Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இடம்பெயர்ந்த மக்களுக்கான இந்திய அரசாங்கத்தின் அனைத்து உதவிகளும் அந்த மக்களை நேரடியாகச் சென்றடைவதற்கு இந்தியா உத்தரவாதம் அளித்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவுத் துறை செயலர் நிருபமா ராவை நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தியதை அடுத்தே, தம்மிடம் இந்த உத்தரவாதத்தை அளித்ததாக கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

அத்துடன், அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கின்ற உத்தேச அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்த சுரேஷ் எம்.பி.,

இடம்பெயர்ந்த மக்களின் தேவைகள் மற்றும் எமது சமூகத்தின் உரிமைகள் தொடர்பில் இந்தியா இலங்கை அரசாங்கத்துடன் முறையான பேச்சுக்களை நடத்தவேண்டும் என்றும், அதற்கு ஏற்றவகையில் ஆவன செய்யுமாறும் அத்துடன் மீள்குடியேற்ற விடயங்களை துரிதப்படுத்துவதற்கு இந்தியா அழுத்தம் பிரயோகிக்க வேண்டுமென்றும் செயலரிடம் வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ், தமது அரசாங்கத்தினால் இலங்கையில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த வடக்கு கிழக்கு மக்களின் தேவைகளை கவனத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளை நேரடியாக ஆராய்வதே இந்த விஜயத்தின் நோக்கமாகும். இந்த சந்தர்ப்பத்திலேயே அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா, பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், எஸ். சுமந்திரன் மற்றும் பொன். செல்வராசா ஆகிய எம்.பி. க்கள் கலந்து கொண்டனர்.

இது தொடர்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. மேலும் கூறுகையில்,

இந்திய வெளியுறவுச் செயலருடன் கூட்டமைப்பின் எம்.பி.க்கள் குழு நடத்திய பேச்சுக்களின் போது தற்போதைய அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன. குறிப்பாக, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தில் நிலவிவரும் பின்னடைவுகள், பிரச்சினைகள் தொடர்பில் அவருக்குத் தெளிவுபடுத்தினோம். அது மட்டுமல்லாது, மீள்குடியேற்றத்துக்கான ஏதுக்கள் காணப்படுகின்ற பிரதேசங்களில் கூட மக்கள் மீள்குடியேற்றப்படாத நிலையில் முகாம்களுக்குள் வைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் போன்ற மாவட்டங்களின் பல பிரதேசங்கள் மீள்குடியேற்றத்துக்குப் பொருத்தமான இடங்களாக இருந்தும், அங்கு மக்கள் மீள்குடியமர்த்தப்படவில்லை. இதனால், அந்தந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

மேலும், இடம்பெயர்ந்த மக்களுக்கான மீள்குடியேற்றப் பிரதேசங்களில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள வீடுகள் முழுமையானதாகவோ அல்லது அடிப்படை வசதிகளுடனானதாகவோ அமையவில்லை. அத்துடன், அரசாங்கத்தினால் தொடர்ந்தும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பேணப்பட்டு வருகின்ற பிரதேசங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் தெரியவில்லை. அந்தப் பகுதிகளை சேர்ந்த மக்கள் பல வருடங்களாக இடம்பெயர்ந்த நிலையில் வெவ்வேறு பிரதேசங்களில் தற்காலிகமாகத் தங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் நிருபமா ராவிடம் எடுத்துக் கூறினோம்.

இதேவேளை, தற்போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அரசியல் அமைப்புத் திருத்த யோசனைகள் தொடர்பிலும் பேச்சுக்களை நடத்தியுள்ளோம்.

அத்துடன், இடம்பெயர்ந்த மக்களின் நலன் கருதி இந்திய அரசாங்கம் மேற்கொண்டு வரும் மனிதாபிமான நடவடிக்கைகள், உதவி, ஒத்துழைப்புக்கள் அனைத்தும் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சென்றடைய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளையும் ஆலோசனைகளையும் ஏற்றுக்கொள்வதாகவும் அதேநேரம், இடம்பெயர்ந்த மக்களுக்கான இந்தியாவின் அனைத்து உதவிகளும் அந்த மக்களை நேரடியாகச் சென்றடையும்.

அதற்கான உத்தரவாதத்தை இந்திய அரசாங்கம் வழங்குகின்றது எனத் தெரிவித்ததாகவும் சுரேஷ் எம்.பி. கூறினார்.


மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to இந்திய அரசின் அனைத்து உதவிகளும் வன்னி மக்களை நேரடியாக சென்றடையும்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com