இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதிக் கட்டத்தில் மே மாதம் 17ஆம் திகதி விடுதலைப் புலிகளின் நடேசன், புலித்தேவன் போன்ற தலைவர்கள், தாம் சரண் அடைய ஏற்பாடு செய்துதரும்படி என்னிடம் கேட்டார்கள்.அதற்கு நான் ""உங்களுடைய முடிவு, காலம் பிந்தியது. இருந்தாலும் நீங்கள் வெள்ளைக் கொடியுடன் சென்று படையினரிடம் சரண் அடையுங்கள்'' என்று கூறினேன். அதற்கு முன்னதாக புலிகள் சரணடைவது குறித்து சிறீலங்கா அரசுக்கும் தெரியப்படுத்தி இருந்தேன்.
அவர்கள் சரண் அடைவதற்கான ஒழுங்குகள் குறித்து சிறீலங்கா அரசுக்கு ஏற்கனவே தெரியப்படுத்தப்பட்டிருந்தது என்பதனை என்னால் உறுதியாகக் கூறமுடியும். இவ்வாறு தெரிவித்தார் நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சரும், விடுதலைப் புலிகள் சிறீலங்கா அரசு சமாதானப் பேச்சுக்கான அனுசரணையாளருமான எரிக்சொல்ஹெய்ம்.
இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஊடகவியலாளர்களிடம் அவர் இத்தகவலை நேற்று வெளியிட்டார். அவர் சிறீலங்கா ஊடகவியலாளரிடம் மேலும் தெரிவித்த தகவல்கள், விவரங்கள் வருமாறு :
"இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் புலிகளின் தலைவர் பிரபாகரனும் கேட்டுக்கொண்டமைக்கு இணங்க இலங்கை விவகாரத்தில் மத்தியஸ்தம் வகிப்பதற்கு நாங்கள் முன்வந்திருந்தோம். கடைசிவரை யுத்தத்தைத் தவிர்த்து இரு தரப்புகளுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்த நாங்கள் முயற்சி எடுத்தோம். ஆனால் இரு தரப்பினரும் பல தடவைகள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இறுதியில் போர் ஏற்பட்டுவிட்டது.'' என்றும் சொல்லி வருத்தப்பட்டார் சொல்ஹெய்ம்.
கேள்வி: யுத்தத்தின் இறுதிக்காலப்பகுதியில் சரணடைவது தொடர்பாகப் புலிகள் உங்களுடன் தொடர்பு கொண்டார்களா?
பதில்: ஆம். 2009 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் பல தடவைகள் என்னுடன் தொடர்புகொண்டு போரை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார். நாங்களும் அதற்காகப் பல வழிகளில் முயன்றுகொண்டிருந்தோம். இறுதியாக கடந்த வருடம் மே 17 ஆம் திகதி வன்னியிலிருந்து நடேசன், புலித்தேவன் போன்ற புலித்தலைவர்கள் வன்னியிலிருந்து என்னுடன் தொடர்புகொண்டு தாங்கள் யுத்தத்தை நிறுத்தி சரணடையப்போகிறார்கள் என்றும் அதற்கு ஏற்பாடு செய்து தரும்படியும் கேட்டார்கள்.
அதற்கு நான் ""உங்களுடைய முடிவு, காலம் பிந்தியதாகிவிட்டது. இருந்தாலும், நீங்கள் வெள்ளைக்கொடியுடன் சென்று படையினரிடம் சரணடையுங்கள்'' என்று தெரிவித்தேன். அதற்கு முதல் புலிகளின் சரணடைவு குறித்து சிறீலங்கா அரசுக்கும் நான் தெரியப்படுத்தியிருந்தேன்.
எங்களுடன் மாத்திரமல்ல, செஞ்சிலுவைச் சர்வதேசக்குழு, ஐ.நா. போன்ற பல தரப்புகளுடனும் அவர்கள் தொடர்புகொண்டு பேசிய பிறகே சரணடைந்தார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் சரணடைவதற்கான ஒழுங்குகள் பற்றி ஏற்கனவே சிறீலங்கா அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்தது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.
ஆனால் அரசு சார்பான எவருடன் பேசினேன் என்பதை நான் கூற விரும்பவில்லை. ஆனால் புலித்தலைவர்கள் தொடர்பு கொண்டு சில மணித்தியாலங்களின் பின்னர் நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று நான் அறிந்துகொண்டேன்.
கேள்வி: போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என்று கருதுகிறீர்களா?
பதில்: ஆம். யுத்தத்தின் இறுதிப்பகுதியில் பல போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டன என்ற குற்றச்சாட்டு குறித்து சுயாதீன விசாரணை ஒன்று தேவை. அதைத்தான் ஐ. நா. செயலரும் வலியுறுத்துகிறார். எமது நிலைப்பாடும் அதுதான். சர்வதேச சுயாதீன விசாரணைகள் மூலம் மேலும் பல உண்மைகள் வெளிவரலாம்.
கேள்வி: இலங்கையின் தற்போதைய அரசுடனான உங்களுடைய உறவுகள் பற்றி...?
பதில்: இரு தரப்புகளுக்கும் இடையில் சாதாரணமான உறவு இருக்கிறது. புதிய அரசுக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்காக சில அமைச்சர்களை இங்கு அழைக்க இருக்கிறோம். இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசுக்கு நல்ல வாய்ப்பு கிட்டியிருக்கிறது.
கடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் தங்களுடைய அமோக ஆதரவை வழங்கியிருக்கிறார்கள். எனவே அவர்களுடன் பேசி தமிழர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாண வேண்டும் என்பதே எமது விருப்பம் என்றார்.



0 Responses to புலிகள் சரணடையும் தகவல் அரசுக்கு ஏற்கனவே தெரியும்: கூறுகிறார் சொல்யஹய்ம்