இலங்கையின் போர்க் குற்றங்களை வெளிப்படுத்தும் சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படத்தை பிரிட்டனில் 8 லட்சம் பேர் பார்வையிட்ட போதும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை என தெரியவந்துள்ளது.
ஆனால் ஒளிபரப்பப்பட்டவை குறித்து அறிந்துள்ளார் என்று பான் கீ மூனின் பேச்சாளர் மார்டின் நெசர்கி தெரிவித்தார்.
நிபுணர் குழு அறிக்கையை ஐ.நா. செயலாளர் நாயகம் தொடர்ந்து ஆய்வு செய்துவருகிறார். ஆய்வின் பின்னர் அறிக்கை குறித்து தேவையான பரிந்துரைகளை முன்வைப்பார் எனவும் பான் கீ மூனின் பேச்சாளர் தெரிவித்தார்.
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை ஐ.நாவில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. உறுப்பு நாடுகள் பரிந்துரைகளை முன்வைக்க முடியும்.
சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமாயின், குற்றஞ் சாட்டப்பட்ட நாடு அல்லது உறுப்பு நாடுகளின் அனுமதி அவசியம்.
குறிப்பாக ஐ.நா. பொதுச் சபை, பாதுகாப்புச் சபை அல்லது மனித உரிமை பேரவை ஆகியவற்றின் கோரிக்கையின் பேரில் விசாரணை நடத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.



0 Responses to கொலைக்களம் ஆவணப்படத்தை பான் கீ மூன் இன்னும் பார்க்கவில்லை