Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தை 6ம் நாள் மாதந்தை திரு வேலுப்பிள்ளை அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு நாளாகும். அதன் பொருட்டு கனடாவிலிருந்து பவித்திரா எழுதிய கவிதை..

ஆண்டொன்று ஆனதையா அறிவுடைத் தந்தாய்
அவனியைப் பிரிந்துநீவீர் ஆண்டவன் பாதம்
வேண்டித்தான் சென்றீரே விலையில் மாண்பே
விடிவெமக்குத் தூரமில்லை விதியை நொந்தோம்
தாண்டிநாமும் செல்கின்றோம் தடைகள் நீக்கி
சார்புநெறி வகுத்திங்கு இயங்கு காலை
தூண்டிநிற்கும் நல்லறிவினைத் துணையாய்க்; கொண்டு
தூயதிரு வடிபோற்றிப் புனைந்தேன் பாடல்.

கலைமகளாம் எம்தெய்வம் கல்விக்கரசி யென்றும்
களிப்புடனே வீணையிற் கவிமழை பொழிந்திட
அலைமகளாள் நிலம்நோக்கி அகம்குளிர்ந்து நீரடித்து
ஆர்ப்பரிப்பிற்; றிளைத்து அணைத்து மகிழ்ந்திட
மலைமகளாள் மங்கலக் குங்குமமும் மனையும்
மாண்புடைத் திடமும் மேன்மையும் அளித்திட
விலையிலா வீரத்தின் விளைநிலமாய் விளங்கு
வள்ளல்நிறை பதியாம் வல்வைதந்த விறலே!

திருவேங்கடம் வேலுப்பிள் ளையெனத் திகழ்ந்து
சீர்மையுற வாழ்வினைச் செவ்வென நடத்தி
அரும்பெரும் சதிர்தனை அவனியொடு பொருதிய
ஆளுமைப் பேற்றின் அறிவுடை மூலமே!
திருவாசகம் தேவாரம் திருப்பல் லாண்டுநாளும்
தேனாக இசைத்திடு திருமனைத் தலையே!
தருமத்தின் இருப்பே! சான்றுயர் பெரியோனே!
தலைதாழ்த் தியும்தாள் பற்றினோம் ஐயா!

வெண்ணிற ஆடையில் விளங்கு நீறணிந்து
வேதாகம வழிகளில் விற்பனனாய் நின்று
கண்ணியமாய்க் கோவில்செல் காட்சிதனை ஊரார்
கண்களிற் பதித்துக் கையசைத்துக் களிப்புறுவர்
திண்ணிய ஞானத்தில் தெளிந்த சிந்தையில்
தேசுறு தோற்றத்தில் திகழ்திரு வேங்கடரே!
ஏண்ணத்தில் நிறைந்தீர்கள் இவ்வுல குள்ளவரை
இறவாத் தமிழோடு எஞ்ஞான்றும் கலந்திருப்பீh!

நிர்வாக சேவையிற் காணியதி காரியாய்
நீடுபணியாற் றியேழை நெஞ்சங்களை வென்றீர்!
கருமத்திற் கண்ணாகக் கடமை வீரனாகக்
கருணையின் வடிவாக எளிமையின் இருப்பாக
உரையிலே உண்மையும் உறுதியும் உவப்பும்
ஒன்றாகப் பிணைந்து ஒழுக்கத்தை ஓம்பும்.
கரையிட்ட வேட்டியும் காக்கிக்காற் சட்டையும்
கசடறக் கற்றோர் தகமையைக் காட்டும்!

பார்வதி மணாளனே! பக்தியின் திருவுருவே!
பாரதத்;; தலமாம் சிதம்பர வளர்ச்சிக்காய்
ஆர்க்குமிலா உள்ளத்தில் வள்ளலாய் விளங்கி
ஈய்ந்தீரே நிலபுலன் இமயமென உயர்ந்தீரே!
நேர்மையில் நெஞ்சுரத்தில் நின்மகன் நிர்மலனின்
நீண்ட வரலாற்றிற்; பிணைந்த பெருந்தகையே!
பார்போற்றும் பகலவன் கரிகாலன் சேயோனைப்
பெற்றதனாற் சிவனென்றே உமைநா மறிந்தோம்!

தந்தையே! ஏந்தைக்கு நிகரான சான்றோனே!
தானையிற் தனையனுடன் சார்ந்தி ருந்து
முந்திச்செய் தவப்பேறால் ஈன்று புறம்தந்த
முதல்வன்தன் திறமைகளை மெச்சி மகிழ்ந்தீரே!
கந்தகச் சூழலிலும் கலங்கா உள்ளத்தில்
கயவர் முன்சென்று தந்தையென விளித்தீரே!
அந்திமப் பொழுதினிலும் அடங்காப் புலியென
அரசினர்க்குப் பணியாது இன்னுயிர் துறந்தீரே!

வெற்றித் திருமகன் வகுத்த பாதையில்
வீறுடன் தமிழினம் ஏழுந்து நிற்கிறது!
பற்றியுள்ள பகைநீக்கப் புலம்பெயர் இளந்தலை
போராடி நிமிர்கிறார் புறப்படுவார் தாயகம்!
கற்றிடும் கல்வியெலாம் காணும் ஈழத்தின்
கவினுறு வளர்ச்சிக்குக் கொடையென அளிப்பரே!
உற்ற துணையென உண்மையில் திண்மையில்
உழைத்திட என்றும் வாழ்த்தி நிற்பீரே!

தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே!
தேடுகிறோம் செல்வனை! தூதுநீர் செல்வீரே!
பையவே வாழ்விடம் சென்றங்கு பரிதியிடம்
பக்குவமாய் எடுத்துரைத்து விரைந்திடச் செய்திடுக!
ஐயஎம் விடுதலைக்காய் ஆன்றவும் குடும்பத்தின்
ஈகையை ஒருபோதும் உள்ளத்தில் மறவோம்
வையகத்தில் நின்பெருமை வார்த்தையில் நிறைவுறா
வானகத்திலும் வியத்தகு வாழ்வினையே பெறுவீர்!

கனடாவிலிருந்து பவித்திரா
அலைகள்

0 Responses to தெய்வ மகனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே!: பவித்திரா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com