ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையை, ஐக்கிய நாடுகள் சபை பொதுமக்களின் பார்வைக்கு உத்தியோகபூர்வமாக வெளியிட வேண்டும் என, பிரித்தானிய தமிழர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கை:
இலங்கைத்தீவு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு தயாரித்து, ஐ.நா செயல் பான் கி-மூனிடம் கடந்த 13ஆம் நாள் (13-04-2011) சமர்ப்பித்துள்ள அறிக்கையை நாம் வரவேற்கிறோம். 2009ஆம் ஆண்டு தமிழ் மக்கள் இனவழிப்புச் செய்யப்பட்டபோது உதிர்ந்த ஐ.நா மீதான முழு நம்பிக்கையையும் இந்த அறிக்கை மீண்டும் ஓரளவிற்கு துளிர்க்கச் செய்திருக்கின்றது. இந்த அறிக்கை ஊடகங்களில் வெளியாகியுள்ள பின்புலத்தில், பொதுமக்களின் பார்வைக்கு ஐக்கிய நாடுகள் சபை அதனை உத்தியோகபூர்வமாக வெளியிட வேண்டும் என, பிரித்தானிய தமிழர் பேரவையாகிய நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.
சிறீலங்கா ஊடகங்களில் வெளியாகியுள்ள அறிக்கையின் பிரகாரம் சிறீலங்கா படைகளும், அரசியல் தலைமையும் போர்க்குற்றம், மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை அனைத்துலக சட்டத்திற்கு புறம்பாக மேற்கொண்டிருப்பதால் அவை அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி நிற்கின்றன.
ஐ.நாவின் அறிக்கையை முற்றாக நிராகரித்துள்ள சிறீலங்கா அரசாங்கம், போரில் பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை எனக்கூறியுள்ளது. 2008ஆம் ஆண்டு கிளிநொச்சி, முல்லைத்தீவு கச்சேரிகளின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் 4 இலட்சத்து 29 ஆயிரத்து 59 பேர் வாழ்ந்திருக்கின்றனர். இவர்களில் 2 இலட்சத்து 82 ஆயிரத்து 380 பேரே சிறீலங்கா படையினரு கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் சென்றிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஒச்சா அமைப்பின் கணக்கறிக்கை தெரிவிக்கின்றது. எனவே 1 இலட்சத்து 46 ஆயிரத்து 679 பேர் கணக்கில் இல்லாது போயுள்ளனர்.
கச்சேரியின் இந்தத் தகவல் தொடர்பாக, மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு யோசப் அடிகளார், அதிவணக்கத்திற்குரிய விகரர் சூசை அடிகளார், வணக்கத்திற்குரிய சேவியர் குறூஸ் அடிகளார் ஆகியோர், சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவின் 'கற்றுக்கொண்ட பாடங்களும், நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு' முன்பாக அளித்த சாட்சியம் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த மக்கள் தொகை, சிறீலங்கா படைகளால் கைது செய்யப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்ட காணொளிகளை வெளியிட்டிருந்த பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சியின் செய்தியாளர்களால் சரி பார்க்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் 147000 பேர் கணக்கில் இல்லாது இருப்பது, இனப்படுகொலை தொடர்பாக உடனடி, சுயாதீன, அனைத்துலக விசாரணையின் அவசியத்தை உணர்த்தி நிற்கின்றன.
2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அப்போதையை சிறீலங்கா படைத்துறைப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார ஊடகச் சந்திப்பில் கருத்துரைக்கும்போது, 4 இலட்சத்து 30 ஆயிரம் மக்கள் இருந்த'பாதுகாப்பு வலயத்தில்' வெறுமனே 70000 பேர் மட்டுமே இருப்பதாகக் கூறியதை இந்த இடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிறீலங்கா படையினர் மக்கள் தொகையை வேண்டுமென்றே குறைத்துக் கூறியமைக்கு இரண்டு காரணங்கள் உள்ளன:
1) மனிதாபிமான உதவிகளை மட்டுப்படுத்துவது. இதன்மூலம் மக்கள் பட்டினியாலும், மருந்துகள் இன்றியும் உயிரிழப்பர்.
2) திட்மிட்ட படுகொலைகளை மேற்கொண்ட பின்னர், தமிழ் மக்களை இனவழிப்புச் செய்ததை மூடிமறைப்பது.
போர் காலத்தில் அனைத்துலக ஊடகங்கள் போர் நடைபெறும் தமிழர் பிரதேசங்களிற்குச் செல்வதற்கு தடை விதித்திருந்த சிறீலங்கா அரசாங்கம், தற்பொழுதும் பன்னாட்டு மனிதநேய அமைப்புக்கள், மனித உரிமை நிறுவனங்கள், மற்றும் ஊடகங்களிற்கு தடை விதித்திருப்பதன் ஊடாக உண்மையை முற்றாகக் குழிதோண்டிப் புதைக்கப் பார்க்கின்றது. உண்மை ஒருநாள் வெளிவரும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்ற போதிலும், இந்த தாமதம் 146 679 பேரின் உயிர்களைக் காப்பாற்றத் தவறிவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் அறிக்கையை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடாது, சிறீலங்கா அரசாங்கம் அந்த அறிக்கைக்கு பதிலளிக்க அவகாசம் வழங்கியிருப்பதையிட்டு, போரில் தமது உறவுகளை இழந்த தமிழ் மக்கள் மிகவும் விரக்தியடைந்துள்ளனர். மறு புறத்தில் சிங்கள மக்கள் மத்தியில் ஐ.நாவிற்கு எதிரான எழுச்சியை உருவாக்குவதற்காக சிறீலங்கா அரசாங்கம் அந்த அறிக்கையை கொழும்பின் ஊடகங்களிற்குக் கசிய விட்டிருக்கின்றது. மே நாளில் ஐ.நா அறிக்கைக்கு எதிராக மக்கள் அனைவரும் அணி திரள வேண்டும் என, சிறீலங்கா அரச அதிபர் மகஜந்த ராஜபக்ச அழைப்பு விடுத்திருக்கின்றார். இனவழிப்புச் செய்யப்பட்டு, தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மூடிமறைக்க சிங்கள மக்களை மட்டுமன்றி அந்த நாட்டின் எதிர்க்கட்சியையும் ஒன்றிணைக்கும் வகையில் இந்த அழைப்பு அமைந்திருக்கின்றது.
சிறீலங்காவின் தற்போதைய அரசியல் தலைமையும், மக்களும் 1983ஆம் ஆண்டின் ஜே.ஆர் ஜயவர்த்தன தலைமையிலான தமிழ் மக்களிற்கு எதிரான இனப்படுகொலைக்கு சிங்கள மக்களை ஏவிவிடும் ஆட்சியை மீண்டும் நினைவுபடுத்துகின்றன.
1983ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் நாள் டெய்லி ரெலிகிறாஃப் வெளியிட்டுள்ள செய்தியில், 'தமிழ் மக்களின் அபிப்பிராயம் பற்றி நான் எள்ளவும் கவலை கொள்ளவில்லை. இப்பொழுது அவர்களைப் பற்றியோ, அவர்களின் வாழ்வியல், மற்றும் கருத்து பற்றியோ சிந்திக்க நேரம் இல்லை. வடக்கில் எவ்வளவுக்கு எவ்வளவு நீங்கள் அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றீர்களோ அது தெற்கில் சிங்கள மக்களை மகிழ்ச்சிப்படுத்தும். உண்மையில் தமிழ் மக்களை நான் பட்டினி போட்டேன் என்றாது அது சிங்கள மக்களை மிகவும் மகிழ்ச்சிப்படுத்தும்.
சிங்கள மேலாதிக்க அரசியல் சூழல் மனிதாபிமானத்தை மூடிமறைக்கின்றது. தாம் அரசியலில் இருந்து சிங்கள மக்களால் தூக்கி வீசப்பட்டு விடுவோம் என்ற அச்சம் காரணமாக சிங்கள தலைமைகள் போர்க்குற்றம் பற்றிய சுயாதீன விசாரணை ஏற்படுத்த வாய்ப்பில்லை. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் தாயகத்தில் சிறீலங்கா படையினராலும், துணைப்படைக் குழுக்களாலும் தற்பொழுதும் தொடரும் படுகொலைகள், பாலியல் வன்புணர்வுகள், கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் என்பன எந்தவொரு தமிழனும் சிறீலங்கா அரசாங்கம் நீதியை வழங்கும் என நம்பவில்லை என்பதற்கு வலுவூட்டும் காரணியாகின்றன.
எனவேதான் அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், இதில் சாட்சியம் அளிப்பவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு, ஐக்கிய நாடுகள் சபையின் துணையுடன் அது இடம்பெற வேண்டும் எனவும் நாம் வலியுறுத்துகின்றோம்.
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையை, ஐக்கிய நாடுகள் சபை பொதுமக்களின் பார்வைக்கு உத்தியோகபூர்வமாக உடனடியான வெளியிட வேண்டும் என, நாம் கோரிக்கை விடுக்கின்றோம். இந்த நடவடிக்கை நீ வேண்டி நிற்கும் தமிழ் மக்களிற்கு பன்னாட்டு சமூகம் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும்.
ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு அப்பால், தமிழ் மக்களிற்கு எதிராகப் போர்க்குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிராக செயற்பட்டு, போர் காலத்தில் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களை மீறிய சிறீலங்கா படைத் தளபதிகள், அரசியல் தலைவர்களை தூதுவர்களாக ஏற்றுக்கொள்ளக்கூடாது என, ஐக்கிய நாடுகள் சபை அங்கத்துவ நாடுகளிற்கு கோரிக்கை விடுக்க வேண்டும் என தமிழ் மக்களாகிய நாம் கோரிக்கை முன்வைக்கின்றோம்.
தமிழ் மக்களிற்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்துமாறு அனைத்துலக சமூகத்தை நாம் வேண்டி நின்கின்றோம் என, பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 Responses to நிபுணர் குழு அறிக்கையை ஐ.நா வெளியிட வேண்டும்: பிரித்தானிய தமிழர் பேரவை