குவைத் தமிழர்கள் ஒன்றிணைந்து கார்த்திகை-27 மாவீரர் நாளினை சிறப்பாக கடைபிடித்தனர்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக, சந்தனக்காடு, மகிழ்ச்சி திரைப்பட இயக்குனர் கவுதமன் அவர்கள் சென்னையிலிருந்தபடி தொலைபேசி வழி மாவீரர் நாள் உரையாற்றினார்.
தொடர்ந்து, செல்வன் இரா.பொ.சூரியா, தேசிய தலைவர் போன்று வேடமணிந்து வந்து பொதுச்சுடர் ஏற்றிவைத்து, “நான் யார் என்று தெரிகிறதா? நான் தான் உங்கட பிரபாகரன், என்னைக் கொன்று விட்டதாகக் கூறினார்கள், என்னை யாரும் கொல்லமுடியாது?. எம் மக்களுக்கு விடுதலைப் பெற்றுத் தராமல் நான் சாகமாட்டேன். எந்த ஒரு நாடும் இரத்தம் சிந்தாமல் போராடாமல் விடுதலை பெறமுடியாது” என்று கூறியபோது அரங்கமே எழுந்து நின்று கையொலி எழுப்பினர்.
அடுத்து, தோழர்.செல்லப்பெருமாள் அவர்கள் ஈகைச்சுடரினை தொடங்கி வைக்க, வருகை புரிந்த அனைவரும் “தமிழீழம்” என்ற எழுத்து வடிவில் ஈகைச்சுடர் ஏற்றினர்.
தொடர்ந்து, தோழர்.செந்தில்குமார் அவர்கள், தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே என்ற மாவீர்ர் நாள் பாடலை பாடினார். பாரதி தமிழ்நாடன் அவர்கள் மலர்வணக்கம் செய்தார்கள்.
தோழர்கள் பகலவன், விருதைபாரி, ஆனந்தரவி, தமிழ்க்காதலன், வித்யாசாகர் ஆகியோர் கவிதை படிக்க, தோழர்கள் செந்தில், செல்லப்பெருமாள், பிரமோத், பட்டுக்கோட்டை சத்யா, வெங்கடேசன் ஆகியோர் உரையாற்றினர். தோழர்.இராமகிருட்டிணன் அவர்கள் மாவீரர் நினைவுப் பாடலை பாடினார்.
தோழர்.இராசா அவர்கள் “சோமிதரன் இயக்கிய வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி” என்ற ஆவணப்படத்தினை வெளியிட தோழர்.இராமநாதன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்கள், வேலூர் சிறையிலிருந்தபடி வெளியிட்ட மாவீரர்நாள் உரையினை பாரதி தமிழ்நாடன் அவர்கள் படித்தார்.
புதுமைப் பாசறை வெளியிட்ட “பிரபாகரன் புரட்சிமொழிகள்” என்ற நூலினை தோழர்.சிவராமகிருட்டிணன் வெளியிட பொறியாளர் இராமன், தோழர்கள் பிலவேந்திரன், குணா பெற்றுக்கொண்டனர்.
தாயகத்திலிருந்து தொலைபேசி வழி தமிழர்கழகத் தலைவர் புதுக்கோட்டை பாவாணன் அவர்கள் மாவீரர் நாள் உரையாற்றியதை பதிவு செய்து ஒலிபரப்பு செய்தனர்.
தெம்மாங்கு இசைப்பாடகர் செந்தில்குமார் அவர்கள், மாவீரர் கலையழகனின் பெயரை தமக்குச்சூடி, இனி தான் கலையகழன் என்றே அழைக்கப்படல் வேண்டுமென்ற கோரிக்கை வைத்தார்.
இறுதியாக நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கிய தமிழ்நாடன் நினைவுரையாற்றிய போது, தற்போதைய சூழலில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள், தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு பொருளுதவி செய்ய வேண்டுமென்றும் அதற்காக செயல்படும் திட்டங்களையும் அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்வில் நாம்தமிழர் அமைப்பினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டர்.
0 Responses to குவைத்தில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் (படங்கள் இணைப்பு)