ஆனந்த புரத்தில் அழியாத் தடங்களாக மண்ணில் வித்தாகி வீழ்ந்த வீரத் தளபதிகள் மற்றும் போராளிகள் உட்பட தியாகத் தாய் அன்னை பூபதி மற்றும் மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்களை நினைவுகூரும் நினைவுவணக்க நிகழ்வு நேற்று லண்டனில் இடம்பெற்றது.
லண்டன் ஹறோ பகுதியில் உள்ள Uxbridge Road, Hatch End, Middlesex, HA5 4EA எனும் முகவரியில் அமைந்துள்ள "Harrow Arts Centre" பிரமாண்டமான மண்டபத்தில் 17-04-2011 ஞாயிற்றுக்கிழமை மாலை ஏழு மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் முதன்மைச்சுடரினை "ACT NOW"எனும் தொண்டு நிறுவனத்தின் உதவி இயக்குனர் திரு. கிறஹம் வில்லியம் அவர்கள் ஏறிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து இதுவரை காலமும் தமிழீழ விடுதலைக்காய் களமாடி விடுதலைக்கு உரம் சேர்த்து மண்ணினுள் வித்துக்களாகி வாழும் வீர மறவர்களான மாவீரர்களுக்காகவும், தாயகத்தின் விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்து செயலாற்றி ஈழ வரலாற்றில் இடம் பிடித்த மாமனிதர்கள் மற்றும் நாட்டுப்பற்றாளர்கள் உட்பட போரினால் கொல்லப்பட்ட பொதுமக்களுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அகவணக்கத்தினைத் தொடர்ந்து மாவீரர்களுக்கான ஈகைச்சுடரேற்றலும், மலர்மாலை அணிவிப்பும் இடம்பெற்றது.
கப்டன் வாசு, மேஜர் சுந்தரி, மேஜர் ஜேம்ஸ் ஆகியோரின் சகோதரரும், நாடுகடந்த தமிழீழ அரசின் உதவிப்பிரதமருமான சேகர் அவர்கள் பிரிகேடியர் தீபன் அவர்களுக்கான ஈகைச்சுடரை ஏற்றி மலர்மாலையினையும் அணிவித்தார்.
லெப்.ஜீவன் வன்னியில் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவடைந்தவரின் தாயார் கிளி அவர்கள் பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களுக்கான ஈகைச்சுடரை ஏற்றி மலர்மாலையினையும் அணிவித்தார்.
லெப் கொலின்ஸ் (சண்முகானந்தம் மணிவண்ணன்) 1991 இல் நடைபெற்ற ஆகாயக் கடல்வெளிச் சமரின் போது வீரச்சாவடைந்தார். அவரின்
சகோதரன் சண்முகானந்தம் மணிமாறன் அவர்கள் பிரிகேடியர் தமிழேந்தியப்பா அவர்களுக்கான ஈகைச்சுடரை ஏற்றி மலர்மாலையினையும் அணிவித்தார்.
மேஜர் அசோகன் (பத்மகீர்த்தி - பலாலி இராணுவத்தளத்தினுள் வேவு பார்க்கச் சென்றபோது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவடைந்தார்) அவருடைய சகோதரி திருமதி சிறிஸ்கந்தராஜா பிரேமரானி அவர்கள் பிரிகேடியர் விதுஷா அவர்களுக்கான ஈகைச்சுடரை ஏற்றி மலர்மாலையினையும் அணிவித்தார்.
மேஜர் இன்பநிலா (மயில்வாகனம் கன்னிகாராணி) 2000 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆனையிறவு மீட்புச் சமரின் போது வீரச்சாவடைந்தார் அவருடைய சகோதரர் மயில்வாகனம் சிறிஸ்கந்தராஜா அவர்கள் பிரிகேடியர் துர்க்கா அவர்களுக்கான ஈகைச்சுடரை ஏற்றி மலர்மாலையினையும் அணிவித்தார்.
கப்டன் சந்திரன் (தியாகராசா ஜிரோந்திரன்) 1998 காலப்பகுதியில் நடந்த ஜயசிக்குறூய் சமரின் போது மாங்குளம் சமரில் வீரச்சாவடைந்தவர் சகோதரர் திபா அவர்கள் கேணல் இளங்கீரன் அவர்களுக்கான ஈகைச்சுடரை ஏற்றி மலர்மாலையினையும் அணிவித்தார்.
துர்க்கா, விதுஷா, ஆகியோருடன் களமுனைகளில் நின்ற முன்னாள் போராளி சீத்தா அவர்கள் தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களுக்கான ஈகைச்சுடரை ஏற்றி மலர்மாலையினையும் அணிவித்தார்.
லெப் பைக்பைக் (கனகரத்தினம் சிறிகாந்தன்) 1989 ஆண்டு இந்திய இராணுவத்துடன் சாவகச்சேரியில் நடந்த நேரடி மோதலின்போது வீரச்சாவடைந்தவர்) அவரின் சகோதரன் யசோ அவர்கள் மாமனிதர் ஜோசப் பரராசசிங்கம் அவர்களுக்கான ஈகைச்சுடரை ஏற்றி மலர்மாலையினையும் அணிவித்தார்.
மாணவர் பேரவையின் ஆரம்பகால உறுப்பினரும், முன்னாள் தலைவருமான சத்தியசீலன் அவர்கள் மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களுக்கான ஈகைச்சுடரை ஏற்றி மலர்மாலையினையும் அணிவித்தார்.
தொரர்ந்து மக்கள் வரிசையாக சென்று மலர்வணக்கம் செலுத்தினர்.
இந்த நிகழ்வில் மதிப்பிற்குரிய ஆன்மீகவாதி திரு. சங்கர் (கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக ஆன்மீகத்துறையில் இருப்பவர்) அவர்களும், "ACT NOW" அமைப்பின் உதவி இயக்குனர் திரு. கிறஹம் வில்லியம் அவர்களும், நாடுகடந்த தமிழீழ அரசின் வெளிவிவகார அமைச்சரான திரு தயாபரன் அவர்களும் நினைவுரைகளை ஆற்றினர்.
இந்த நினைவு வணக்க நிகழ்வின் நிகழ்ச்சிகளாக ஈழத்துக்கவிஞர் சுப்ரமணியம், செல்வி பாரதி ஆகியோரின் கவிதைகளும் கீர்த்திகா ஸ்கந்ததேவா அவர்களின் பாட்டும், சவுத்தோல் மாணவிகள் மற்றும் கிலிங்கரன் தமிழ் கல்விக்கூட மாணவ மாணவிகளின் நடனங்களும் இடம் பெற்றன.
பல நூற்றுக்கணக்கான மக்களோடு மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்வு இரவு 10 மணிக்கு இனிதே நிறைவுபெற்றது.















0 Responses to வீரத் தளபதிகள், போராளிகள் மற்றும் நாட்டுப்பற்றாளர்களை நினைவுகூரும் நினைவுவணக்க நிகழ்வு (காணொளி, படங்கள் இணைப்பு)