Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்காவில் 2004ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 22 ஆசனங்களைப் பெற்றபோதுசிங்களப் பேரினவாதிகள் அனைவருமே அதிர்ச்சியில் வாயைப் பிளந்து நின்றனர்.

காரணம், தமிழரின் பலம் வாய்ந்த அரசியல் சக்தியாக – 22 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஒரு தரப்பு உருவெடுக்கும் என்று அவர்கள் கனவில் கூட நினைத்திருக்கவில்லை.

அப்போது தான் சிங்களப் பேரினவாதிகள் தமிழரின் அரசியல் பலத்தைநாடாளுமன்ற ஆசனபலத்தை குறைப்பதற்கு என்ன செய்யலாம் என்று சிந்திக்கத் தொடங்கினர்.

அங்கே ஆரம்பித்த இந்தச் சூழ்ச்சிஇப்போது யாழ்ப்பாணத்தின் வாக்காளர் பட்டியலில் மூன்று இலட்சம் பேரை நீக்குகின்ற நிலை வரைக்கும் வந்து நிற்கிறது.

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் 2010ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இதுவரை சுமார் 5 இலட்சம் பேரே சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆனால், கடைசியாக நடைபெற்ற பொதுத்தேர்தலில் 721,359 பேர் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றிருந்தனர்.

இந்தத் தேர்தல் 2008ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் இடம்பெற்றிருந்தது.

அதற்குப் பின்னர் 2009ம் ஆண்டின் வாக்காளர் பட்டியல் திருத்தியமைக்கப்பட்டது.

அதில் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.

அப்போது யாழ்ப்பாணத்தின் வாக்காளர்கள் எண்ணிக்கை சுமார் 816,000 ஆக அதிகரித்தது.

இந்த விபரம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இதை அப்படியே கிடப்பில் போட்டு விட்டு, சிறிலங்கா அரசின் உத்தரவுக்கு அமைய யாழ். மாவட்டச் செயலகம் 2010ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலைத் திருத்தியமைக்கத் தொடங்கியது.

வெளிநாடு சென்றவர்கள், வெளிமாவட்டங்களில் குடியிருப்பவர்கள், இடம் பெயர்ந்துள்ளவர்கள் அனைவருமே 2009ம் ஆண்டின் பட்டியலில் இருந்து தாறுமாறாக வெட்டித் தள்ளப்பட்டனர்.

தற்போது யாழ்.தேர்தல் மாவட்டத்தில் வசிப்பவர்கள் மட்டுமே இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான படிவங்களை குடும்பத் தலைவரே பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்பதால்வெளியிடங்களில் இருந்தவர்கள் யாருமே வாக்காளர் பட்டியலில் இடம்பெற முடியாது போனது.

மீள்குடியமர்வு நடவடிக்கைகளே இன்னமும் முழுமையடையாத நிலையில்அரசாங்கம் அவசர அவசரமாக இந்தக் காரியத்தைச் செய்துள்ளது.

போரின்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து சென்றனர்.

இவர்களில் பலர் வன்னியில் குடியேறினர். இதுதவிரப் பெருமளவிலானோர் வெளிமாவட்டங்களில் குடியேறினர்.

இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் வெளிநாடுகளுக்குச் சென்றனர்.

அவர்களில் ஒரு பகுதியினர் தான் வெளிநாடுகளில் நிரந்தரக் குடியுரிமை பெற்று வாழ்கின்றனர்.

பெரும்பாலானோர் தற்காலிகமாகஅகதிகளாகவே வெளிநாடுகளில் தங்கியுள்ளனர்.

அதுபோலவே தான் வெளிமாவட்டங்களில் தங்கியுள்ளவர்களின் நிலையும்.

தற்காலிகமாக வெளிநாடுகளிலும், வெளிமாவட்டங்களிலும் தங்கியுள்ளவர்கள் கூட வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்றவர்களும், கல்வி கற்கச் சென்றவர்களும் வாக்காளர்களாகப் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்காலிகமாக அகதிகளாகத் தங்கியுள்ளவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இது யாழ்ப்பாண மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கைகளைக் குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில்அவசரமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை மட்டுமல்ல சிங்களக் குடியேற்றங்களுக்கு அங்கீகாரம் கொடுக்கும் நடவடிக்கையுமாகும்.

இதன் அடுத்த கட்டமாக வடக்கில் குடியேறும் சிங்களவர்களின் பெயர்களையும் அரசாங்கம் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவுள்ளது.

அதற்காகவே தற்காலிகமாக வெளிமாவட்டங்களில் தங்கியுள்ளவர்கள் அங்கேயே வாக்காளர்களாகப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது அரசாங்கம்.

தொகுதிவாரி தேர்தல் முறை நடைமுறையில் இருந்த காலத்தில் யாழ்ப்பாண மாவட்டம் 11 தேர்தல் தொகுதிகளைக் கொண்டதாக இருந்தது.

பின்னர் 1989ஆம் ஆண்டு விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைப்படி தேர்தல் இடம்பெற்ற போதும் 11 உறுப்பினர்களே நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டனர்.

1994ம் ஆண்டு தேர்தலில் யாழ்.தேர்தல் மாவட்டத்துக்கான ஆசனங்களின் ஒதுக்கீடு 10 ஆகக் குறைக்கப்பட்டது.

பின்னர் 2000ம் ஆண்டில் அது 9 ஆகக் குறைக்கப்பட்டது.

2010ம் ஆண்டிலும் அதே எண்ணிக்கை தான் தொடர்ந்து இருந்து வருகிறது.

ஆனால் அடுத்த தேர்தலில் இந்த எண்ணிக்கை ஆறாகக் குறையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கையை மூன்று இலட்சத்தால் அதாவது கிட்டத்தட்ட 40 சதவீதத்தை வெட்டிக் குறைத்து இந்தச் சாதனையை நிகழ்த்தப் போகிறது சிங்கள அரசு.

இது அவர்களுக்குப் பெரும் திருப்தி தருகின்ற ஒன்றாக இருக்கப் போகிறது.

ஏனென்றால் யாழ்ப்பாண மாவட்ட மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பறித்து சிங்கள அரசு தென்பகுதியில் உள்ள சிங்கள மாவட்டங்களுக்கே கொடுக்கப் போகிறது.

இதன்மூலம் தமிழரை இன்னும் அடக்கியாளும் வகையில் அவர்களின் குரல்கள் ஓங்கி ஒலிப்பதைக் குறைக்கப் போகிறது சிங்கள அரசு.

உலகில் பல்வேறு நாடுகளிலும் ஒரு நடைமுறை உள்ளது.

உள்நாட்டில் தேர்தல் நடைபெறும் போது வெளிநாடுகளில் உள்ள அதே நாட்டின் தூதரகத்திலும் வாக்களிப்பு நடைபெறும்.

வெளிநாடுகளில் உள்ள தமது குடிமக்களுக்காக அந்த நாடுகள் வாக்களிப்பதற்கு வசதி செய்து கொடுத்துள்ளன.

தமது குடிமக்கள் எங்கிருந்தாலும் அவர்கள் தமது தாய்நாட்டின் அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கத் தகுதி பெற்றவர்கள் என்பது அந்த நாடுகளின் கருத்து.

இதேபோன்ற வசதியை இந்தியாவும் ஏற்படுத்துவது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் சிறிலங்காவோ எப்படி வெளிநாடுகளிலும், வெளியிடங்களிலும் சென்று குடியேறிய தமிழர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறது.

இதுபோன்று தான் சிங்கள அரசு ஒவ்வொரு விடயத்திலும் தமிழரையும், அவர்களின் அரசியல் உரிமைகளையும் எப்படியெல்லாம் பறிக்கலாம் என்று காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது.

சிங்கள அரசுடன் இணைந்து அரசியல் நடத்தும் தமிழ்க்கட்சிகள் எதுவுமே இதுபற்றி வாய் திறப்பதில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூட வெறும் அறிக்கையோடு சரி.

இதுபோன்ற காரியங்களைத் தடுத்து நிறுத்தவோ எதிர்த்துக் குரல் கொடுக்கவோ அவர்கள் முன்வராதிருப்பதால் தான் சிங்கள அரசு பேயாட்டம் போடுகிறது.

யாழ்ப்பாண மாவட்டத்துக்கான ஆசன ஒதுக்கீடு 9 இல் இருந்து 6 ஆகக் குறைக்கப்பட்டால் தமிழரின் அரசியல் அதிகாரமும் குறைந்து விடும் .

அப்போது தமிழ்க்கட்சிகள் இன்னும் இன்னும் கிள்ளுக் கீரையாகி விடும்.

அதை நினைத்தாவது அவர்கள் விழித்துக் கொள்ளக் கூடாதா?

முகிலன்

0 Responses to யாழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை – அரசின் அடுத்த சதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com