Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அனுராதபுரம் சிறைச்சாலையில் இன்னொரு இனக்கொடூரம் சிங்கள வன்முறையாளர்களால் தமிழ்க் கைதிகள்மீது நடாத்தப்பட்டுள்ளது. சிறைச்சாலைகளில் ஏற்கனவே நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலைகள் போலவே, இதுவும் உலகின் மனச்சாட்சிக்கு ஒரு உறுத்தலைக் கொடுத்துவிட்டு நீங்கிவிடும். ஆனாலும், தமிழர்கள் என்பதால் அவர்கள்மீது நடாத்தப்படும் கொடூரங்கள் சிறைச் சாலைகளையும் விட்டு வைக்கப் போவதில்லை.

எங்களுக்காகக் குரல் கொடுப்பதற்கும், எங்களுக்காகப் பரிந்து பேசுவதற்கும், எங்களுக்காக அழுவதற்கும் உலகில் யாருமற்ற அனாதைகளாக தாம் நிராதரவாக விடப்பட்டுள்ளதாக ஈழத் தமிழர்கள் தவிக்கின்றனர். தாய்த் தமிழகத்திலும் ஒருமித்த குரல்கள் ஓங்கி ஒலிப்பதில்லை.

ஈழத் தமிழர்களைத் தரையிலும், கடலிலுமாக வேட்டையாடிய சிங்கள இனவாதம், தமிழக மீனவர்களைப் படுகொலை செய்வதையும் வழக்கம் போலவே டெல்லிக்குக் கடிதம் எழுதிக் கண்டனம் தெரிவிக்கும் நிலையில்தான் தமிழகத்தின் முதல்வர் ஆட்சி புரிகின்றார். ஈழத் தமிழர்களின் அவலங்களைக் கண்டு, தன்னையே தீயுக்கு இரையாக்கி முத்துக்குமாரன் மூட்டிய தமிழர் எழுச்சியும் கரைந்து காணாமல் போய்விட்டது.

சிங்களவர்களால் அழிக்கப்படுவதற்குத்தான் தமிழீழ மக்கள் என்றால், அந்த மக்களை ஒன்றாகவே அழித்துவிடும் அனுமதியை அவர்களுக்கு வழங்கிவிட்டு கண்களை மூடிக்கொள்ளப் போகின்றோமா? அல்லது, சிங்களக் கொடூரங்களிலிருந்து காப்பாற்றும் தார்மீகக் கடமையினை ஏற்றுப் போராடப் போகின்றோமா? என்பதை உலகத் தமிழினம் தீர்மானிக்க வேண்டிய காலம் இது. விலங்குகளும், பறவைகளும் அழிக்கப்படுவதையும், வதைக்கப்படுவதையும் சட்டங்கள் இயற்றிப் பாதுகாக்கும் அனைத்துலக நாடுகள், ஈழத் தமிழர்களை அழிவிலிருந்து காப்பாற்ற முன்வர வேண்டும்.

தமிழர்கள் என்ற காரணத்தினாலேயே, ஈழத் தமிழர்கள் கேட்பாரற்று வேட்டையாடப்பட்டு வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்துக்களாக இருந்தும், இந்து மத பீடங்களும் அவர்களுக்காகக் குரல் கொடுக்க மறுக்கின்றன. கடவுள்களும் கைவிடப்பட்ட தெரு நிலையில் ஈழத் தமிழர்கள் தங்கள் அடுத்தது யாருக்காகக் கொலைக் களம் திறக்கப்படும்? என்ற அச்சத்துடன் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.

எங்கள் தேசம் எரிந்து முடியவில்லைஎங்கள் நிலத்தில் குருதி வெள்ளம் காயும் நிலையும் இல்லைகொலையும், கொள்ளையும், கடத்தல்களும், கற்பழிப்புக்களும், துப்பாக்கிச் சூடுகளுமாக எங்கள் மக்கள் தினம் தினம் சிதைக்கப்பட்டு வருகின்றார்கள். எங்கள் உறவுகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய புலம்பெயர் தமிழர்கள் திட்டமிட்ட சிங்களஇந்தியச் சதிகளால் பிளவுபடுத்தப்பட்டு வருகின்றார்கள். போராடக் களம் நோக்கிச் செல்ல வேண்டிய நாம், ஆளுக்கு ஒரு அமைப்பை உருவாக்கி முடி சூடிக்கொள்ளும் முயற்சியில் எம் தேசத்தின் அவலங்களைக் கைவிட்டு நிற்கின்றோம்.

நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிதுஎன்று எங்கள் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் சொல்லிய வார்த்தைகளை நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டவர்களாக இருந்தால், தமிழ்த் தேசியம் நோக்கிய போர்க்களப் பாதையில் நாங்கள் யாரும் பிரிந்து நின்றுவிட முடியாது.

நாங்கள் போக வேண்டிய திசையும், இலக்கும் தேசியத் தலைவரால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. தமிழீழ விடுதலை நோக்கிய போர்க் களத்தை முன் நகர்த்தும் பணியும் புலம்பெயர் தமிழர்களிடம் தேசியத் தலைவரால் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. எமக்கான போர்க் களங்கள் புலம்பெயர் தேசங்களில் திறக்கப்பட்டே உள்ளன. அங்கே போராளிகளாக நாங்கள் அனைவரும் களம் புகுந்தாலே, எமது மக்களையும், மண்ணையும் எம்மால் விடுவிக்க முடியும் என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எங்கள் தாய்த் தமிழகத்து உடன் பிறப்புக்களே, உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உறவுகளே, புலம்பெயர்ந்தும் நிலம் மறவாத எங்கள் சொந்தங்களே, தமிழீழ மக்களை சிங்களக் கொடுமைகளிலிருந்து விடுவிக்க, எங்கள் தேசத்தை மீட்க வாருங்கள், உலகத் தமிழர்களாக நாங்கள் ஒன்றாக எழுவோம்!

தமிழீழ மக்கள் பேரவை - தமிழீழ மக்கள் அவை

0 Responses to தமிழர்கள் என்ற காரணத்தினாலேயே, ஈழத் தமிழர்கள் கேட்பாரற்று வேட்டையாடப்பட்டு வருகின்றனர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com