அரசாங்கத்துடனான பத்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கப்பட்ட மூன்று விடயங்கள் தொடர்பில் ஒரு மாதம் பூர்த்தியாகியுள்ள போதிலும் இதுவரையில் அரச தரப்பிலிருந்து உத்தியோகபூர்வமாக எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வாய் மூல உறுதிமொழிகளில் எந்த பயனும் கிடையாது எனக் கூறியுள்ள கூட்டமைப்பு, அரசாங்கத்திடமிருந்து உரிய பதில் கிட்டவில்லையேல் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நகர வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழர் விவகாரம் தொடர்பில் அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குமிடையிலான பேச்சுக்களின் 10 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது, ஆட்சி அதிகார முறைமை, மத்திய மாநில அரசுகளுக்கிடையிலான விடயதானங்கள், செயற்பாடுகள் மற்றும் வரி, நிதி அதிகாரங்கள் ஆகிய மூன்று விடயங்களை முன்வைத்து கூட்டமைப்பு அதற்கு அரசாங்கத்திடமிருந்து இரண்டு வாரங்களுக்குள் பதிலை எதிர்பார்ப்பதாகவும் அதுவரையில் பேச்சுக்கள் சாத்தியமில்லை என்றும் தெரிவித்திருந்தது.
ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதியே இவ்வாறு கூட்டமைப்பு காலக்கெடு விதித்திருந்தது. இன்று செப்டெம்பர் 3 ஆம் திகதியுடன் ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் கேட்டபோதே அதன் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்:
கூட்டமைப்பினால் முன் வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு முன் வைக்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைந்துவிட்டது. அது மட்டுமல்லாது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. ஆனாலும் இது வரையில் அரசாங்கம் உத்தியோக பூர்வமாக எமக்கு எந்தவித பதிலையும் தரவில்லை.
இருப்பினும் வெளிநாட்டுத் தூதுவர்களுடனான சந்திப்பு ஒன்றில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை தொடர்வதற்கான ஆர்வம் அரசாங்கத்திடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாது அமைச்சர்களும் இவ்வாறான கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.
எப்படி இருப்பினும் இது வாய் மூல பேச்சுக்களே அன்றி உத்தியோகபூர்வ உத்தரவாதங்களாக இல்லை. ஏற்கனவே நாம் குறிப்பிட்டிருப்பது போன்று கூட்டமைப்பினால் முன் வைக்கப்பட்ட மேற்படி மூன்று விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் நியாயமான பதிலை உத்தியோகபூர்வமாக வெளியிட வேண்டும் என்பதுடன் உண்மைத் தன்மையான பேச்சுவார்த்தைக்கும் வழிசமைக்க வேண்டும் என்பதுதான் எமது தரப்பின் நியாயமாகும்.
இதிலிருந்து அரசாங்கம் தவறும் பட்சத்தில் இல்லாவிட்டால் அக்கறை கொள்ளாத பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும்.
எனவே எதிர்கால பிரச்சினைகளை முன்னிட்டு அரசாங்கம் செயற்பட வேண்டியது அவசியம் என்றார்.



0 Responses to அரசிடமிருந்து உத்தியோகபூர்வ பதிலெதுவும் இல்லை!