கமான எத்தனையோ நாடுகள் உள்ளன. ஆனால், இந்தியா மாத்திரமே சிறிலங்கா விடயத்தில் இராணுவ ரீதியாக உதவிசெய்ய முடியும். இந்தியாவால் மாத்திரமே சிறிலங்காவின் இராணுவ விடயத்தில் தனது செல்வாக்கை செலுத்தமுடியும். அதற்கு பல காரணங்கள் உண்டு. பலமான இராணுவத்தை கொண்டுள்ள நாடு, 28 மைல்களே தொலைவில் உள்ள நாடு, ஆறு கோடி தமிழ்மக்களை கொண்ட தமிழ்நாட்டினை கொண்டுள்ள தேசம் என பல விடயங்களை கூறலாம்.

அரசதலைவர் மகிந்த தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் 2005 அம் ஆண்டு டிசெம்பரில் இந்தியா சென்றார். அங்கு புறப்படுவதற்கு முன்னர், விரிவான பாதுகாப்புத்துறை ஆவணம் ஒன்றை தயாரித்துதரும்படி என்னிடம் கோரினார். விடுதலைப்புலிகளின் படைவலு, சிறிலங்கா படைகளின் படைவலு என்பவை உட்பட அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய ஆவணம் ஒன்றை நான் மகிந்தவிடம் கையளித்தேன். இந்தியா சென்ற மகிந்த, அந்த ஆவணத்தை அந்நாட்டு அரசுத்தலைவர்களிடமும் பாதுகாப்புத்தரப்பினரிடமும் காண்பித்தார். சிறிலங்கா அரசு அமைதி பேச்சுக்களில் ஈடுபடுவதற்கு தயாராக இருப்பதையும் விடுதலைப்புலிகளின் படைவலுகுறித்த விவரத்தையும் காண்பித்து விடுதலைப்புலிகள் பேச்சுக்களுக்கு தயாரில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

சிறிலங்காவின் மீது இந்தியா பல்வேறு காலப்பகுதிகளில் எவ்வாறு அழுத்தங்களை பிரயோகித்தது என்பதை மகிந்த நன்கறிவார். இதனடிப்படையில், இந்தியாவின் செயற்பாடுகளை அரசதலைவர் தந்திரோபாயமுறையில் முறியடித்தார். என்னையும் அரசதலைவரின் செயலர் வீரதுங்கவையும் பசில் ராஜபக்சவையும் அடக்கிய விசேட குழு ஒன்றை மகிந்த நியமித்தார். இந்திய தரப்பினரின் விசேட குழுவினருடன் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி கலந்தாலோசித்து இருநாடுகளுக்கும் இடையில் ஏற்படக்கூடிய சகல பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்.

பிரச்சினைகள் வரும்போதெல்லாம் இருதரப்பு குழுக்களும் பேசி உடனடியாகவே அதற்கு தீர்வு கண்டோம். உதாரணமாக ஒரு சம்பவத்தை கூறவேண்டுமானால், இந்திய தேர்தலுக்கு சற்று முன்னர் இடம்பெற்றதை குறிப்பிடலாம். இந்தியாவின் வெளிவிவகார செயலர் சிவசங்கர் மேனன் ஒருநாள் 4.30 மணிக்கு எனது செல்லிடத்தொலைபேசிக்கு அழைத்தார். ”கோத்தபாய இங்கு ஒரு பிரச்சினை ( கலைஞரின் உண்ணாவிரதம்). மிகவும் முக்கியமானது. நான் சிறிலங்காவுக்கு வரவேண்டும். வந்து அரசதலைவர் மகிந்தவை சந்தித்து பேசவேண்டும்என்றார். ”ஐந்து நிமிடங்கள் தாருங்கள். நான் மகிந்தவுடன் பேசிவிட்டு உங்களுக்கு அறிவிக்கிறேன்என்று கூறினேன்.

மகிந்தவுடன் பேச, அவரும் உடனடியாக சிவசங்கர் மேனனை வரும்படி கூறினார். நான் தகவலை சிவசங்கர் மேனனுக்கு தெரியப்படுத்தினேன். 10 நிமிடங்களுக்குள் எமது தரப்பிலிருந்து தகவல் அனுப்பப்பட்டது. இரவு 11 மணி முதல் அவர்கள் சிறிலங்காவுக்கு வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அதிகாலை 5 மணிக்கு இந்தியத்தரப்பினர் கொழும்பு வந்தார்கள். அரசதலைவர் மகிந்தவை சந்தித்தார்கள். பிரச்சினை குறித்து பேசி முடிவெடுத்தார்கள். இந்திய தரப்பினர் மகிழ்ச்சியுடன் நாடு திரும்பினார்கள். அதற்கு பின்னர் என்ன நடந்தது என்பது உங்களுக்கு தெரியும். கருணாநிதி உடனடியாகவே தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

சாதாரணமான முறையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நாங்கள் முயற்சிசெய்திருந்தால், அதற்கு முன்று நான்கு நாட்கள் எடுத்திருக்கும். சிலவேளைகளில் எமது கைகளை மீறி பல பிரச்சினைகள் இடம்பெற்றிருக்கும். சகல பிரச்சினைகளையும் ஒவ்வொன்றாக ஆராய்ந்து அவற்றுக்கு தீர்க்கமான முடிவு எடுத்ததால் எல்லாமே சுமூகமாக நடந்துமுடிந்தது.

வெளிநாட்டு அழுத்தங்களை வெற்றி கொண்டவிதம்

நாங்கள் ஈரான் சீனா ரசியா லிபியா பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை பேணினோம். அவ்வாறான உறவுகள் தொடர்பாக பலர் அதிருப்தி வெளியிட்டார்கள். ஆனால் அப்படியான நாடுகள்தான் வெளியுலக அரசியலில் அழுத்தங்கள் ஏற்படும்போது எமக்கு கைகொடுக்கும் என முன்னரே எமக்கு தெரிந்திருந்தது.

ஐக்கிய நாடுகள் சபையில் எமக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணை முறியடிப்பதற்கு இந்த நாடுகளே எமக்கு உதவி செய்தன.

உள்நாட்டு அரசியலை கையாண்டவிதம்

அரசாங்கத்தின் வரவு - செலவுத்திட்ட விவகாரமும் இதுபோன்ற ஒன்றுதான். எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஏன் கட்சிக்குள் எடுக்கிறீர்கள் என்றும் அமைச்சு பதவிகளை அதிகரிக்கிறீர்கள் என்றும் பலர் அரசை குற்றஞ்சாட்டினர். இந்தவிடயங்களை கவனமாக கையாண்ட காரணத்தினால்தான், 2007 ஆம் ஆண்டு வரவு - செலவு திட்டத்தில் அரசு வெற்றிகொள்ளமுடிந்தது. அது தோல்வியடைந்திருந்தால் பல பிரச்சினைகள் உருவாகியிருக்கும்.

இப்படியான முடிவுகளை எடுத்ததால் நாட்டில் அரசியல் உறுதிநிலையை பேணமுடிந்தது. அரசியல் உறுதிநிலை என்பது மிக முக்கியமான விடயம். ஏனெனில் போரை முடிப்பதற்கு மகிந்த தீர்மானித்தார். அதற்கு நாட்டில் அரசியல் உறுதிநிலை அத்தியாவசிய தேவையாக இருந்தது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கை

30 வருடங்களாக எம்மால் இந்தபோரை வெற்றி கொள்ளமுடியவில்லை. இம்முறை இந்த போரை வெற்றி கொண்டதற்கு பிரதான காரணம் எமது இராணுவத்தினரின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்தியமை ஆகும். உதாரணமாக 90களில் யாழ் கோட்டை மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதலில் ஒரு மணித்தியாலத்தில் 92 இராணுவத்தினர் இழந்தோம். அவர்களை நிரப்பீடு செய்வதற்கு எம்மிடம் இராணுவத்தினர் இருக்கவில்லை. ஆனால் அவ்வாறான சூழ்நிலையை மாற்றினோம்.

நாம் ஆட்சி அமைக்கும்போது ஒரு இலட்சம் இராணுவத்தினர் இருந்தனர். நாங்கள் இரண்டு இலட்சமாக மாற்றினோம். ஒவ்வொரு மாதமும் 5000 இராணுவத்தினர் என்ற கணக்கில் தொடர்ச்சியாக மூன்றரை வருடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்துகொண்டிருந்தோம்.

2001 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு தேவையான வெடிபொருட்கள் இல்லாத நிலைமை இருந்தது. ஆகவே, போர்நிறுத்தத்தை அறிவித்தார்கள். அன்றுமுதல் 2005 ஆம் ஆண்டுவரை ஆயுதங்களை இறக்குமதி செய்தார்கள். 2005 ஆம் ஆண்டில் அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களை பாருங்கள். அவற்றை இன்னமும் நாங்கள் தேடி எடுத்துக்கொண்டிருக்கிறோம். இரண்டு நாட்டு இராணுவத்தினருக்கு போதுமான ஆயதங்கள் அவர்களிடம் இருந்துள்ளன. அவை எங்கிருந்து வந்தன? அவர்கள் உற்பத்தி செய்தார்களா? இல்லை. கடல்வழியாக பெருந்தொகையாக இறக்குமதி செய்தார்கள்.

இதனை தொடர்ந்தும் அவர்கள் மேற்கொள்ளாமல் தடுக்கவேண்டுமானால் எமது கடற்படையை வலுப்படுத்தவேண்டியிருந்தது. இராணுவத்தின் தொகையை அதிகரித்தது போலவே அரசதலைவர் மகிந்த கடற்படையின் வலுவையும் அதிகரித்தார். சிறிலங்கா கடற்படையினர் 1800 கடல்மைல்களுக்கு அப்பால் சென்று விடுதலைப்புலிகளின் ஆயதக்கப்பல்களை தேடி அழித்தனர். வரலாற்றில் முதல்தடவையாக இவ்வாறு நடந்திருக்கிறது.

வடபகுதிக்கும் திருகோணமலைக்கும் இடையில் படையினரை ஏற்றி இறக்கும்போது கடற்படையினரின் கடற்புலிகளின் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கிவந்தனர். அக்காலப்பகுதியில் கடற்புலிகள் மிகவும் பலம்வாய்நதவர்களாக காணப்பட்டனர். யாழ்ப்பாணத்திலிருந்து முழுப்படையினரையும் இந்திய கடற்படையினரின் உதவியுடன் கொழும்புக்கு கொண்டுவர முன்னைய அரசு திட்டமிட்டிருந்தது உங்களுக்கு தெரியும். அந்த அச்சுறுத்தலிலிருந்து எமது கடற்படையினரை காப்பாற்றி, விடுதலைப்புலிகளுக்க எதிரான நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு அரச தலைவர் நடவடிக்கை எடுத்தார்.

விமானப்படையும் இதேபோன்ற வளர்ச்சியை கண்டது. 2005 ஆம் ஆண்டுக்கு முன் 38 விமானஓட்டிகளை சிறிலங்கா விமானப்படை இழந்திருந்தது. தாக்குதல் நடவடிக்கைக்கு புறப்படும் விமானிகள் உயிருடன் திரும்பிவருவார்களா என்பதுகூட சந்தேகத்துக்குரிய விடயமாகவே அப்போது காணப்பட்டது. ஆனால், மகிந்தவின் ஆட்சிக்கு பின்னர் இந்தநிலை மாறியது. ஒரு விமானம்கூட சுட்டுவீழ்த்தப்படவில்லை. ஒரு விமானிகூட உயிரிழக்கவில்லை. இலக்குகளை சரியாக இனம்கண்டு தாக்கினார்கள். உதாரணமாக தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்ட சம்பவத்தை கூறலாம்.

இவை எல்லாவற்றுக்கும் காரணம் சரியான தலைமைத்துவம்தான். முப்படைகளும் முறையாக செயற்பட்டபோதும் அவற்றால் முன்பெல்லாம் வெற்றியீட்டமுடியாதிருந்தது. ஆனால், 2005 ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பின்னர் அந்த வெற்றியை பெறமுடிந்ததென்றால் அதற்கு காரணம் தெளிவான நோக்கமும் முறையான தலைமைத்துவமும்தான்.

- இவ்வாறு அவர் கூறினார்.

0 Responses to வன்னிப்போரை வெற்றிகொண்டது எவ்வாறு? விளக்குகிறார் கோத்தபாய

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com