Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத்தமிழர்கள் என்ற ஒரே சொல்லின் அழைக்கப்பட்ட நம் மக்கள் இன்று தாயகத்து தமிழர்கள் என்றும் உலகத் தமிழர்கள் என்றும் புலம் பெயர்ந்த தமிழர்கள் என்றும் அழைக்கப்படுகின்றார்கள்.

எப்படித்தான் லட்சக் கணக்கான நமது ஈழத்தமிழர்கள் போரின் கொடுமைகள் காரணமாக தாயகத்தை விட்டு நீங்க மேற்குலக நாடுகளில் தமது வாழ்க்கை தொடர்ந்தாலும், தாயகத்தின் மீதும் அங்கு வாழுகின்ற தமிழ் உறவுகள் மீதும் கொண்ட அக்கறையும் பற்றும் காரணமாக இன்னும் அந்த மண்ணை நோக்கிய தங்கள் பார்வையை நீடித்தவண்ணம் உள்ளார்கள்.

இவ்வாறான நேரத்தில்தான் தாயக மண்ணில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. தமிழர்கள் உள்ளங்களை மிகவும் பாதித்த விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான உலகம் நடத்திய யுத்தம் மிகவும் கொடுமையானது என்பதே புலம் பெயர்ந்த தமிழர்களின் கருத்தாக இன்றும் உள்ளது. விடுதலைப் புலிகள் என்ற பலமான இராணுவ அமைப்பு அழிக்க்ப்பட்ட பின்னர் அரசியல் ரீதியான வெற்றிகளுடன் தமிழர் பிரதேசத்தின் பெருமளவு ஆசனங்களைக் கைப்பற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அரசியல் நகர்வுகளை எந்தளவிற்கு தாயகத்து நமது உறவுகள் கவனித்து வருகின்றார்களோ அந்தளவிற்கு நமது புலம் பெயர்ந்த உலகத் தமிழர்களும் கவனித்து வருகின்றார்கள்.

மேற்படி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தல் காலங்களில் மிகுந்த நிதித்தேவைகளை எதிர்நோக்கிய போது புலம் பெயர்ந்த தமிழர்கள் பெருமளவு நிதியை அவர்களுக்கு அனுப்பி வைத்து அவர்களை தேர்தல் பிரச்சாரங்களை மிகவும் நேர்த்தியாக செய்து வெற்றி வாகை சூட காரணமாக இருந்தவர்களின் முக்கியமானவர்கள் இந்த புலம் பெயர்ந்த தமிழர்கள். அதுவும் கனடா தேசத்தில் இயங்கி வரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் லட்சக்கணக்கான ரூபாய்களை சேகரித்து தாயத்தின் அனைத்து கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கும் பயன்படும் வகையில் உதவிக் கரம் நீட்டினர்.

இவ்வாறான பங்களிப்புக்களை முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும் செய்தவர்கள் இந்த புலம் பெயர்ந்த தமிழர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இவ்வாறிருக்க, இது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் காலமும் நேரமும் என்று கூட நாம் சொல்லலாம். ஏனவே அவர்களின் நடவடிக்கைகள் மற்றும் அரசியல் நகர்வுகள் ஆகிய பற்றிய கவனிப்பு நமது தமிழ் மக்களுக்கு இருப்பதை எவரும் விமர்சனம் செய்யமாட்டார்கள் என்றே நாம் நம்புகின்றோம்.

தற்போது ஈழத்தமிழர்களின் அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வைக் காணும் வகையில் இலங்கை அரசிற்கும் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று கணிக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கும் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் மேலும் முன்னேற்றங்களைக் காண்பதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பல கருத்தரங்குகள் மற்றம் சந்திப்புக்கள் ஆகியவற்றை உள்நாட்டில் அதாவது இலங்கையின் பல பாகங்களிலும் நடத்திவருகின்றது.

அங்கு பேசப்படும் பல விடயங்கள் தமிழ் ஊடகங்களின் மூலமாக நமது மக்கள் அறியும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் திடீரென வந்த ஒரு அறிவிப்பு தொடர்பாகவே நாம் இங்கு வேண்டுகோள் ஒன்றை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரிடம் விடுக்க விரும்புகின்றோம். இதற்கு காரணங்கள் பலவுண்டு.

சில நாட்களுக்கு முன்பு வெளியான செய்தி ஒன்றின்படி இலங்கைத் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசேட கருத்தரங்கொன்றை சிங்கப்பூரில் நடாத்த உள்ளதாகவும், குறித்த கருத்தரங்கில் பங்குபற்றுவதற்காக கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அந்தச் செய்தி எழுதப்பட்ட போது சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ளனர் என்றும் அரசாங்கத்துடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் போது எவ்வாறான தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்க வேண்டும் என்பது தொடர்பில் இக்கருத்தரங்கில் கலந்துரையாடப்படவுள்ளது என்றும் தீர்வுத்திட்டமொன்றை தயாரிப்பது தொடர்பில் சிங்கப்பூர். மலேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்த கல்விமான்கள், ஆகியோர் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தச் செய்தி தொடர்பாக நாம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரிடம் சில கேள்விகளை முன்வைக்கின்றோம். இதற்கு காரணம் கடந்த காலங்களில் முன்னைய தமிழ்த் தலைவர்களால் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். ஆட்சியில் உள்ள தலைவர்களிடம் சலுகைகளைப் பெற்றக் கொள்ளவும் சில தமிழ்த் தலைவர்கள் முயன்றார்கள் என்ற செய்திகளும் நமது மக்களுக்கு தெரிந்தவையே. எனவே நாம் பின்வரும் வினாக்களை தமிழ் மக்களின் எதிர்கால நன்மை கருதி தமிழ்த் தேசிய கூ ட்டமைப்பினரிடம் குறிப்பாக திரு மாவை சேனாதிராஜாவிடம் முன்வைக்கின்றோம்.

1-“நீங்கள் தற்போது ஏற்பாடு செய்துள்ள சிங்கப்பூர் கருத்தரங்கை நடத்துவதற்கும் உங்கள் உறுப்பினர்களின் பிரயாணம் மற்றும் அவசியச் செலவுகளுக்கு தேவையான நிதியை வழங்கிய நிறுவனம் அல்லது நாடு எது? இதை உங்களால் நமது மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க முடியுமா?

2-இந்த சிங்கப்பூர் கருத்தரங்கை நடத்துவதில் இந்தியாவிற்கு ஏதாவது பங்கு உண்டா அல்லது ஏதாவது நெருக்குவாரங்கள் அந்த நாட்டின் உயர் பீடத்திலிருந்து உங்களுக்கு கொடுக்கப்பட்டதா?

3-இந்த சிங்க்ப்பூர் கருத்தரங்கில் பங்கு கொண்டுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்?

இவ்வாறான மூன்று கேள்விகளை உலகத் தமிழர்கள் சார்பாகவும் தாயகத்து தமிழர்கள் சார்பாகவும் கேட்கின்றோம் என இவ்வார கனடா உதயன் கதிரோட்டம் கேள்விக்கணைகளை எய்துள்ளது.

0 Responses to கூட்டமைப்பை நோக்கிய ஒரு வேண்டுகோளும், மாவையிடம் மூன்று கேள்விகளும்: உதயன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com